புதன், 29 ஜூலை, 2015

பலுசிஸ்தான் ! பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடகுமா?


வாஷிங்டன்/இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் பிரச்சனைக்குரிய பகுதியான பலுசிஸ்தானுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கக்கோரி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தனர். குடியரசு கட்சியின் உறுப்பினர் டானா ரொஹ்ராபாஷரின் தலைமையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
பலூச்சிகளுக்கு சுய நிர்ணய உரிமைக்கும், இறையாண்மை மிக்க தேசத்தை உருவாக்கவும் உரிமை உண்டு என்று கூறும் தீர்மானம், பலுசிஸ்தான் வரலாற்று ரீதியாக ஒரு சுதந்திர பகுதி என்று சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க பிரதிநிதி சபையின் வெளியுறவு விவகார துணை குழு தலைவரான ரொஹ்ராபாஷர், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து முன்னரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதே வேளையில், அமெரிக்க பிரதிநிதி சபையின் பலுசிஸ்தான் ஆதரவு தீர்மானத்தை, பாகிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானத்தை, பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் இறையாண்மை மீதான அத்துமீறல் என்று கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான நீண்டகால நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிப்பதுதான் இத்தீர்மானம் என்று தெரிவித்துள்ள ஹினா ரப்பானி கர், சர்வதேச சட்டங்களுக்கும், ஐ.நா சார்ட்டருக்கும் எதிரானது இத்தீர்மானம் என்று கூறியுள்ளார்.
சுதந்திர தேசத்திற்காக பலூச் தேசியவாதிகளின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக வலுவான போராட்டம் நடைபெற்று வருகிறது. ராணுவத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் இப்போராட்டத்தை அடக்கி வருகிறது
thoothuonline.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக