சனி, 18 ஜூலை, 2015

சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு கருத்துச்சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ! ஜி. ராமகிருஷ்ணன்

சன் குழுமத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அனுமதி வழங்க மறுத்திருப்பதற்கும், நடைபெறவிருக்கும் பண்பலை வானொலி ஏலத்தில் பங்கேற்க தடை விதித்திருப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு நிறுவனம் அல்லது குழுமம் பொருளாதாரக் குற்றங்களை செய்திருந்தால் உரிய முறையில் சட்டப்படி விசாரித்து அதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதேசமயம் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி எந்தவொரு நிறுவனத்திற்கும் அவர்களது தொழிலுக்கு, வணிகத்திற்கு, சேவைக்கு மறுப்பு தெரிவிப்பது நியாயமற்ற நடைமுறை.
இந்தப்பிரச்சனையில் சன் குழுமத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஊடகச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மத்திய பாஜக அரசின் தாக்குதல் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. மத்திய அரசு சிறிது, சிறிதாக ஆனால் மிகக் கடுமையாக அனைத்து வகைகளிலும் கருத்துச்சுதந்திரத்தின் மீது தொடுக்கும் தாக்குதலின் ஒரு பகுதியே இது. எனவே மத்திய அரசுகள் உடனடியாக சன் குழும ஊடகங்களுக்கு அனுமதி மறுத்திருப்பதையும் ஏலத்தில் பங்கேற்க தடை விதித்திருப்பதையும் விலக்கிக் கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மத்திய, மாநில அரசுகளின் தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கருத்துச்சுதந்திரத்தின் மீது, ஊடகச் சுதந்திரத்தின் மீது, கட்டுப்பாடுகளை விதிப்பதை போன்றே ஊடக கட்டமைப்புகளை தங்களிடம் வைத்திருக்கும் சில நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களின் ஒளிபரப்பை மறுப்பது நியாயமற்றது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. சில தொலைக்காட்சி சேனல்களை சன்குழும கேபிள்கள் வழியாக ஒளிபரப்ப அனுமதிக்கப்படாதிருக்கும் நிலையையும் சன்குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.< nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக