புதன், 22 ஜூலை, 2015

மதுவிலக்கு சாத்தியமா?'சொன்னதை செய்வோம் !

தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என, நேற்று முன்தினம் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து, அரசியல் வட்டாரங்களில், பல விதமான கருத்துகள் சொல்லப்படுகின்றன. 'மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை' என, கூறப்படும் சூழலில், நேற்று மாலை, சென்னை கோபாலபுரம் இல்லத்தில், நிருபர்களை சந்தித்த கருணாநிதி கூறியதாவது: தமிழகத்தில், மதுவிலக்கு சாத்தியப்படுமா என, கேட்கின்றனர். மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்றாலும், அதை முயற்சி எடுத்து, நாம் தான் அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்த, சாத்தியக்கூறுகளையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட, 'டாஸ்மாக்'குகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. கேரள மாநிலத்தில், ஒரு லட்சம் பேருக்கு, ஒரு மதுக்கடை இருக்கிறது என்றால், தமிழகத்தில், 10 ஆயிரம் பேருக்கு, ஒரு 'டாஸ்மாக்' என்ற அவலநிலை ஏற்பட்டு விட்டது.
கடந்த 2011ல், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்திருந்தால், நிச்சயம் மதுவிலக்கை, கருணாநிதி அமல்படுத்தியிருப்பார். எனவே, 'மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என, கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புப்படி, 2016ல் ஆட்சி அமைக்கும் போது, நிச்சயம் செயல்படுத்தி சொன்னதை செய்வோம்.இவ்வாறு, அவர்
கூறியுள்ளார்.


மக்களை ஏமாற்றும் தேர்தல் யுக்தி:

பூரண மதுவிலக்கை கொண்டு வருவதாகச் சொல்லி, ஆட்சியில் அமர்ந்த பின், கள்ளச் சாராயச் சாவுகளையும், நிதி நிலை நெருக்கடிகளையும் காரணம் காட்டி மீண்டும் மதுக்கடைகளை திறக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? வாக்குறுதிகளை வழங்குவதும், பின் அவற்றிற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்த காலச் சரித்திரம். இதை தமிழக மக்கள் நன்கு அறிவர். ஆட்சி நாற்காலியைக் கைப்பற்றுவதற்கு, அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொண்டிருக்கும் கருணாநிதியின், மக்களை ஏமாற்றும்
தேர்தல் யுக்திகளுள் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இருக்கக்கூடும்.
தமிழருவி மணியன்,
தலைவர்,
காந்திய மக்கள் இயக்கம்


காங்கிரசும் அறிவிக்கட்டும்!

'என் ஆட்சியே போனாலும், மதுக்கடை திறக்க மாட்டேன்' என்று அண்ணாதுரை கூறினார். மதுக்கடைகளுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் காமராஜர் தலைமையில், கரூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், 'ஆட்சிக்கு வந்தால், மது விலக்கு கொண்டு வருவோம்' என்று கருணாநிதி அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். 'மது வேண்டாம்' என, கூறுவோர், இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி, மது இல்லாத இந்தியாவை விரும்பியதால், 'நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வருவோம்' என, காங்கிரசும் அறிவிக்க வேண்டும்.
குமரி அனந்தன்,
காந்தி பேரவை,
தமிழ்நாடு dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக