புதன், 19 ஆகஸ்ட், 2015

பா.ம.க. மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் ! விடுதலை சிறுத்தைகள் மனு: ஜாதிவெறி வேண்டாம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அன்பழகன், கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமையில் 50–க்கும் மேற்பட்டோர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அங்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து, அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–
வருகிற 23–ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பங்களா பகுதியில் பாண்டி மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் பகுதி சோழவந்தான் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாகும்.
இந்த பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது பா.ம.க.வினர் வட மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கி, சாதி ரீதியான அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.

அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலித் மக்களுக்கு எதிராக மேடையில் பேசி, கலவரத்தை தூண்டி தென் மாவட்டங்களில் சாதி மோதல்களை உருவாக்க வாய்ப்புள்ளது. அமைதியாக இருக்கும் தென் மாவட்டங்களில் டாக்டர் ராமதாசால் நடத்தப்படுகின்ற பா.ம.க. மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவி விடும் சூழல் உள்ளது.
இதை தடுக்கும் வகையில், ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் நுழைய டாக்டர் ராமதாசுக்கு கடந்த 2012–ல் அவர் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற உள்ள பா.ம.க. மாநாட்டுக்கு தடை விதித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோன்று பா.ம.க. மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று, மாவட்ட கோர்ட்டு முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக