செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

பேரவை விதி 110- ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் 577 ! நிறைவேற்றியவை....??

அறிவித்த திட்டங்களின் மொத்த செலவு 84 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகும். இதில் செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 733.60 கோடி ரூபாய்தான்!
 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கடித வடிவில் எழுதியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''சட்டப்பேரவை தொடங்கி விட்டது. இனி ஒவ்வொரு நாளும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110இன் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விடுவார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 என்ன கூறுகிறது என்றால், பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர் அறிக்கை ஒன்றை அளிக்கலாம் என்று தான் உள்ளது.

ஆனால் அந்த விதியில் உள்ள ஓர் அமைச்சர் என்பதை மாற்றி முதலமைச்சர் மட்டுமே என்று திரித்துப் பொருள்கொண்டு, கடந்த நான்காண்டு காலத்தில் எந்தத் துறை அமைச் சருக்கும் வாய்ப்பே கொடுக்காமல், முதலமைச்சர் ஒருவர் மட்டுமே தமிழகச் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அத்தனை அறிக்கைகளையும் படித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த நான்காண்டு காலத்தில் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்கள் என்னவாயின? நிறைவேறி விட்டனவா? அல்லது ஏட்டளவிலேயே நின்று போய் விட்டனவா?
2011ஆம் ஆண்டு 8-6-2011 முதல் 13-9-2011 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் 19 அறிக்கைகளைப் படித்தார். அந்த 19 அறிக்கைகளிலும் 54 அறிவிப்புகள் இருந்தன.
2012ஆம் ஆண்டு 29-3-2012 முதல் 2-11-2012 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 61 அறிக்கைகளைப் படித்தார். இந்த 61 அறிக்கைகளில் 99 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
2013ஆம் ஆண்டு 1-4-2013 முதல் 15-5-2013 அன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா 46 அறிக்கை களைப் படித்திருக்கிறார். இந்த 46 அறிக்கைகளில் 189 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
2014ஆம் ஆண்டு 14-7-2014 முதல் 12-8-2014 அன்று வரை முதலமைச்சர் 39 அறிக்கைகளைப் படித்திருக்கிறார். இந்த 39 அறிக்கைகளில் 235 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஆக மொத்தம், 110வது விதியின் கீழ் கடந்த நான்காண்டுகளில் 165 அறிக்கைகளைப் படித் திருக்கிறார். ஒவ்வொரு அறிக்கையிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்புகளை செய்திருப்பதால், 165 அறிக்கைகளிலும், மொத்தம் 577 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா செய்திருக்கிறார்.
இந்த 577 அறிவிப்புகளில் எத்தனை அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முடிந்து முழுமை பெற்றுள்ளன? எத்தனை திட்டங்கள் பாதியிலே நின்று கொண்டுள்ளன? எத்தனைத் திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாம லேயே உள்ளன? என்ன காரணத்தால்? என்பது பற்றிய விளக்கங்களை அதிமுக அரசு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது அரசின் கடமையும்கூட.
ஏனென்றால் பேரவையிலே முதல்வராக இருந்த போது, ஓ. பன்னீர்செல்வம் 2013-2014ஆம் ஆண்டு விதி 110இன் கீழ் ஜெயலலிதா 235 திட்டங்களை அறிவித்ததாகவும், அதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். நான் அப்போதே எஞ்சிய 120 திட்டங்களுக்கு அரசாணை ஏன் பிறப்பிக்கப்பட வில்லை என்றே கேட்டிருந்தேன்.
எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்படி, அதாவது முதலமைச்சர் ஜெயலலிதாவினால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட எந்தெந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் எஞ்சி நிற்கின்றன என்பதற்கான விவரத்தைத் தெரிவிக்கின்றேன்.
7-9-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், ''தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமம் வரையில் உள்ள 113 கிலோ மீட்டர் சாலைப் பகுதி 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்டு மேம்பாடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் ஜெயலலிதா.
இந்த 257 கோடி ரூபாயில் வெறும் 17.40 கோடி ரூபாய்தான் செலவு செய்யப்பட்டுள்ளதாம். மூன்றாண்டுகளுக்கும் மேலான தாமதத்திற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால் நிலம் கையகப் படுத்த வேண்டி உள்ளதாம்.
அதே நாளன்று, ''740 கோடி ரூபாய் மதிப்பில், 23 புதிய ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்ப்பாலங்கள் கட்டும் பணிகள் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்'' என்று ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த 740 கோடியில், 15-12-2014 அன்று வரை செலவு செய்யப் பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? 10 கோடி ரூபாய்தான். இந்த 23 பணிகளில், 8 திட்டங்களுக்கு நில எடுப்பு நடைபெற்று வருகிறதாம். 7 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறதாம். எஞ்சிய 8 திட்டங்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
8-9-2011 அன்று ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், ''தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 2160 கோடி ரூபாய்ச் செலவில் திருமழிசை துணைக் கோள் நகரம் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார். அறிவித்து நான்காண்டுகள் ஆகின்றன. எங்கே துணை நகரம்?
8-9-2011 அன்று அறிவித்த திட்டத்திற்கு அரசாணையே 5-3-2012 அன்றுதான் பிறப்பித்திருக்கிறார்கள். அதாவது ஆறு மாதங்களுக்குப் பிறகு! 2160 கோடி ரூபாய் அறிவித்தார்களே, எத்தனை கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள் தெரியுமா? 15-12-2014 வரை 38.77 கோடி ரூபாய்தான் செலவழித்திருக்கிறார்கள்! உண்மையா? பொய்யா?
அதே அறிவிப்பில், ''சென்னை அசோக்பில்லர் அருகில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 3.73 ஏக்கர் இடம் எவ்வித பயன்பாட்டிற்கும் உட்படாமல் இருந்து வருகிறது. சென்னை மாநகரத்தில் வீட்டுத் தேவையைக் கருத்திலே கொண்டு இந்த 3.73 ஏக்கர் நிலப்பரப்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 554 குடியிருப்புகள் கொண்ட அடுக்கு மாடிக் குடி யிருப்புகள் கட்டப்படும்'' என்று கூறினார் ஜெயலலிதா.
எத்தனை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன? எவ்வளவு கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்? ஒரு கோடி ரூபாய் கூடச் செலவழிக்கவில்லை. அறிவித்து ஆறு மாதங்கள் கழித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு, திட்டக் கருத்துரு தயாரிப்பில் உள்ளதாம்!
''சென்னை, கோயம்பேடு தெற்காசிய விளையாட்டுக் கூட்டமைப்பு கிராமத்தில், 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னடுக்கு வணிக வளாகம் ஒன்று கட்டப்படும்'' என்று 8-9-2011 அன்று ஜெயலலிதா விதி 110இன் கீழ் படித்தார். எங்கே வணிக வளாகம்?
அதே இடத்தில் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 120 குடியிருப்புகள் கூடுதலாகக் கட்டப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். அறிவித்து பல மாதங்களுக்குப் பிறகு 5-3-2012இல் அரசாணை பிறப்பித்ததோடு சரி, நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி, பணி ஒப்படைத்து இன்னும் குடியிருப்புகள் கட்டப்படவில்லை.
''தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் தற்போது காலியாக உள்ள இடத்தில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில், பசுமைத் திட்ட அம்சங்களுடன், 2 லட்சம் சதுர அடிப் பரப்பளவில், 17 மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும்'' என்று 8-9-2011 அன்று ஜெயலலிதா அறிவித்தார். அலுவலக வளாகமும் வரவில்லை. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. அறிவிப்போடு சரி!
2011ஆம் ஆண்டு 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தத் திட்டங்களுக்கான மொத்த மதிப்பீடு 5423 கோடி ரூபாய். இதில் செலவிடப்பட்ட தொகை 970 கோடி ரூபாய்தான்! அதாவது 17.89 சதவீதம்தான் என்றால், அந்த அளவுக்குத்தான் திட்டங்கள் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன.
2012ஆம் ஆண்டு 29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த நீண்ட அறிக்கையில் ஒரு திட்டம்! ''660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமை யிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்'' - 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் மிகப் பெரிய ஆரவாரத் தோடு செய்த அறிவிப்பு இது.
அறிவிப்பு செய்து மூன்றரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவர் கூறியவாறே 2015ஆம் ஆண்டு இறுதியும் வந்து விட்டது. 3,960 கோடி ரூபாய் என்று அறிவித்ததற்கு மாறாக, 122 கோடி ரூபாய்தான் இந்தத் திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி தொடங்கி விட்டதா? இந்தத் திட்டத்தின் 15-12-2014 நிலை என்ன தெரியுமா?
இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் 2017-2018ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதுதான்! எப்படி அறிவிப்பு? எவ்வளவு வேகமான செயல்பாடு!
மின்வெட்டு தொடர்ந்து மாநிலத்தை வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மின் விரிவாக்கத் திட்டத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், அதன் உள்நோக்க மும் புரிகிறது அல்லவா?
7-5-2012 அன்று 110வது விதியின் கீழ் ஜெயலலிதா, காவேரி டெல்டா பகுதியின் வடிகால் வசதிகளை மேம்படுத்துவதற்காக 1,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அதன் மூலம் சுமார் நான்கரை லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்றெல்லாம் பேரவையில் விஸ்தாரமாகத் தெரிவித்தார். என்ன ஆயிற்று?
வடிகால் வசதிகளை மேம்படுத்தும் பணியில் என்ன நிலை? ஆலோசனை வழங்குவதற்கான வல்லுநர்களைத் தேர்வு செய்யும் முதல் கட்டப் பணி தான் தற்சமயம் நடைபெற்று வருகிறதாம், விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். விவசாயிகளுக்கான அறிவிப்புக்கே காட்டப்படும் வேகம் அவ்வளவுதான்!
11-5-2012 அன்று ஓர் அறிவிப்பு! ''பாரம்பரியம் மிக்க பழைய நீதிமன்றக் கட்டடங்கள் தொன்மை மாறாமல் புதுப் பொலிவுடன் விளங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சென்னை நகரில் இயங்கி வரும் பழமை வாய்ந்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், சைதாப்பேட்டை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றங்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றம் ஆகிய கட்டடங்களுக்கு 22 கோடி ரூபாய்ச் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா அறிக்கை பேரவையில் படித்தார்.
இப்போது என்ன கூறு கிறார்கள்? மேற்காணும் நீதிமன்றங்களுக்கு மாற்று இடம் கிடைத்த பின்னரே புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படும் என்றால் அறிவிப்பதற்கு முன்பே இந்த யோசனை வரவில்லையா? தற்போது அந்த தொகையை வேறு நீதிமன்றங்களுக்குச் செலவு செய்வதற்காக 25-11-2014 அன்றுதான் அரசாணை பிறப்பித்திருக்கிறார்கள்.
அதே 11-5-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா செய்த மற்றொரு பெரிய அறிவிப்பு கெயில் நிறுவனத்துடன் 4,000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு செய்து கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதாகும். 3 ஆண்டுகள் ஓடி விட்டன. தற்போது என்ன நிலை? இத்திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதுதான்!
அதே நாளில் எரிவாயு மூலம் 500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தித் திட்டம் 2,000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என்றும், அதே திட்டம் பிறகு மேலும் விரிவுபடுத்தப்பட்டு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்படும் என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். இந்தத் திட்டம் தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மின் உற்பத்திக்கான முக்கியமான இத்திட்டத்தில், உச்ச நீதிமன்ற வழக்கை விரைவுபடுத்தித் தீர்ப்பைப் பெறுவதற்கு என்ன நடவடிக்கை?
2012ஆம் ஆண்டில் மட்டும் செய்யப்பட்ட அறிவிப்பு களிலே கூறப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பீடு 18,188.81 கோடி ரூபாய். இதற்காக ஒதுக்கீடு செய்யப் பட்ட தொகை 10,025.49 கோடி ரூபாய். விடுவிக்கப் பட்ட தொகை 5,083.33 கோடி ரூபாய். ஆனால் செலவு செய்யப்பட்ட தொகை 5,004.48 கோடி ரூபாய் மட்டுமே!
இந்தத் தொகையிலும் 4,294.16 கோடி ரூபாய் மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படுகிற தொகையாகும். இதையும் கழித்து விட்டுப் பார்த்தால் 2012ஆம் ஆண்டு 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 710.32 கோடி ரூபாய்தான்! எதுவோ தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று என்று கதை உண்டே; அது இதுதானோ?
2013ஆம் ஆண்டினை எடுத்துக் கொண்டால், 1-4-2013 அன்று 215 கிலோ மீட்டர் நீளமுடைய 67 அரசு சாலைகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார். 15-12-2014 அன்று என்ன நிலை தெரியுமா? 2015-16இல் தேசிய ஊரக வளர்ச்சி வங்கியின் நிதி உதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்!
அதே நாளில் மற்றொரு அறிவிப்பு! 948.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 11 மாவட்டங்களில் 18 ரெயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு செய்தார். ரயில்வே துறை யின் ஒப்புதல் எதிர்நோக்கப்படுகிறது என்பதுதான் இந்த அறிவிப்பின் கதி.
அதே நாளில் மற்றொரு அறிவிப்பு! மதுரை விமான நிலையத்திற்கு அருகில், ஒருங்கிணைந்த துணைக் கோள் நகரம் ஒன்று உருவாக்கப்படும். அங்கே 19,500 மனைகள் உருவாக்கப்படும். இதில் 14,300 மனைகள் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி, தெரு விளக்குகள், மழை நீர் சேகரிப்புத் திட்டம் மற்றும் பூங்காக்கள் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப் படும். இங்கு குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார வசதி, தீயணைப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் இங்கே உருவாக்கப்படும் என்றெல்லாம் பலத்த ஆரவாரத்திற்கிடையே ஜெயலலிதா பேரவையில் அறிவித்தார்.
4-4-2013ல் அறிவிக் கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஆறு மாதங்கள் கழித்து, 21-10-2013 அன்று அரசாணையும் வெளி யிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இப்போது என்ன நிலைமை? நாம் அறியோம் பராபரமே என்பதுதான்!
அதுபோலவே சோழிங்கநல்லூர் பகுதியில் 612 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,500 பன்னடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்று 4-4-2013 அன்று 110வது விதியின் கீழ் ஜெயலலிதா படித்தார்.
15-12-2014 அன்றைய தகவல்படி பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாம். மொத்தம் 612 கோடி ரூபாய்க்கான திட்டத்திற்கு அதுவரை செலவு செய்யப்பட்ட தொகை வெறும் 15 லட்சம் ரூபாய்தான்! 20 மாதங்களாக நிலத்தை அளந்து எல்லைக் கற்கள் நடும் வேலை மட்டும்தான் முடிந்திருக்கும் போலிருக்கிறது!
சென்னை, காஞ்சிபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருச்சி ஆகிய 9 மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தில் 1,630 தனி வீடுகள் மற்றும் 2,792 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் சுமார் 918 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று பேரவையில் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்தார். இந்த 918 கோடி ரூபாய் திட்டத்திற்கு 56.29 கோடி ரூபாய் தான் 15-12-2014 வரை செலவிடப்பட்டுள்ளது.
10-4-2013 அன்று படித்த அறிவிப்பு; 797 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடப்பாண்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 544.39 கோடி ரூபாய். ஆனால் விடுவிக்கப்பட்டு செலவிடப்பட்டது 91.85 கோடி ரூபாய். குடிநீர்த் திட்டப் பணிகளே அதோ கதிதான்!
திருநெல்வேலி மாநகராட்சி, ஆரணி, திருவத்திபுரம் மற்றும் பெரியகுளம் நகராட்சிகளில் 227.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று 10-4-2013 அன்று ஜெயலலிதா படித்தார். தற்போது தான் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் காத்திருக் கிறார்கள். தாகத்திற்குத் தண்ணீர் வழங்காமல் படுதோல்வி அடைந்து விட்டது அதிமுக அரசு!
25-4-2013 அன்று மிகப் பெரிய அறிவிப்புகள். ''நீலகிரி மாவட்டத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நிலை? மின் உற்பத்தித் திட்டங்களில் எவ்வளவு அக்கறையின்மை, அலட்சியம்? இத்திட்டத் திற்கான அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போதுதான் ஆய்வில் உள்ளதாம். ஆய்வு முடிவதற்குள் ஆட்சிக் காலம் முடிந்து விடும்!
மின் விநியோகம் சீராக இருப்பதற்காக ஜப்பானிய நிதி உதவியுடன் 3,572 கோடி ரூபாயில் ஒரு திட்டம் அறிவித்தார்கள். தற்போதுதான் ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு வருகிறதாம். 8,000 கோடி ரூபாயில் 56 துணை மின் நிலையங்களை அமைக்கப் போவதாக அறிவித்தார்கள். 763 கோடி ரூபாய்தான் செலவு செய்யப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பீடு 37,720.69 கோடி ரூபாய். இதில் செலவு செய்யப்பட்ட தொகை 6,488.76 கோடி ரூபாய். அதாவது 17.20 சதவிகிதம்தான்.
2014ஆம் ஆண்டினை எடுத்துக் கொண்டால், அரசு அச்சகத்திற்கு புதிய கட்டடம் 21.59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்பட் டுள்ளதாம்.
குடிசை மாற்று வாரியத்தால் பத்தாயிரம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் 825 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் போவதாக அறிவித்தார்கள். 15-12-2014 அன்று என்ன நிலை என்றால், அரசாணை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம். நொச்சிக் குப்பத்தில் 534 குடியிருப்புகளை 48 கோடி ரூபாய் செலவில் கட்டப் போவதாகச் சொன்னார்கள். அரசாணை வெளியிடுவது பரிசீலனையிலே உள்ளதாம். ஒருவேளை அரசாணை வெளியிடக் காகிதத்தைத் தேடிக் கொண்டிருப்பார்களோ?
கோயம்பேட்டில் அடுக்கு மாடி அலுவலகக் கட்டடம் 63.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் போவதாகச் சொன்னார்கள். இதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதாம்.
செங்கல்பட்டு அருகில் மருத்துவப் பூங்கா 130 கோடியில் அமைக்கப் போவதாகப் படித்தார்கள். விரிவான திட்ட அறிக்கையை அனுப்பும்படி கோரப்பட்டுள்ளதாம். 24-7-2014 அன்று ராமநாதபுரம் மற்றும் திருவாடானை வட்டங்களில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் சுமார் 6,525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டத்திற்கான நில எடுப்புப் பணிகள் 2016ஆம் ஆண்டு இறுதியில்தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். அதே அறிக்கையில் வாலிநோக்கத்தில் 1500 கோடி ரூபாய் செலவில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் திட்டம் அமைக்கப்படும் என்றார்கள். இதிலும் எதுவும் நடைபெறவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 920 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மின்னணுவியல் உற்பத்தித் திட்டம் அமைக்கப்படும் என்றார்கள். இதற்கான ஒப்புதல் மத்திய, மாநில அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறதாம்.
30-7-2014 அன்று, ''குழந்தைகளின் சுகாதாரம் கருதி கழிவறைகளை சுத்தமாகப் பராமரிப்பதும் மிகவும் இன்றியமையாத பணி என்பதால், முதன் முறையாகக் கழிவறைகளைப் பராமரிப்பதற்காக 160 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 56 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் பயனடைவார்கள்'' என்று ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான கோப்பு 25-11-2014 அன்று நிதித் துறைக்கு அனுப்பப்பட்டதாம். திரும்பி வந்து விட்டதா? அது என்ன, கனக விசயர் கல் சுமந்து வந்ததைப் போன்ற மிகக் கடினமான காரியமா?
31-7-2014 அன்று சென்னை மாநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 338 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு துணை மின் நிலையங்களும், கமுதியில் 400 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகரில் துணை மின் நிலையம் ஒன்று 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்தார்.
15-12-2014 தேதிய விவரப்படி, சிலவற்றுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாம். மேலும் சிலவற்றுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட உள்ளனவாம்.
31-7-2014 அன்று ஜெயலலிதா 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், ''இந்த நிதியாண்டில் 28,000 மின் விநியோக மாற்றிகள் 660 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும்'' என்று அறிவித்தார். 15-12-2014 அன்றைய நிலவரப்படி, வரைவு கொள்முதல் ஆணைகள் ஒப்புக் கொள்ளப்பட்ட பின் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட உள்ளதாம். அதே நாளில் கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு தொழில் நுட்பக் கல்லூரிகள் 24 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் அதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக 15-12-2014ல் கூறுகிறார்கள்.
17 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்றும், 17 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் நான்கு இடங்களில் உள்ள அரசு மீன் குஞ்சு வளர்ப்புப் பண்ணைகள் மேம்படுத்தப்படும் என்றும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 46 கோடியே 50 லட்சம் ரூபாய்ச் செலவில் கால்நடைத் தீவனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 4-8-2014 அன்று ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால், 15-12-2014 தகவல்படி இதற்கான ஆணை வேண்டி முதலமைச்சர் அவர்களுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அது என்னவானது என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும். அதே நாளில் பொதுப்பணித் துறை சார்பில் 670 கோடி ரூபாய்ச் செலவில் வேளாண் உற்பத்திக்கான திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாகக் கூறினார்கள். அதில் மொத்தம் 10 அறிவிப்புகளில், 86 கோடி ரூபாய்க்கான 3 அறிவிப்புகளுக்கு மட்டும் மதிப்பீடுகள் தயாரிக்கப் பட்டு நிதித் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. நிதித் துறை ஒப்புதல் அளித்து விட்டதா என்பதை அரசுதான் விளக்க வேண்டும். இதர 7 அறிவிப்புகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போதுதான் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
7-8-2014 அன்று இரண்டு வணிக வரி அலுவலகங்கள் 60 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படும் என்ற அறிவிப்பு படிக்கப்பட்டது. அதே நாளில், 120 கோடி ரூபாய்ச் செலவில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி ஒன்று ஓசூரில் நிறுவப்படும் என்றார்கள். 25 கோடி ரூபாய்ச் செலவில் பத்து சார்பதிவாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய 5 ஒருங்கிணைந்த பதிவுத் துறை வளாகங்கள் மற்றும் தனித்தனியாக 25 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்றெல்லாம் அறிவித் தார்கள். இவை அரசின் துரித நடவடிக்கையில் உள்ளதாகவும், விரைவில் ஆணைகள் பிறப்பிக்கப் படும் என்று கூறப்பட்டது. ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா என்ன? ''ஆணையிட்டுள்ளேன், ஆணையிட்டுள்ளேன்'' என்று அடிக்கடி கூறும் முதலமைச்சர் தான் பதில் கூற வேண்டும்.
113 கோடியே 26 லட்ச ரூபாய்ச் செலவில் ''அம்மா பண்ணை மகளிர் திறன் மேம்பாட்டுத் திட்டம்'' செயல்படுத்தப்படும் என்று அறிக்கை படித்தார்கள். உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறதே தவிர, என்ன நடவடிக்கை என்று தெரியவில்லை.
2014ஆம் ஆண்டில் மட்டும் 23 ஆயிரத்து 42 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் செலவு செய்யப்பட்டது என்னவோ 271.92 கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்குத்தான். அதாவது 1.18 சதவிகிதம்தான்.
ஒட்டுமொத்தமாக கடந்த நான்காண்டுகளை எடுத்துக் கொண்டால், முதல் அமைச்சர் 110-வது விதியின் கீழ் படித்த அறிவிப்புகளுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 84 ஆயிரத்து 374 கோடி ரூபாயாகும். இதில் செலவு செய்யப்பட்டதோ 12 ஆயிரத்து 733.60 கோடி ரூபாய்தான். 12.09 சதவிகிதம் தான்! 110வது விதியின் கீழ் முதலமைச்சர் சொன்னதோ, கடல் அளவு; செய்ததோ, கை அளவுதான்!

இதுதான் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கைகளின் கதி! இதையெல்லாம் தமிழ் மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் தலை விதி'' என்று கருணாநிதி கூறியுள்ளா   tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக