சனி, 11 ஜூலை, 2015

சிதம்பரம் ஆவேசம்: நரேந்திர மோடி இந்தி பேசும் மக்களுக்கு மட்டுமா பிரதமர்?

திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார பிரதிநிதிகளின் மாநாடு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் வயலூர் முத்துலெட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ப.சிதம்பரம் பேசும்போது, கடந்த நாடளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து நாடு முழுவதும் மோடி குடுகுடுப்பைகாரன் போல நல்லாகாலம் பிறக்க போவுது என்று பிரச்சாரம் செய்தார். இப்போது யாருக்கு நல்லகாலம் பிறந்துயிருக்கு என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

விவசாயிகளுக்கு கொள்முதல் விலை என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசாங்கம். அதன் முதல் அரிசி, கோதுமை ஆகியவை நம்முடைய தேவைகளுக்கே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொண்டுயிருந்த நாம், தற்போது தன்னிறைவு பெற்று இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்தோம். ஆனால் இந்த மோடி அரசாங்கம் என்ன செய்தது இந்த கொள்முதல் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 50 மட்டும் உயர்த்தியிருக்கிறது. நாடு சென்று கொண்டுயிருக்கிற விலை ஏற்றத்தில் வெறும் ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாய் கொடுத்துயிருக்கிறார்கள். அப்போ யாருக்கு நல்லகாலம் வந்திருக்கிறது. 

நாங்கள் கடந்த ஆட்சியில் நிலம் ஆர்ஜிதம் செய்யும் சட்டத்தில் விவசாயிகளிடம் அனுமதி வாங்கி கொண்டு நிலத்தை எடுக்க வேண்டும், இரண்டாவது அந்த நிலத்தை எடுப்பதன் ஒரு பெரிய சமூகத்திற்கு மாற்றம் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இரண்டு பெரிய திருத்தம் செய்து அந்த சட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இந்த மோடி அரசங்கம் இந்த இரண்டு முக்கியமான விசயத்தை சீர்குலைத்து, நாசப்படுத்தி வெளிநாட்டுகாரர்கள் போல் இந்த சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள்.  யாருக்கு நல்லகாலம் வந்துயிருக்கிறது.

பெண்களுக்கு, அதுவும் தலித் பெண்கள், குடும்ப பெண்கள் தங்களுடைய கைகளில் பணம் புரள வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவந்தோம். ஆனால் இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக 40 நாள் வேலை கூட நடக்கவில்லை, மீதம் 60 நாள் வேலை என்ன ஆனது. இதற்கு ஒரு படிமேலே போய் பல மாநிலங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த 4 மாதம், 5 மாதம் சம்பளம் இன்னும் இல்லாமல் தவிக்கிறார்கள், யாருக்கு நல்லகாலம் வந்திருக்கிறது. 

காங்கிரஸ் ஆட்சியில் சுமார் 66 ஆயிரம் கோடி ரூபாய் மாணவர்களுக்கு கல்விக்கடன் கொடுத்தோம். அது இன்னும் 10 ஆண்டுகளில் மிகப்பெரிய பலனை கொடுக்க போகிறது. ஆனால் இந்த ஆட்சியில் இங்கே இருக்கிற யாரவாது ஒருவர்  உங்களுக்கு தெரிந்த யாரவது கல்விக்கடன் வாங்கியதை கேள்விப்பட்டது உண்டா ? அப்போது யாருக்கு நல்ல காலம் வந்திருக்கிறது.

கோடிக்கண ஊழல் வழக்கில் அமலாக்க பிரிவினரால் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடியவர் லலித்மோடி, காங்கிரஸ் ஆட்சியில் நான் தப்பியோடிய லலித்மோடியின் பாஸ்போட்டை முடக்கி அவரை திரும்ப விசாரணைக்கு இந்தியாவிற்கு ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்திற்கு கடிதம் எழுதினேன். ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் அதற்கு மழுப்பலான பதிலே அனுப்பியது. நான் மீண்டும் அவர்களுக்கு அவருடைய பாஸ்போட் ரத்து செய்யப்பட்டுவிட்டது, அவர் இப்போது குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி அவரை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று நான் எழுதின கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் பிஜேபியின் மூத்த அமைச்சர் ஒருவர் அவரை வேறு ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்கு அனுமதி கொடுக்க சிபாரிசு செய்கிறார், அவரை நல்லமுறையில் பாதுகாக்க வழிவகை செய்கிறார். இதை பற்றி எழுதாத ஊடங்களே கிடையாது. ஆனால் இது பற்றி மோடி பதிலே பேச வில்லை. 

மோடி வெளிநாட்டிற்கு செல்வதை நான் குற்றம் சுமத்தவில்லை. அவர் இதுவரை 24 நாடுகளுக்கு மேல் சென்றுயிருக்கிறார், இப்போது 8 நாளில் 5 நாடுகளுக்கு சென்றுயிருக்கிறார். ஆனால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஒருமுறை கூட வரவில்லையே, 8 நாளில் 5 நாடுகளுக்கு செல்லக்கூடியவர், 5 நாளில் 5 மாநிலத்திற்கு வரலாமே. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு பாண்டிசேரி இது எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்ட மாநிலங்களா? ஆந்திராவில் நடைபெற்ற வெள்ளத்தில் 100 மேற்பட்டோர் இறந்தார்கள். இங்கு நடைபெற்ற பேரழிவுகளுக்கு ஒரு முறை கூட வந்து பார்க்க தவிர்த்து வருகிறார். அவர் இந்தியாவிற்கு பிரதமரா? இந்தி மொழி பேசும் மக்களுக்கு பிரதமரா? 

இந்தியாவை தூய்மை படுத்துவோம் என்று இந்தியா முழுமைக்கும் விளம்பரம் செய்தது மட்டும் 94 கோடி ரூபாய். இந்தியாவில் எத்தனை பெண்கள் பள்ளிக்கூடங்களில் கழிவறை வசதியே இல்லாம் இருக்கிறது. இந்த விளம்பரம் கொடுப்பதற்கு பதிலாக ஒரு கழிப்பிடம் கட்டுவதற்கு 1 இலட்சம் செலவானாலும், 9.400 கழிப்பிடங்கள் கட்டியிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செலவு பண்ணாமல் விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு கோடியை செலவு செய்துயிருக்கிறார்.

இதை எல்லாம் நாம் கேள்விக்கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அதற்கான உரிமை எனக்கு இருக்கிறது, உங்களுக்கும் இருக்கிறது, அதை நாம் கேள்விக்கேட்க வேண்டும். இதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கலாம் ஒருவருட ஆட்சியிலே இந்தியாவின் நிலமை இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் போது இன்னும் இருக்கும் நான்கு வருடத்தில் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்கிற கவலையில் தான் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

ஜெ.டி.ஆர். nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக