செவ்வாய், 7 ஜூலை, 2015

மோடி வடிவமைத்த Yoga day? ஜக்கி எப்படி பயன்படுத்தினார்? ஜாலிலோ ஜிம்கானா?

யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டி யிருக்கிறார்கள் 
யோகா தினத்தை ஐ.நா அங்கீகரித்த மாதத்தில் பல்வேறு தினங்களும் உள்ளன, ரசிய மொழி தினம் அவற்றில் ஒன்று. ஒரு மாதத்தில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட தினங்கள் இப்படி ஐ.நா-வால் ‘கொண்டாடப்’ படுகின்றன. அந்தந்த நாடுகளைச் சேர்ந்தோர் இதை உலகமே கொண்டாடுவதாக பீற்றுவது விளம்பரச் செலவைப் பொறுத்தது. கூடுதலாக ஸ்வயம் சேவக அம்பிகள், ‘இந்த தினம்தான் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவார் செத்துப்போன நாள், இதையே கொண்டாடுமாறு உலகத்தை மாற்றிவிட்டார் மோடி’ என்று பெருமையடிக்கிறார்கள். செத்ததுக்கு கொண்டாட்டம் என்றால் நாமும் கூட கொண்டாடலாம்.
செல்ஃபி புகழ் மோடி தனது போட்டோ மற்றும் செல்ஃபிக்கள் இணையத்தில் கண்டபடி கிண்டலடிக்கப்படுவதால், இம்முறை பல்லாயிரம் பேரைக் கூட்டி வைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்திருக்கிறார்.
இந்த நேரத்தில் யோகா வியாபாரத்தின் ஒரிஜினல் முதலாளிகளான ஜக்கி, ரவிசங்கர், ராம்தேவ் உள்ளிட்ட கார்ப்பரேட் குருக்கள் தமது வழக்கமான முறுக்கும் எள்ளுருண்டயும் விற்று கல்லா கட்டியிருக்கிறார்கள்.
ஜக்கி யோகா தினம் - சென்னைதன் ஜிப்பா பாக்கெட்டில் மட்டுமே இருக்கும் ஒரிஜினல் அக்மார்க் யோகாவை தன் வாழ்நாளுக்குள் விற்று தீர்த்துவிடும் லட்சியத்தைக் கொண்ட, யோக உலகின் ஸ்டீவ் ஜாப்ஸான தொழிலதிபர் ஜக்கி இந்த அளப்பரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்தினார்?
சரசர-வென கார்பரேட் கம்பெனிகளிடமும், இந்திய அரசிடமும் ஒப்பந்தங்களை போட்டார்; நிகழ்வுகளுக்கு திரைக்கதை எழுதினார்; வெங்கய்ய நாயுடுவை தொலைபேசியில் அழைத்தார்; மேட்டுக்குடி தன்னார்வலர்களை சேவையாற்ற தயார் செய்தார்.
தொலைக்காட்சி விருது வழங்கும் விழாக்களுக்கு சற்றும் குறைவில்லாமல் ஜூன் 21-ல் நந்தனத்தில் நடந்தேறியது உலக யோகா தினம்;  சென்னை வர்த்தக மையத்தில் காலம் காலமாக நடந்து வரும் வர்த்தகக் கண்காட்சிகளை தோற்கடிக்கும் வண்ணம் நிகழ்ந்தேறியது.
ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கி வழிபாட்டு மரபைச் சேர்ந்த சேர்ந்த மோனலிசா புன்னகைக்காரர்கள்
35,000 பேர் கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்புடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் கவுண்ட் டவுன் போல பரபரப்பை உண்டாக்கினார்கள், ஈஷா வலைத்தளத்தில்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 21-ம் தேதி விடியற்காலையில் இருந்தே கார்களிலும், இருசக்கர வாகனங்களிலும் ஜக்கி வழிபாட்டு மரபைச் சேர்ந்த சேர்ந்த மோனலிசா புன்னகைக்காரர்கள் சேகரமாகத் தொடங்கினார்கள்.
கும்மிருட்டில் நின்றுகொண்டு வெள்ளை உடை அணிந்த ‘யோகிகள்’, நாலு வருடம் நம் பக்கத்து வீட்டில் குடியிருந்தவரைப்போல சிரித்துக்கொண்டே “நமஸ்காரம்.. நமஸ்காரம்…” என தமிழ் நாட்டில் செத்தொழிந்து போன வார்த்தைக்கு புதுத்துணி அணிவித்து பன்னீர் தெளித்தனர். தூக்கக் கலக்கத்தில் ஒய்.எம்.சி.யே வுக்கு பதிலாக கே.எம்.சி. மனநல காப்பகத்துக்கு வந்து விட்டதைப் போன்ற குழப்பம் தெளிய சில நிமிடங்கள் பிடித்தது நமக்கு.
இந்த அழுக்கே ஏறாத வெள்ளை ஜிப்பா தொண்டர்கள் கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என தமிழகத்தின் பல்வேறு நகரகங்ளிலிருந்து வந்திருந்தனர். கோலம் போடுவது, தோரணம் கட்டுவது, தார் ரோட்டில் சாணி கரைத்து தெளிப்பது, பேனர் கட்டுவது, தார்ப்பாய் விரிப்பது, தார்ப்பாயில் விழுந்த பனியை துடைத்து எடுப்பது, சி.டி விற்பது, சுத்தம் செய்வது என சுற்று வேலைகளை செய்தனர். ஆனாலும் பாருங்கள் அந்த வெள்ளுடையில் ஒரு அழுக்கு பட வேண்டுமே, சான்ஸே இல்லை.
ஜக்கி யோகா தினம் - சென்னை
மேடையின் இரு பக்கமும் பெரிய திரைகள், படப்பிடிப்பு கிரேன், ஒலி ஒளி உபகரணங்கள், ஒலிபெருக்கிகள், கச்சேரிக்கு தனிமேடை
மேடையின் இரு பக்கமும் பெரிய திரைகள், படப்பிடிப்பு கிரேன், ஒலி ஒளி உபகரணங்கள், ஒலிபெருக்கிகள், கச்சேரிக்கு தனிமேடை, மேடையில் ஜக்கிக்கு தனியாக ஏ.சி எந்திரம். மேடையின் முன்பு வி.ஐ.பி-களின் ஸ்பெஷல் பத்மாசனத்துக்கு (வேற ஒன்னுமில்லீங் உட்கார) பஞ்சு மெத்தை. மற்ற சாதாரண பொது சனத்துக்கு வி.ஐ.பி-களிடமிருந்து 20 அடி இடைவெளி விட்டு பனி நிரம்பிய தார்ப்பாய்.
அந்த கால்பந்து மைதானம் ஒரு மலிவான தொலைக்காட்சி விழாவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இருந்தது. மேடைக்குப் பின்னால் ஜக்கி ஓய்வெடுக்க கூடாரம் அடிக்கப்பட்டு ரெடிமேட் காவி பஞ்சகச்சம் அணிந்த மொட்டை துறவி கோஷ்டி பணிவிடை செய்ய, ஒரு ராஜாவைப் போல ஜக்கி தனது தங்குமிடத்தை அமைத்துக் கொண்டிருந்தார். வெளியூருக்கு வந்தே இத்தனை அதகளம் எனில் தன் கோட்டைக்குள் எப்படி இருப்பார் என சொல்லத் தேவை இல்லை.
ஐந்து மணி கும்மிருட்டிலும் உலக யோகா தின விளம்பர அட்டைகளை தலையில் கட்டியபடி இரண்டு பெண் தொண்டர்கள் அன்றைக்குச் சொல்லித்தரப்போகும் யோகா சி.டி.யை ஒவ்வொரு வரிசைக்கு முன்பும் நின்று “ஒன்லி டிவண்டி ருபீஸ்` என கூவிக் கூவி விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அந்த கருமத்தை கூட காசு வாங்கிக் கொண்டுதான் விற்க வேண்டுமென்றால் இந்த உலகில் எதுவுமே தப்பு இல்லை.
ஜக்கி யோகா தினம் - சென்னை
“ஆறு மணின்னா ஆறு மணிக்கு டான்னு வந்துடுவாரு என வெற்றிச் சிரிப்பு”
ஐந்தரை  மணியிலிருந்து ஜக்கியின் நிரந்தர வாடிக்கையாளர்களான உயர் நடுத்தர வர்க்கத்தின் காதுகளுக்கு ஃபில்ட்டர் காஃபி ஊற்ற சுதா ரகுநாதன் ஆலாபனை போட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வரத்தொடங்கிய நேரத்தில் ஜக்கி, வெங்கய்ய நாயுடுவுடன் மேடையின் கீழ் வந்தமர்ந்தார். எங்கள் பின்னால் இருந்த வெள்ளை ஜிப்பாக்காரர் கூட்டி வந்திருந்த புதிய நபரிடம், “ஆறு மணின்னா ஆறு மணிக்கு டான்னு வந்துடுவாரு” என வெற்றிச் சிரிப்பை உதிர்த்தார்.
சென்னை வெயில் ஆறரை மணிக்கே லேசாக நம்மை சுரண்டிப் பார்க்க ஜக்கியோ ஊட்டி குளிரில் இருப்பது போல வசந்த மாளிகை சால்வை ஒன்றை மேலே போர்த்திக் கொண்டு கூட்டத்தை நோக்கி வந்தார். வெள்ளை ஜிப்பா பாம்பு மோதிரக்காரர்கள் அனைவரும் பரவச நிலைக்கே சென்று கைகளைக் கூப்பி, கண்ணீர் மல்க, ஜக்கிக்கு “நமஷ்காரம்” போட்டனர். திடீரென பால் தினகரன் கூட்டத்தைப் போல ஏதேனும் பெந்தகோஸ்தே சபைக்கு மாறி வந்து விட்டோமா என சந்தேகத்தை கிளப்பியது.
வெங்கய்ய நாயுடுவை வைத்து குத்து விளக்கேற்றி (பின்னணியில் உடுக்கை ஒலியில் அதற்கொரு தீம் சாங்) ஜனகணமன இசைக்கப்பட்டு நிகழ்ச்சியை துவக்கி பின், மேடையில் ஏறி ஒரு சமஸ்கிருத பாடலைப் பாடினார் ஜக்கி. என்ன அர்த்தம் என யாருக்கும் புரியவில்லை. இருந்தாலும் எல்லா வெள்ளை ஜிப்பாக்களும் பாடலின் ரிதத்துக்கு ஏற்ப தலையை ஆட்டின.
ஜக்கி யோகா தினம் - சென்னை
‘இன்னைக்கு ஹார்லிக்ஸ் குடிச்சீங்களா?’
முதலில் மேட்டுக்குடி கனவான்களுக்கு ஆங்கிலத்தில் ஆவியை எழுப்பினார் ஜக்கி.
“யோகா ஒரு அறிவியல் கருவி. அதன் மூலம் உடல் மற்றும் மனதின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.” அதனால்தான் தனது கோர்ஸ்க்கு “இன்னர் எஞ்சினியரிங்” என பெயர் வைத்ததாக கொள்கை விளக்கம் அளித்தார். அது அப்படியே டெலி பிராண்டின் வெங்காயம் வெட்டும் கருவியின் செய்முறை விளக்கத்தை ஒத்திருந்தது.
நாட்டின் சுகாதாரத்துக்கு பல  கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் 40 சதவீதம் பேர் சர்க்கரை வியாதிக்காரர்களாகி விடுவார்கள் எனவும், இந்தியாவில்தான் உலகிலேயே ஊடச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருப்பதாகவும் ‘இன்னைக்கு ஹார்லிக்ஸ் குடிச்சீங்களா?’ பாணியில் முழங்கினார் ஜக்கி. அவரின் மண்டைக்குப் பின்னால் ஈஷா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடேட் என்ற ஜக்கியின் சத்துமாவு மற்றும் சிறுதானிய கடையின் லோகோ ஒளிவட்டம் போல காட்சியளித்தது.
ஜக்கி விற்கும் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வக்குள்ள வர்க்கம் உண்மையிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கொண்டதல்ல, அதிக உடல் பருமனால் காரணமாக அவதியுறும் குழந்தைகளைக் கொண்ட வர்க்கம்.
ஜக்கி யோகா தினம் - சென்னை
நாங்கல்லாம் அந்த காலத்துல ஆர்.எஸ்.எஸ்ல் யோகா பண்ணுனதாலதான் இன்னைக்கு ஆகாய மார்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் ஓடியாட முடிவதாக வெங்கய்ய நாயுடு வாக்குமூலம் அளித்தார்.
விழாவைச் சிறப்பிக்க வந்த வெங்கய்யநாயுடு அடுத்து மேடை ஏறினார். என்னதான் ஜக்கி அண்ட் கோ நமஷ்க்காரம் போட்டு சமஸ்கிருத படம் காண்பித்தாலும் டிஸ்கவரிச் சேனலே தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கல்லா கட்டும் வியாபார உலக நியதியின் படி “பெரியோர்களே, தாய்மார்களே வணக்கம்” என தமிழில் பேசத் துவங்கினார் வெங்கய்ய நாயுடு. இது அரசு விழாவாக இல்லாத போதும் ஜக்கியைப் போன்ற பெரிய்ய குருவின் வேண்டுகோளை ஏற்று வந்திருப்பதாகவும்,  நாங்கல்லாம் அந்த காலத்துல ஆர்.எஸ்.எஸ்ல் யோகா பண்ணுனதாலதான் இன்னைக்கு ஆகாய மார்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் ஓடியாட முடிவதாகவும் வாக்குமூலம் அளித்தார். “யோகா எல்லா மதத்துக்கும், மொழிக்கும், இனத்துக்கும், பொதுவானது. ஆனால், சிலர் ஃபார்வேர்டு, பேக்வேர்டு எனப்பேசிப் பேசி  சமூகத்தை ஆக்வேர்டாக (சங்கடமானதாக) மாற்றி வைத்திருப்பதாக” சொல்லி டி.ராஜேந்திரை முந்திக் காட்டினார்.
எல்.பி.ஜி – உலகமயமாக்கம் (லிபரலைசேஷன்-தாராளமயம், பிரைவடைசேஷன்-தனியார்மயம், குளோபலைசேஷன்-உலகமயம்) சமூகத்தை வேகமாக முன்னேற்றி இருக்கிறது, இருப்பினும் சில தீமைகளை செய்திருக்கிறது! அது என்ன தீமை எனில் மக்களின்  வாழ்க்கை முறை உடல் உழைப்பில்லாத அளவு எளிமையாகி பல்வேறு மன – உடல் பிரச்சனைகள் ஏற்படுகிறதாம்.
அடேயப்பா, இந்த உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறையால் தான் இந்த ஆண்டு வெங்கய்ய நாயுடுவின் சொந்த ஆந்திராவில் 1400 பேருக்கு மேல் (கோடை வெயிலில்) செத்துப் போயிருக்கிறார்கள்!
ஜக்கி யோகா தினம் - சென்னை
இரண்டு அவார்டுகளுக்கு இடையே குத்துப்பாட்டு எவ்வளவு அவசியம் என்பதை டி.வி.காரர்களை விட நன்கு அறிவார் ஜக்கி
இரண்டு அவார்டுகளுக்கு இடையே குத்துப்பாட்டு எவ்வளவு அவசியம் என்பதை டி.வி.காரர்களை விட நன்கு அறிவார் ஜக்கி. எனவே பேச்சுக்கும், யோகாவுக்கும் இடையே உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு பாடலை இசைத்து பாடினார்கள். அது ஜக்கி மதத்தின் பிரபலமான குடும்பப் பாட்டாம். ஆனந்த அலை என ஏதோ சில வரிகளைப்பாடி அந்தப் பாட்டிற்கு ஆப்பிரிக்கக் கருவிகளை ஒத்த தோல் கருவிகளை வாசித்து பாதி பாட்டில் ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா, தந்தானானே தந்தானானே என கலந்துகட்டி அடித்திருந்தார்கள். ஆனால் அது உழைப்பவரின் வேர்வையில் விளைந்த பாடலைப் போலல்லாமல் திண்ணை வாழ் தொந்திகளில் வழியும் வியர்வைக்கான பாடலாக மிரட்டியது. அதைக் கேட்டு பாம்பு மோதிரம் போட்ட ஜக்கி சிஷ்யகோடிகள் ஆர்ப்பரித்தார்கள்.
பின்னர் ஜக்கி, தமிழ் நடுத்தரவர்க்கத்துக்காக தமிழில் (அது தமிழா என்ன?) கொஞ்ச நேரம் பேசினார். மனிதனின் சக்தி எல்லாம் எலும்பு மூட்டுக்களில்தான் தேங்கியுள்ளதாம். அதை இயக்காமல் விட்டால் “எஞ்சின் ஆஃப்” ஆகிவிடுமாம். இந்த அரை போதை கூட்டத்திடம் ஜக்கி அறிவியல் எனச்சொல்லி என்ன வேண்டுமானாலும் பேசலாம். இவர்களெல்லாம் சிந்திப்பதை நிறுத்தி ஆண்டுகள் பல ஆகியிருக்கும் போல. அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜக்கி சொல்லித் தரப்போவது யோகா இல்லையாம் “உப யோகா”வாம், அதாவது யோகாவை கற்றுக் கொள்வதற்கு முதல் படியாம்.
ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கியின் சிஷ்ய கேடிகள் சிடி போட்டு விற்பனை செய்த அந்த உப யோகா என்ன என தெரிந்து கொண்டால் கொலைவெறியாகி விடுவீர்கள்.
யோகாவின் நன்மை என்ன? “நாளைக்கு வரப்போகும் எல்லா நெருக்கடிகளிலும், பொருளாதார நெருக்கடி உட்பட சிக்கிச் சீரழிந்து தெருவுக்கு வரும் போது யாரும் குடி, போதை மருந்து எனப் போய் விடாமல் இருக்கவாம்!!” ஏனெனில் யோகாவின் இந்தச் சுவை உங்களுக்கு தெரியுமாதலால் வேறு எந்த வழிக்கும் போகாமல், போராட்டம் நடத்தாமல், ஜக்கியின் ஆன்மீக போதைக்கு அடிபணிந்து விடலாம்.
இந்த உப யோகா அல்லது உலக யோகா தின சிறப்புப் பயிற்சி என்பது இனிப்பு கடைகளில் லட்டுவுக்கு கிடைக்கும் கொசுறு பூந்தி. சாஃப்ட்வேர் மொழியில் சொன்னால் ட்ரையல் வெர்ஷன். லட்டு வேண்டுமானாலும், ஒரிஜினல் சாஃப்ட்வேர் வேண்டுமானாலும் காசு, டப்பு, பைசா, மணி என எல்லா மொழியிலும் யோகா பேக்கேஜ்களுக்கு நீங்கள் பணத்தைக் கட்டியே ஆக வேண்டும். ஜக்கியின் ஆனந்த அலை பாடலின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால் நெத்திலி மீனைப் போட்டு திமிங்கிலத்தை பிடிப்பதுதான் இந்த சமூக அக்கறையின் இரகசியம்.
ஜக்கியின் சிஷ்ய கேடிகள் சி.டி போட்டு விற்பனை செய்த அந்த உப யோகா என்ன என தெரிந்து கொண்டால் கொலைவெறியாகி விடுவீர்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் கைகளை நீட்டி சோம்பல் முறிப்பது, கழுத்தை ஆட்டி நெட்டி முறிப்பது போல ஒரு முறை செய்யுங்களேன், அதே தான் ! இதை 100 பேருக்கு சொல்லிக் கொடுப்பேன்’ என சத்தியம் வேறு செய்து கொடுக்க வேண்டுமாம்.
தினமும் காலையில் உலகமே செய்யும் இதற்கு உப யோகா என பெயர் சூட்டி, சி.டி போட்டு விற்றதெல்லாம் மூட்டப் பூச்சி மிஷன் புகழ் வடிவேலு கூட யோசிக்காத உலகமகா அயோக்யத்தனம். யார் கண்டது நாளை ஜக்கி கால் கழுவது, வாய் கொப்பளிப்பது இதற்கெல்லாம் காப்பி ரைட்ஸ் வாங்கி சிடி போட்டு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த வெந்நீர் போடுவதைப் பற்றிய சமையல் வகுப்பில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், வானதி சீனிவாசன், சினிமா தயாரிப்பளர் கலைப்புலி தாணு முதலானோர்.
ஜக்கி யோகா தினம் - சென்னை
சோம்பல் முறிப்பது எப்படி? என படு சிரத்தையாக விளக்கம்
ஜக்கி, சோம்பல் முறிப்பது எப்படி? என படு சிரத்தையாக விளக்கிக் கொண்டிருக்கும் போது வெளியே ஒரு சுற்று சுற்றி வந்தோம். இரவிலிருந்து தூங்காமலிருந்த போலீசுக்காரர்கள் ஆங்காங்கே மரத்தடியில் முக்கால் தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவரிடம்,
“என்ன சார் உங்களுக்கு ஞாயிற்றுக்கெழம லீவெல்லாம் கெடையாதா?”
“என்னது லீவா? அதெல்லாம் கெடையாதுப்பா….”
“உங்களுக்குத்தான சார் மன அழுத்தம் அதிகம், நியாயமா நீங்கதான சார் யோகா பண்ணணும்?”
“நீ வேற….தம்பி நைட்டு வீட்டுக்கே போகலப்பா, சரியா தூங்கக் கூட முடியல, தொடர்ந்து பெண்டு வாங்குது. முந்தா நாளு இவனுங்க அடையாறுக்கு வந்து யோகா சொல்லிக் குடுத்தானுங்க, அதுக்கு வேற நேரம் போச்சு. நமக்கு அத செய்றதுக்கெல்லாம் எங்கப்பா நேரம்? அர மணி நேரம் நம்ம (போலீஸ்) இல்லேன்னா தான் ஊரே கலவரமாக் கெடக்கே…”
சமூகப் பிரச்சனைகளுக்கு போராடும் மக்களுக்கும் யோகா, அவர்களை  ஒடுக்கும் போலீசுக்கு ஒரு நாள் அட்வான்சாகவே யோகா என ஜக்கியின் சேவை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கிக்கு தனியாக ஏ.சி எந்திரம்.
அடுத்தடுத்து இரண்டு ஜக்கி பக்தர்களைப் பார்த்தோம், ஒருவர் விபத்தில் முதுகுத் தண்டில் அடிபட்டவராம். மருத்துவர் அவரை முழுமையாக ஓய்வெடுக்கும் படியும், இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது எனவும் சொல்லி விட்டாராம். ஆனால் ஜக்கியிடம் யோகா வகுப்பில் சேர்ந்தவுடன் எந்த வலியும் இல்லாமல் வெள்ளயங்கிரி மலையில் பல முறை மலையேற்றம் சென்றதாகவும், பைக் ஓட்டுவதிலும் சிரமமில்லை எனவும் ஒப்பித்தார்.
இன்னொருவர் குடி நோயாளியாக இருந்தாராம், “நா பெரிய்ய குடிகாரனா இருந்தேன், இப்போ ஒருமாசமா யோகா கிளாஸ் போரேன், சுத்தமா குடிக்கற பழக்கத்தயே விட்டுடேங்க” என்றார். இதுவும் அரதப்பழைய்ய “குருடர்கள் பார்கிறார்கள் செவிடர்கள் கேட்கிறார்கள் ஆவி எழுப்புகின்ற ஏசு அழைக்கிறார்” டெக்னிக்தான்.
ஜக்கி தனக்குத்தானே வைத்திருக்கும் விளம்பர பேனர்களை பார்த்தால், அதன் வசனங்களை எழுத நூத்திப் பதினோரு பேர் கொண்ட குழு தீயாக வேலை செய்வது தெரிகிறது. ஜக்கி கம்பெனி யோகா வகுப்பு நடத்துவதன் முக்கிய நோக்கமே அதன் விற்பனையை அதிகரிப்படுத்துவதுதான். அதன் பொருட்டு திடலில் நிறைய ஸ்டால்கள் போட்டிருந்தார்கள்.
அதை பொருட்காட்சி அல்லது கடை என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். “ஜக்கி குரூப் ஆஃப் கம்பெனி”களின் பொருட்களுக்கு தனித்தனி விளம்பர பேனர்கள். உதாரணத்துக்கு ஜக்கி கம்பெனி நடத்தும் மாத இதழ் காட்டுப்பூ (காட்டை ஆக்கிரமித்து ஜக்கி ஆசிரமம் அமைத்திருப்பதால் காட்டுப்பூதான் கிடைக்கும்)

ஜபமாலை, பாம்பு மோதிரம், ருத்ராட்சக்கொட்டை என ஃபேன்சி ஸ்டோர் அய்ட்டங்கள் தான் சக்கை போடு போடுகின்றன, ருத்ராட்ச மரங்கள் சிவனின் கண்ணீரில் இருந்து முளைத்தவை என்றால் விற்பனையாகர். 500, 1000, 1500 ரேஞ்சுளில் சக்திக்குத் தக்க (எத்தனை மெகா வாட் என குறிப்பிடவில்லை) ருத்ராட்ச மாலைகள் கிடைக்கின்றன. விட்டால் ஜக்கியே சிவனுக்கு மெயில் அனுப்பி கொட்டைகளை ஆர்டர் செய்து விநியோகிப்பார் போல.
பாம்பு மோதிரம் ஜக்கியின் உப யோகா சிடி விலையான 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. இரண்டில் எதுவுமே செல்லாத பழைய பத்து பைசாவுக்குக்கூட பழைய பேப்பர்காரர் வாங்க மாட்டார்.
அடுத்து ஜக்கி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்…  குருவுக்கு எதுக்குடா லிமிடெட் கம்பெனி? எனினும் ஜக்கி வியாபாரத்தை வெளிப்படையாகவே செய்கிறார். அதன் முழக்கம் “டேஸ்ட் ஆஃப் ஈஷா – ஈஷாவின் ருசிகள்”!
அண்ணாச்சி கடையில் விற்கும் நிலக்கடலை ஈஷா கடையில் நாலு மடங்கு விலை! சத்துமாவு, தேன், சிறுதானியங்கள் என எல்லா பொருட்களும் ஆனை விலை, குதிரை விலை. ஆனாலும் ஜக்கி உருவாக்கி வைத்திருக்கும் “பிராண்ட் நேம்” நைக், ரீபோக் போல அசாத்யமானது. ஆக மொத்தம் விவசாயியிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து வெறும் பொட்டலம் கட்டி அநியாய விலைக்கு விற்கும் அயோக்ய வியாபாரம். இந்த வியாபாரத்துக்குத்தான் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மேல் ஜக்கி காட்டும் அக்கறை.
கருணையைக் காசாக்கும் கலையை இவ்வளவு வெளிப்படையாக அதாவது சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா போல விற்கும் தைரியம் ஜக்கி கம்பெனிக்கும், அதை வாங்கும் ஏமாளித்தனம் மல்டிபிளக்ஸ் அறிஞர்களுக்கும் மட்டுமே உண்டு.
ஆன்மீக சுற்றுலா வியாபாரம் ஒன்றையும் ஜக்கி தன் மூளையை கசக்கி உருவாக்கியிருக்கிறார், ஜக்கி. கைலாஷ் மானசரோவர்- பிரபஞ்சத்தின் ஞானப்பொக்கிஷமாம். ஜஸ்ட் ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும். இமயமலை-ஞானிகளின் வசிப்பிடமாம் 41,000ரூபாய் மட்டும். அதெல்லாம் பரவாயில்லை மூக்கை பொத்திக்கொண்டு நகரை சுற்றிப்பார்க்குமளவு கங்கையுடன் சேர்ந்து நாறும் வாரணாசி-முக்திக்கான நுழைவு வாயிலாம். ஜஸ்ட் 38,000 ரூபாய் மட்டும்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
முக்தி, மோட்சம், ஞானம், பொக்கிஷம் இவையெல்லாம் நீங்கள் சில லட்சங்கள் செலவு செய்யும் தகுதி இருந்தால் தான் ஜக்கி உங்களுக்கு விளக்குவார். இல்லை எனில் குங்குமமோ, குமுதமோ படித்து அவரின் சுற்றுலா அனுபவத்தை நீங்கள் வீட்டில் காலாட்டிக் கொண்டே அனுபவிக்கலாம்.
ஜக்கியின் அடுத்த வெடி ஈஷாவின் சமூக நலத்திட்டங்கள். பெப்ஸி, கோக்க கோலா நிலத்தடி நீர் வளத்தை காப்பதாக பீலா விடுவது எவ்வளவு அயோக்யத்தனமோ அதைவிட அயோக்யத்தனம் ஜக்கி மரம் வளர்ப்பதாக, பசுமையைக் காப்பதாக அடிக்கும் கூத்து. வெள்ளையங்கிரி மலைச்சாரல் என முகவரியில் போடுமளவு மக்களின் சொத்தான மலையை ஆக்கிரமித்த மலை முழுங்கி மகாதேவன் ஜக்கிக்கு என்ன யோக்யதை இருக்கிறது சமூக நலம், மரம் வளர்ப்பு எனப் பேச?
ஜக்கி யோகா தினம் - சென்னை
சாமியார் மடத்துக்கும் பள்ளிகளையும், குழந்தைகளையும் அடகு வைத்திருக்கிறது அரசு.
கோவை, தர்மபுரி, சேலம், காஞ்சிபுரம் என நான்கு மாவட்டங்களிள் 40 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்திருப்பதாக பெருமையுடன் விளம்பரம் செய்திருக்கிறது ஜக்கி கம்பெனி. தத்தெடுப்பது என்பது அடிப்படை வசதிகளை செய்வது மட்டுமல்லாமல் பாடத்திட்டத்தையும்  நவீனமயமாக்குவதாம்! ஊரெங்கிலும் சாராயக்கடை திறக்கத் தெரிந்த ஜெயாவுக்கு பள்ளிக்கூடத்தை நடத்த துப்பில்லாமல் கண்ட சாமியார் மடத்துக்கும் பள்ளிகளையும், குழந்தைகளையும் அடகு வைத்திருப்பது கீழ்த்தனமான செயல் என்பது தெரியவில்லையா ?
ஜக்கி குரூப் ஆஃப் கம்பெனிஸ் தமிழ், நாட்டிலும் ஆந்திராவிலும் சொந்தமாக 9 பள்ளிகளை நடத்துகிறது. ஈஷாவின் இந்த கல்வி வியாபாரமே புரவலர்களின் காசில்தான் ஓடுகிறது. அவர்கள் எதிர் பார்க்கும் நன்கொடையெல்லாம் சாமான்யர்களால் அளிக்க முடியாதது, நகைக்கடை விளம்பரத்தைப்போல எல்லாமே ஃபிக்ஸ்ட் பிரைஸ் தான். நன்கொடை என்பது நாமே விரும்பி அளிப்பது தான் ஆனால் அதிலேயும் வழிப்பறி என்றால்?
ஒரு குழந்தையின் ஆண்டுக்கான கல்விச்செலவு வெறும் 20,000 மட்டும். நீங்கள் கல்வி உதவித்தொகை அளிக்க விரும்பினால் வெறும் 10,000 மட்டும்.
ஜக்கி யோகா தினம் - சென்னை
ஜக்கி மேடைக்கு பின் புறம் தன் டெண்டுக்குள் பதுங்கி பிரஸ் மீட்
கடைகளை ஒரு சுற்று சுற்றி வந்திருந்த போது நெட்டி முறிப்பு பயிற்சி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது, ஜக்கி மேடைக்கு பின் புறம் தன் டெண்டுக்குள் பதுங்கி பிரஸ் மீட் அளிக்கும் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, ஆனந்த அலை ஹை டெசிபலில் ஒலிக்கத் துவங்கியது. ஆங்காங்கே குழுமியிருந்த ஜக்கியின் மதத்தினைச் சேர்ந்த வெள்ளை ஜிப்பாக்கள் கும்பல் கும்பலாக ஆடி கடைசியில் இஸ்கான் பின் குடிமிகளின் ஸ்டைலில் மைதானத்தின் மையத்தில் குழுமி சாவுக்குத்து குத்தினார்கள். அப்படியே கேமரா ஜூம் அவுட் எடுக்க ஜக்கி மடியில் கல்லாவுடன் சின்ன மீனைபோட்டு பெரிய மீனுக்கு காத்திருக்கும் காட்சியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
உலக அளவில் முதலாளித்துவம் மீளமுடியாத புதைகுழிச்சேற்றில் அமிழ்ந்துவரும் நேரத்தில், மக்களை சமூகரீதியாக சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்றி, பிரச்சனைகளுக்கு தங்களையே பொறுப்பாக்கிக்கொண்டு, போராடும் வலிமையோ, அமைப்போ அற்றவர்களாக்க மிகப்பெரிய வலை மக்களைச்சுற்றி பின்னப்பட்டு வருகிறது. அதுதான் ஜக்கியின் மிகப்பெரும் சேவை. அதனால்தான் யோக தினத்தில் பா.ஜ.க உதவியுடன் அவர் தனது கடையை இப்படி விரிக்க முடிந்திருக்கிறது.
மோடி வடிவமைத்த யோக தினத்தின் சென்னை அத்தியாயமே இப்படி என்றால் இதன் தேசிய, சர்வதேசிய அத்தியாயங்களை ஊகித்துக் கொள்ளுங்கள்!
–    வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக