திங்கள், 6 ஜூலை, 2015

ஜெ. விடுதலையை எதிர்த்து க.அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கக் கோரியும், அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பளித்த பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூன்று பேருக்கும் 10 கோடியும் ரூபாயும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மே 11ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டடார். இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிப்பதோடு, அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இன்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி மதன்லோகூர் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றம் முறையாக விசாரணை நடத்தவில்லை. தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பையும் கர்நாடக உயர்நீதிமன்றம் பின்பற்றவில்லை. கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தையும், தமது வாதத்தையும் பரிசீலனையில் எடுத்துக்கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கவில்லை. நேரடி விவாதத்திற்கும் வாய்ப்பு வழங்கவில்லை. அத்துடன் ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்துக்களை மதிப்பிட்டதில் பிழை இருக்கிறது. இவற்றையெல்லாம் பரிசீலனையில் எடுத்துக்கொண்டு கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உடனடியாக இடைக்கால தடை விதிப்பதோடு, அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு க.அன்பழகன் மனுவில் கூறியுள்ளார் nakkheera.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக