ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருக்கிறார்! வலுவான ஆதாரம்?

மும்பையில், 1993ல் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் தான் வசித்து வருகிறான் என்பதற்கான வலுவான ஆதாரம், இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் கிடைத்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு:மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், மும்பையில் பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதும், குடும்பத்துடன் பாகிஸ்தான் தப்பிச் சென்று விட்டான்.அவன் அங்கிருப்பதற்கான ஆதாரங்களை அவ்வப்போது, பாகிஸ்தான் அரசிடம் தெரிவித்து, அவனை பிடித்து ஒப்படைக்குமாறு, இந்தியா விடுக்கும் வேண்டுகோள் இதுவரை ஏற்கப்படவில்லை.அவனை பிடிக்க, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பு மூலம், 'ரெட்கார்னர்' நோட்டீஸ் எனப்படும், கைது செய்ய கோரும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்யும் புதிய ஆதாரமான, அவனின் மனைவி மெஜாபீன் ஷேக்கின் பெயரிலான தொலைபேசி பில், இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் கிடைத்துள்ளது.



வீட்டு விலாசம்:

அந்த பில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அவனின் வீட்டு விலாசத்துக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டுள்ளது. அதை, இந்திய புலனாய்வு அமைப்புகள் கைப்பற்றியுள்ளன.இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணையில், தாவூத் இப்ராகிம், தன் மனைவி, குழந்தைகளுடன், கராச்சியின், கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 பங்களா; 3 பாஸ்போர்ட்:


தாவூத்துக்கு தாராளம் : பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிமுக்கு, அந்நாட்டில், ஒன்பது பங்களாக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, முன்னாள் பிரதமர், மறைந்த பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் பங்களாவுக்கு அருகில் உள்ளது. இதில், கடைசியாக வாங்கிய பங்களா, 2013ல் வாங்கப்
பட்டுள்ளது. மருத்துவமனை ஒன்றின் அருகில் உள்ள அந்த பங்களாவில் தான், தாவூத்துக்கும், அவன் உறவினர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் அவனுக்கு, பாகிஸ்தான் அரசு, மூன்று பாஸ்போர்ட்டுகள் வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி, மாறுவேடத்தில், வேறு பெயர்களில், பல நாடுகளுக்கு சென்று வருகிறான்.இந்த விவரங்களை, பாகிஸ்தானுக்கு அளிப்பதற்காக, புள்ளிவிவரமாக மத்திய அரசு தயாரித்துள்ளது.

தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருப்பதை, அந்நாட்டு அரசு, தொடர்ந்து மறுத்து வருகிறது. தற்போது, உலக நாடுகளின் முன், மறுக்க முடியாத ஆதாரம் சமர்ப்பித்துள்ளோம். தாவூத் இப்ராகிமை, இந்தியாவிடம், பாக்., ஒப்படைக்க வேண்டும்.
வெங்கையா நாயுடு,
பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,



இந்தியா தரப்பில், எத்தகைய ஆதாரம் கொடுத்தாலும், அதனால், பெரிதாக மாற்றம் ஏற்படுவதில்லை. இந்தியா, தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என கருதுகிறேன்.
சல்மான் குர்ஷித்,  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக