வியாழன், 13 ஆகஸ்ட், 2015

இருபதில் அந்தமான் – அறுபதில் சமையலறை....1981-ல் தனது 20 வயதில் கப்பல் ஏறினார் செல்வராசு.

Aberdeen Bazarசெல்வராசு, சென்னை தி. நகரிலுள்ள ஒரு கட்டுமான நிறுவன ஊழியர் குடியிருப்பில் சமையல் மாஸ்டர்.
“சீதைய தேடி கடல் தாண்டி இலங்கைக்கு போலாமா, வேண்டாமான்னு ஒரு வாரமா கரைல நின்னு பேசிகிட்டே இருக்காய்ங்க தம்பி. டக்குன்னு அடுத்த சீனு போறானுக இல்ல, ஒன்னும் நமக்கு புரிய மாட்டேங்குது” என்றார் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே.
தனது இருபதாவது வயதிலிருந்து வறுமையை விரட்டியடிக்க, வயிற்றுப் பிழைப்புக்கென யோசிக்காமல் கடல்தாண்டியவர் அவர். தொலைக்காட்சி தொடரின் இழுவை கணக்குகள் அவருக்கு புரிவதில்லை.
70, 80-களில் ராமனாதபுரம் மாவட்டம் பரமகுடி விவசாயிகள் பலர் வயிற்று பிழைப்புக்காக அந்தமான் தீவுகளுக்கு கப்பல் ஏறினர். அப்படிச் சென்ற சில தொடர்புகளை நம்பி 1981-ல் தனது 20 வயதில் கப்பல் ஏறினார் செல்வராசு.

டிஜில்பூர் எனும் சிறு தீவு, அங்கே பொதுப்பணித்துறை கட்டிட வேலைகளை எடுத்துச் செய்த அங்கிருந்த ஒரு தமிழ் ஒப்பந்தக்காரரிடம் 6 ரூபாய் தினக்கூலிக்கு வேலைக்குச் சேர்கிறார். அதே நேரத்தில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வெளியில் ஊதியம் 25 ரூபாய்.
“வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே போதல தம்பி, வேல முடிஞ்ச உடன ஒரு ஓட்டல்ல கூட மாட ஒத்தாச வேலைக்கு போனேன், அங்கனயே தங்கி, சாப்ட்டுகிட்டேன். தூங்க கூட நேரம் கெடைக்காது. மிச்சம் புடிச்சு மாசம் 500 ரூபாய்க்கு கொறயாம வீட்டுக்கு மணிஆர்டர் அனுப்புவேன்.
போர்ட் பிளேயர் – அந்தமான் தலைநகரம்
ஏழு வருசம் வேல பாத்தேன். ஒண்ணும் செட் ஆகல மறுபடியும் ஊருக்கு வந்து வெவசாயம் பாத்தேன். கல்யாணம் பண்ணிகிட்டேன், சமாளிக்க முடியல. வீட்டம்மாவ கூட்டிகிட்டு திரும்பவும் அந்தமானுக்கு போய்ட்டேன். ரெண்டு வருசத்துக்கு ஒருதடவ ஊருக்கு வந்துபோவோம். கப்பல்ல 80 ரூபா டிக்கேட்டு அப்போ. என் மொதோ ரெண்டு பசங்களும் அங்கன தான் பொறந்து வளந்தாய்ங்க, ஊருக்கு வந்த பின்னாடி ஒரு பொண்ணு பொறந்தா.”
நாங்க இருந்த தீவு போர்ட் பிளேயர்லேர்ந்து ரெண்டு நாள் கடல் பயணத்துல இருக்கு அதேன் கெழக்க நம்ம நாட்டோட கடைசி தீவு, பூரா காடும் மலையும் தான். சனம் கம்மி, பெங்காலி, உ.பி, மலையாளி, தமிழன்னு எல்லா ஸ்டேட்டும் கலந்து இருக்கும். போர்ட் பிளேயர்தான் எங்களுக்கு மெட்ராஸ் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்.
காட்டாத்துத் தண்ணில குளோரின கலந்து அரசாங்கம் குடுக்கும், அரிசி, பருப்பு, எண்ணைலேர்ந்து மளிகை சாமான், மணல், சிமெண்ட் எல்லாமும் போர்ட் பிளேயர்லேர்ந்து மழயா இருந்தாலும் புயலா இருந்தாலும் கப்பல்ல வந்துடும்.
பொழச்சு கெடக்கணுமே தம்பி….ஒரு ஹோட்டல் நடத்துனேன். கூலி வேலைக்கு போறவங்களுக்கு மாசம் பூரா 3 வேளையும் சாப்பாடு 300 ரூபாய்க்கு போட்டோம், அந்த காசு குடுக்கவே அவங்களால முடியல, அவங்களுக்கு சம்பளமும் சரியா வரல. கொஞ்ச நாளைக்கு அப்புறம் நஷ்டத்தோட கடைய நடத்த முடியல, மூடிட்டோம்.
oldmanமலைய வெட்டி, மரத்த வெட்டி சேத்த கொஞ்ச நெலத்தயும் நேவி கோட்டர்சு வருதுன்னு அரசாங்கம் புடிங்கிகிச்சு.
மிச்சமிருந்த நெலத்த வித்து மூத்த மவன் குடிச்சே அழிச்சுட்டான், சின்னவன் படிச்சுகிட்ருக்கான். ஊருல வந்து பாத்தா வெவசாயம் பண்ணுனவனெல்லாம் மெட்ராசுக்கு பொழைக்க ஓடியாந்துட்டாய்ங்க. மகளுக்கு கல்யாணம் பண்ணனும், குடியிருக்க வீடு இல்ல என்ன பண்றது? குடும்பத்த அங்கன விட்டுட்டு 400 ரூபா தெனச் சம்பளத்துக்கு, சமையல் வேலைக்கு இந்த கம்பெனில வந்து சேந்துட்டேன்.
ரெண்டு வருசத்துக்கு முன்ன கடன வாங்கி நகைய வச்சி பொண்ணு கல்யாணத்த முடிச்சேன். இன்னும் லச்ச ரூபா கடன் இருக்கு, 20 வயசுல அந்தமான்ல வாங்குன சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தாம அர வயிரும் கால் வயிறுமா தன்னந்தனியா ஓட்டுனேன், இப்போ 60 வயசிலயும் அப்டியேதான் ஒழச்சுகிட்டு இருக்கேன்.

  • எட்கர் வினவு.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக