வெள்ளி, 31 ஜூலை, 2015

ஜெயலலிதாவை பொறுத்தவரை நீதிபதி தத்து ஓய்வு பெறுவதற்குள் வழக்கை ஊத்தி முடிவிடவேண்டும்என்ற.....

_MG_1679newஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி, கடந்த திங்களன்று புது தில்லியில் அரங்கேறியது.  இந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஜெயலலிதா, இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிக் கொண்டிருந்தார். எப்போதும் போல, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக வழக்கறிஞர்கள், சம்பந்தமே இல்லாமல், நீண்ட வரிசையில் நின்று, பார்வையாளர் அனுமதிச் சீட்டு வாங்கி நீதிமன்ற அறை எண் 12க்குள் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழியும் என்றால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதென்றால், லட்சக்கணக்கில் செலவழியும். ஆனால் அப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து தொடுக்கப்பட்ட வழக்குகளை சில வினாடிகளில் தள்ளுபடி செய்து கொண்டிருந்தார் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ்.  அவரது அருகில் அமர்ந்திருந்த ஆர்.கே அகர்வாலோ, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருந்தார்.  பத்தரை மணிக்கு கோர்ட் தொடங்கியதென்றால் பத்தே முக்கால் மணிக்குள் 26 வழக்குகளை முடித்திருந்தார் பினாக்கி.  ஒவ்வொர வழக்கையும் எடுத்து, டிஸ்மிஸ், டிஸ்மிஸ் என்று சகட்டுமேனிக்கு தள்ளுபடி செய்து கொண்டிருந்தார்.   வழக்கறிஞர்களை பேசவே விடவில்லை. அவர்கள் பேசத் தொடங்கும் முன்பாகவே, “டிஸ்மிஸ்” என்று கூறிக் கொண்டிருந்தார்.   சில வழக்கறிஞர்கள் பேச முனைந்தபோது, “சாரி.. நோ…  வி ஆர் சாரி.  வி ஆர் டிஸ்மிஸ்ஸிங்” என்று மனுக்களை தள்ளுபடி செய்து கொண்டிருந்தார் கோஷ்.  ஒரு வழக்கறிஞர் “What I say may be appreciated” என்றார்.  “All right we are appreciating and dismissing” என்றார்.  இப்படித்தான் 26 வழக்குகளும் முடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் எதுவுமே நடக்காது என்பதை நன்றாக உணர்ந்தது போல, ஆச்சார்யா எழுந்து அழுத்தமாக எதுவுமே பேசவில்லை.  இந்த வழக்கு, இந்த அமர்வின் முன்னால் முடியப்போவது கிடையாது என்பதை ஆச்சார்யாவும் மற்றவர்களும் நன்றாகவே உணர்ந்திருந்தனர். இதனால் வலுவாக வாதத்தை எடுத்து வைக்கவே இல்லை.   ஆச்சார்யா மெதுவாக “இடைக்காலத் தடை” என்று தொடங்கியதும் நீதிபதி கோஷ் “உங்களுக்கு வேண்டுமானால் இது முக்கியமான வழக்காக இருக்கலாம்.  ஆனால் எங்களுக்கு இது சாதாரண வழக்கு.  மற்ற வழக்குகளைப் போலத்தான் விசாரிப்போம்.   அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டுள்ளோம்.  அவர்கள் தங்கள் பதில்களை சமர்ப்பிக்கப்பட்டும். பிறகு பார்க்கலாம்” என்றார். அத்தோடு ஆச்சார்யா எதுவும் பேசவில்லை.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், இந்த மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.   முகாந்திரம் இல்லாத மனுக்கள் இவை என்றார்.  ஆனால் நீதிபதி கோஷ், அனைவரும் பதில் கூறட்டும்.  பதில் கூறியபிறகு, இது விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம் என்றார்.
SC 1
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பினாமி நிறுவனங்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜரானார்.   அவர், அன்பழகன் என்று ஒருவர், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவித்தது தவறு என்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.   சொத்துக்களை விடுவித்தது தொடர்பாக, கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. ஆனால், சம்பந்தமில்லாத ஒரு நபர் மேல் முறையீடு செய்துள்ளார். உடனடியாக இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.  நீதிபதி கோஷ், எல்லாவற்றையும் விசாரிப்போம்.  அனைத்து தரப்பும் பதில் மனு தாக்கல் செய்யட்டும் என்று கூறினர்.  ஆனால் அரிமா சுந்தரம் மீண்டும் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  அப்போது அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் விகாஷ் சிங் இந்த குற்றவியல் திருத்தச் சட்டத்தின்படி,  வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்களை, இறுதி விசாரணை முடியும் வரை விற்கக் கூடாது என்பதை சுட்டிக் காட்டினார்.    இதையடுத்து, அரிமா சுந்தரத்தைப் பார்த்து நீதிபதி கோஷ்,  இந்த மேல் முறையீடு முடியும் வரை இவ்வழக்கின் சொத்துக்களை விற்கக் கூடாது என்றார், அதற்கு உடனடியாக அவர்  ஒப்புக் கொண்டார்.  அடுத்ததாக, நீதிபதி கோஷ், இதில் தன்னையும் இணைத்துக் கொள்ள சுப்ரமணிய சுவாமி மனு செய்துள்ளாரே என்று கேட்டதும் சுவாமி எழுந்து, நான்தான் இந்த வழக்கின் முதல் புகார்தாரர் என்றார்.  அதையடுத்து அவரது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று உத்தரவிடப்பட்டது.
இறுதியாக, ஜெயலலிதா தரப்பு பதில் கூற 3 மாதம், அந்த பதில் மனுவுக்கு பதிலளிக்க கர்நாடக அரசு மற்றும் திமுக மற்றும் சுவாமிக்கு 3 வாரம் என்றும் எட்டு வாரங்கள் கழித்து வரும் முதல் திங்கட்கிழமை அன்று இவ்விசாரணை மீண்டும் நடைபெறும் என்று கூறினார். தமிழகத்திலிருந்து வந்திருந்த அதிமுக வழக்கறிஞர்கள், நோட்டீஸ் உத்தரவிட்டதே தவறு.  மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கணிதப்பிழை இருந்தது என்று வெளியுலகுக்கு தெரிந்த உடனேயே, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கில், தடை உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எத்தனையோ சமூகப் பிரச்சினைகளுக்கு செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாக முன் வந்து வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் துவக்கிய வரலாறு உண்டு.  ஆனால், நீதித்துறையையே களங்கத்துக்கு ஆளாக்கும் ஒரு தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்கள் ஆன பிறகும், அந்தத் தீர்ப்பு அப்படியே உயிரோடு உள்ளது.  அந்தத் பிழையான தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா முதலமைச்சராகி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.  அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான இந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் வேதனை.
நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்தை போக்க வேண்டிய கடமை உச்சநீதிமன்றத்துக்குத்தான் உள்ளது.  வேறு யாருக்கும் அல்ல.  இப்படிப்பட்ட ஒரு வழக்கில், உடனடியாக தடை உத்தரவு வழங்காமல், வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பது என்பது, இந்த அநியாயத்துக்கு துணைபோவதே.
திமுக தரப்பில், இந்த உத்தரவை வரவேற்கிறார்கள்.  “இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்பது வரவேற்கத்தகுந்த உத்தரவு.    எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு, தீர்ப்புக்கு தடை கோரும் மனுவுக்காகத்தான்.    கிரிமினல் வழக்குளில், பதில் மனு என்ற வழக்கம் இல்லை.  ஆகையால் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு, தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரும் மனுவுக்காகத்தான்.  மேலும், இந்த வழக்கின் சொத்துக்களை விற்கக் கூடாது என்று பிறப்பித்துள்ள உத்தரவு, ஜெயலலிதா தரப்புக்கு பெரும் பின்னடைவு.  ஜெயலலிதா தரப்பில் இதை விரைவாக முடிக்க முயற்சி செய்வார்கள்.  ஆனால், அது நடைமுறையில் சாத்தியம் இல்லை.   இடைக்கால உத்தரவுக்கே எட்டு வார அவகாசம் என்றால், இது அத்தனை விரைவாக முடிக்கப்பட சாத்தியம் இல்லை” என்றார் ஒரு திமுக வழக்கறிஞர்.
இந்த வழக்கு குறித்து பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்த பலர், இப்போது இது குறித்து பேசுவதேயில்லை.   மக்களுக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப் போய் விட்டதையே இது காட்டுகிறது.   அதை நிரூபிக்கும் விதமாகவே, நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் இதை எட்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.
ஆனால் திமுக தரப்பிலோ, வழக்கு தள்ளி வைக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.  இப்படி எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் எட்டு வாரங்களுக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதே என்றால், வழக்க தள்ளிப்போவதுதான் எங்களுக்கு நல்லது.   ஜெயலலிதா நவம்பர் மாதத்துக்குள் எப்படியும் விடுதலை செய்யப்பட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.  அவர் அவ்வாறு நம்பிக்கை கொள்வதற்கான முக்கிய காரணம், தலைமை நீதிபதி தத்து.     அவர் இருக்கும் வரையில் நமக்கு நல்ல காலமே என்று உறுதியாக நம்புகிறார் ஜெயலலிதா.  அவரின் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில்தான் தத்துவின் நடவடிக்கைகளும் இருந்து வருகின்றன.   இத்தகையதொரு சூழலில், டிசம்பர் 2ல் தத்து ஓய்வு பெறும் வரை இவ்வழக்கை தள்ளிப் போகலாம் என்ற நோக்கதிலேயே திமுக இருக்கிறது.
ஜெயலலிதாவை பொறுத்தவரை, இவ்வழக்கு தத்து ஓய்வு பெறுவதற்குள் முடிக்கப்படவில்லை என்றால், மீண்டும் புதிதாக வரும் தலைமை நீதிபதியான டி.எஸ்.தாக்கூரை சரிக்கட்ட வேண்டும். ஒரு வேளை சரிக்கட்ட முடியாமல் போய் விட்டால் நிலைமை சிக்கலாகி விடும்.   டிஎஸ்.தாக்கூர், குமாரசாமியோ தத்துவோ அல்ல.    ஒரு நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்தவர்.  ஜெயலலிதாவுக்கு உதவி புரிய அவருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.   மேலும் அவர் ஒரு வருடம் பதவியில் இருப்பார்.   அந்த ஒரு வருடத்துக்குள் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது.    ஜனவரி 3, 2017ல் தாக்கூர் ஓய்வு பெறுவதற்குள் இந்த வழக்கு விசாரணை முடிவை எட்டுமேயானால், ஜெயலலிதா பாடு திண்டாட்டம்தான்.   இந்த ஒரே காரணத்துக்காகத் தான் வழக்கை விரைவாக முடிக்க முயல்கிறார் ஜெயலலிதா.
நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
ஆனால், தற்போது எட்டு வாரம் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், பதில் மனு தாக்கல் செய்யாமல், திமுக தாமதப்படுத்த வாய்ப்பு உள்ளது.   அப்படியானால், குமாரசாமியின் கூட்டல்கள் திருத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 2 வரை, இந்த வழக்கை திமுக எப்படி இழுக்கிறது என்பதைப் பொறுத்தே, இவ்வழக்கின் தலையெழுத்து அமையும்.   டிசம்பர் 2க்கு பிறகே, நிலைமை தெளிவாகும். savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக