வெள்ளி, 31 ஜூலை, 2015

கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை

மெரிக்காவில் “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும்? அவரை சந்தேக கேஸ் என்று போலீஸ் தடுத்து நிறுத்தும். அப்படி தடுத்து நிறுத்தப்பட்ட பிறகு அவரிடம் சந்தேகத்துக்குரிய வஸ்துகள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கப்படுவார். போலீசுக்கு போதுமான பணிவையும், அடிபணிதலையும் காட்டா விட்டால், அவர் கைது செய்யப்படுவார். சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டு உயிரிழப்பார்.
சாந்த்ரா பிளாண்டுக்கு “கருப்பாக இருப்பவர் கார் ஓட்டினால்” என்ன நடக்கும் என்று நன்றாக தெரியும். அவர் கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக தொடர்ந்து இணையத்தில் எழுதி வந்தவர். “கருப்பர்களின் உயிருக்கும் மதிப்புண்டு” என்ற இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்.

சிக்காகோவைச் சேர்ந்த சாந்த்ரா, ஜூலை 10-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரெய்ரீ வியூ பல்கலைக் கழகத்தில் வேலை நேர்முகத்துக்காக போயிருக்கிறார். கருப்பின மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், வெறுப்பு உணர்வும் வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று டெக்சாஸ்.
காரில் போய்க் கொண்டிருக்கும் போது, அவரைப் பின்தொடர்ந்து வேகமாக ஒரு போலீஸ் கார் வருவதை கவனித்திருக்கிறார் சாந்த்ரா. அந்தக் காருக்கு வழி விட்டு ஒதுங்குவோம் என்று தான் சென்ற பாதையை விட்டு விலகியிருக்கிறார். உடனே, துரத்தி வந்த போலீஸ் காரில் இருந்த பிரையன் என்சினியா என்ற காவலர், சாந்த்ராவின் காரை நிறுத்தியிருக்கிறார்.
சாந்த்ரா பிளாண்ட்
சாந்த்ரா பிளாண்ட்
சாலையில் பாதை மாறும் போது இன்டிகேட்டர் போடவில்லை என்பதற்காக குற்றப் பதிவு செய்யப் போவதாக சாந்த்ராவிடம் கூறுகிறார் பிரையன்.
இது போன்று போக்குவரத்து காவலர்களால் தேவையின்றி நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுவது சாந்த்ராவுக்கு முதல்முறை அல்ல. போக வேண்டிய இடத்துக்கு தாமதமாகும் எரிச்சலுடன் அவர் பிரையன் தனது வேலையை முடிக்க காத்திருந்திருக்கிறார்.
பிரையனுக்கு அது வேடிக்கையாக இருந்திருக்கிறது. “என்ன ரொம்ப எரிச்சலா இருக்கறாப்ல” என்று கேட்டிருக்கிறார்.
“ஆமா, நான் உங்களுக்கு வழி விட்டு ஒதுங்கினா, அதில சிக்னல் பண்ணலன்னு நிறுத்தி வெச்சிருக்கீங்க. எப்ப என்ன போக விடுவீங்க. எவ்வளவு நேரம் நிக்கணும். அதான் எரிச்சல்” என்று விளக்கியிருக்கிறார் சாந்த்ரா.
தன்னை எதிர்த்து ஒரு கருப்பினப் பெண் பேசுவது பிரையனுக்கு கடுப்பேற்றியிருக்கிறது. சாந்த்ரா பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைக்கும்படி சொல்கிறார்.
“என் காரில் நான் சிகரெட் பிடிக்கிறேன். ஏன் அணைக்கணும்” என்று கேட்கிறார் சாந்த்ரா.
“அப்படீன்னா, காரை விட்டு கீழே இறங்கு” என்று உத்தரவிட ஆரம்பித்திருக்கிறார், பிரையன்
“என்ன? லேன் மாறுவதற்கு சிக்னல் காட்டலைன்னுதானே என் தப்பு. அதுக்கான சீட்டை எழுதிக் கொடுங்க. அதுக்கு எதுக்கு நான் காரை விட்டு கீழ இறங்கணும். அப்படிச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை” என்று மறுத்திருக்கிறார், சாந்த்ரா.
“எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு. நீயா இறங்குறியா, நான் வெளியே இழுத்து போடவா” என்று காருக்குள் கையை விட்டிருக்கிறார், பிரையன்.
“என்னைத் தொட்டா நடக்கிறதே வேற.” என்று சீறியிருக்கிறார் சாந்த்ரா.
“மரியாதையா கீழே இறங்கிரு” என்று ஸ்டன் துப்பாக்கியை நீட்டியிருக்கிறார் பிரையன்.
தன்னை என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை என்று தெரிந்த சாந்த்ரா, காரிலிருந்து கீழே இறங்குகிறார்.
“அந்தா அங்க போய் நில்லு. ஃபோனை ஆஃப் பண்ணு” என்று உத்தரவிடுகிறார் பிரையன்.
“நான் ஃபோன்ல பேச ஒண்ணும் செய்யல, இங்க நடக்கிறத பதிவு செய்றேன். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு” என்று கூறிய சாந்த்ராவுக்கு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. சாந்த்ரா செல்பேசியை காரின் மேல் அடித்து வைக்கிறார்.
“என்னை ஏன் கைது செய்றீங்க, அதுக்கு காரணம் என்ன” என்று கேட்கிறார் சாந்த்ரா.
அதற்கு பதில் சொல்லாமல், “நீ அந்தப் பக்கமா நில்லு, தள்ளி நில்லு” என்று அங்குமிங்கும் அலைக்கழிக்கிறார் பிரையன்.
இதுவரை நடந்தவை பிரையனது போலிஸ் காரில் இருந்த காமராவில் பதிவாகியிருக்கின்றன. அதன் பிறகு பிரையன் சாந்த்ராவை காமராவின் பார்வைக்கு வெளியே பக்கவாட்டு நடைபாதைக்கு தள்ளிச் செல்கிறார்.
“என்னை கீழே தள்ளிட்டீங்க, என் தலையை தரையில மோதுகிறீர்கள். எனக்கு தலை சுத்துது” என்று கதறுகிறார் சாந்த்ரா.
“நான் சொன்னதை கேக்கலேன்னா இப்படித்தான், மரியாதையை மண்டியிட்டு உட்காரு, கையை பின்னால கட்டு” என்று போலீஸ் அடாவடி செய்கிறார் பிரையன்.
அதைத் தொடர்ந்து இன்னொரு பெண் காவலரை ரேடியோவில் அழைக்கிறார், பிரையன். அவர் வந்த பிறகு, கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால்தான் சாந்த்ராவை கைது செய்ய வேண்டி வந்தது என்கிறார் பிரையன். அதாவது, கைது செய்வதை எதிர்த்த காரணத்தால் கைது செய்கிறாராம்.
சாந்த்ராவை போலீஸ் காரில் ஏற்றி விட்டு என்ன நடந்தது என்று தனது மேலதிகாரிக்கு சொல்கிறார், பிரையன். போக்குவரத்து விதியை மீறியதால் காரை நிறுத்தியதாகவும், வாக்குவாதம் ஆரம்பிக்கவே இறங்கச் சொன்னதாகவும், கைது செய்வதை தடுக்க முயற்சித்ததால், தாக்கியதாகவும், தன்னை அடிக்கவில்லை, ஆனால், தரையில் அழுத்திப் பிடித்த போது கையையும் காலையும் உதறினார் என்றும் விளக்குகிறார். இந்தக் குற்றங்களுக்காக சாந்த்ராவை கைது செய்வது என்று முடிவு செய்கிறது காவல்துறை.
டெக்சாஸ் மாநில போலீஸ் துறை சாந்த்ராவை ஜெயிலில் அடைக்க முடிவு செய்கிறது. அவரை விடுவிக்க $5,000 பிணைத் தொகை விதித்திருக்கிறது அந்த நாட்டு நீதிமன்றம். சிறையில் அடைக்கப்பட்ட சாந்த்ரா மூன்றாவது நாள் காலையில் ஒரு பிளாஸ்டிக் பையால் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.
சாந்த்ரா தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க நீதித்துறை முடிவு செய்திருக்கிறது. இது தற்கொலை அல்ல, ஒரு நிறவெறி படுகொலை என்று கொதிக்கின்றனர் கருப்பின மக்கள்.
ஆனால், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு இருக்கும் ஜனநாயகம் இதுதான். அமெரிக்காவில் கருப்பின மக்கள் போக்குவரத்து காவலர்களால் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படி நிறுத்தப்பட்ட பிறகு சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் பிற போதை மருந்துகள் இருக்கிறதா என்று தேடப்படுவதும் அந்த சாக்கில் தாக்கப்படுவதும் அதிகம்.
அமெரிக்காவின் காவல்துறை அதிகாரிகள் அதிவேக காரில் கிரிமினல்களை துரத்திக் கொண்டு செல்லும் அதிரடிக் காட்சிகள் தொடராகவே தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன. ஆனால் கருப்பின மக்களைப் பொறுத்த வரை இதில் திகிலோ, சாகசமோ எதுவும் இல்லை, இது வெள்ளை நிறவெறித்திமிரின் ஆயுதம்.
அமெரிக்காவில் சிக்னல் மாறிச்செல்லும் கருப்பின மக்களுக்கு மரண தண்டனை சாந்த்ராவின் சோக முடிவு உலகுக்கு அறிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக