செவ்வாய், 28 ஜூலை, 2015

நடிகர் சங்க உறுப்பினர் கூட்டத்தில் அடிதடி சரத்குமார், ராதாரவி மீது போலீசில் புகார்


நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக, நடிகர் ராதாரவி ஆதரவு திரட்டி கூட்டத்தில், விஷால் அணியைச் சேர்ந்த ஒருவர், சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். இதனால், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் ராதாரவி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், இரு அணிகள் மோதுகின்றன. நடிகர் ராதாரவி தலைமையிலான அணியில் நடிகர்கள் சரத்குமார், விஜயகுமார், நடிகை குயிலி என, சிலர் போட்டியிட உள்ளனர்.நடிகர் விஷால் தலைமையிலான அணியில், நடிகர்கள் நாசர், கருணாஸ், பொன்வண்ணன் உட்பட சிலர், தேர்தல் களத்தில் குதிக்க தயாராகியுள்ளனர்.
இரு அணியினரும், வெளிமாவட்டத்தை சேர்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி முடித்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஏற்கனவே விஷால் அணியினர் ஆதரவு திரட்டி உள்ளனர்.இந்நிலையில், சரத்குமார் அணியை சேர்ந்த ராதாரவி, சென்னை மாவட்ட நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்கும் கூட்டம், வடபழனியில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, சமத்துவ மக்கள் கட்சியின் நிலைய செயலரும், தயாரிப்பாளருமான ஐஸ்அவுஸ் தியாகு தலைமையில், நடிகர் சங்க உறுப்பினர்கள் திரளாக கூடியிருந்தனர்.அப்போது, விஷால் அணியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அங்கு வந்துள்ளார். இதைப் பார்த்த சிலர், 'விஷால் அணியை சேர்ந்த நீ எப்படி இந்த கூட்டத்திற்கு வரலாம்' என, கேட்டு அடித்து உதைத்துள்ளனர்.இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் பாலாஜி புகார் மனு அளித்துள்ளார். அதில், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், நடிகர் சங்க தலைவர், பொதுச்செயலர் தூண்டுதலில், தன்னை சிலர் தாக்கியுள்ளனர் என, தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக