சனி, 18 ஜூலை, 2015

பாஜகவை விட தனியார் துறைக்கே மோடியின் தலைமை அதிகம் தேவை!

குஜராத் முதல்வராக இருந்தபோது 2013-ல் இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, “அரசாங்கம் போட்ட சாலைகளில் தனியார் வாகனங்கள் போகும்போது, தனியார் விமானங்கள் அரசின் விமான நிலைய ஓடுபாதைகளில் பறக்கும்போது, ஏன் அரசாங்க தண்டவாளத்தில் தனியார் ரயில்கள் ஓடக்கூடாது?” என்று தனியார்மயமாக்கலை வெறியோடு ஆதரித்துப் பேசினார். பிரதமரான பின்னர், மேகாலயாவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய மோடி, ரயில்வே என்பது ‘வளர்ச்சி’யின் வாகனம், ரயில் நிலையங்களைத் தனியாரிடம் கொடுத்து விமான நிலையங்களைப் போல நவீனப்படுத்த வேண்டுமென்றார். மோடியின் நோக்கமே காங்கிரசு அரசை விஞ்சும் வகையில் தனியார்மயமாக்கலைத் தீவிரமாக்குவதுதான்.

அந்த நோக்கத்துடன், நட்டத்தில் இயங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவது பற்றி ஆராயப் போவதாக கூறிக்கொண்டு ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவுக்கு பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் பற்றிய நூல்களை எழுதியுள்ள நம்பகமான இந்துத்துவ விசுவாசியும், தனியார்மய தாசரும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவராய் என்பவரைத் தலைவராக நியமித்தார். அந்தக் குழுவும் ‘விரைவாக’ஆய்வு செய்து, மோடி என்ன எதிர்பார்த்தாரோ, அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வேயை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கான செயல் திட்டத்தைத் தமது பரிந்துரைகளாக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பித்தது.
“பயணிகள் போக்குவரத்தையும் சரக்கு போக்குவரத்தையும் கொண்டுள்ள தற்போதைய ரயில்வே மண்டலங்களில், ஒன்றில் ஏற்படும் நட்டத்தை மற்றது ஈடு செய்து கொள்வதற்கு மாறாக, ரயில்வே மண்டலங்களைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். எந்த மண்டலத்தில் நட்டம் அதிகமாக உள்ளதோ அதனை தனியாருக்கு விற்றுவிட வேண்டும். ரயில்வே துறையை உள்கட்டமைப்புக் கழகம், போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். தண்டவாளங்கள் போடுவது, சிக்னல்களை நிர்வகிப்பது முதலானவற்றைக் கொண்ட உள் கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகத்தை தனியார் நிர்வகிக்க வேண்டும். ரயில்பெட்டிகள், என்ஜின்களைப் பராமரிக்கத் தனியாருக்கு அனுமதியளிக்க வேண்டும்.
விவேக் தேவராய்.
இரயில்வே துறையைத் தனியார் முதலாளிகள் விழுங்குவதற்குப் பரிந்துரைத்துள்ள தனியார்மய தாசரும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவருமான விவேக் தேவராய்.
தற்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை முதலானவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். புறநகர் ரயில்கள் போன்ற அதிக இலாபமில்லாத ரயில் போக்குவரத்தை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட வேண்டும். பயணிகள் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தையும் நிர்ணயிப்பதில் அரசு தலையிடக் கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள ஏறத்தாழ 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது. அடுத்த ஆண்டிலிருந்து 7-வது ஊதியக்குழுவின் புதிய சம்பள விகிதங்கள் அமலுக்குவரும்போது ரயில்வே துறையில் கூடுதல் செலவாகும் என்பதால், ஏறத்தாழ 10 லட்சம் தொழிலாளர்களைக் குறைக்க வேண்டும். அவர்கள் செய்துவந்த பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்சினைகளையும் தாவாக்களையும் தீர்த்துக் கொள்ளவும், கட்டண நிர்ணயத்தைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்”
-என ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கான திட்டத்தை, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான கால இலக்குடன் அறிக்கையாகக் கொடுத்துள்ளது இக்குழு.
அதாவது, ரயில் தண்டவாளங்களை அரசாங்கம் பராமரிக்க, தனியார் முதலாளிகள் அதில் ரயில் விடுவார்களாம். பொதுச் சோத்தில் மஞ்சள் குளிப்பார்களாம்!
இப்பரிந்துரைகளைச் செயல்படுத்தினால், தற்போது பல தடங்களில் இயக்கப்பட்டுவரும் ரயில்களால் லாபமில்லை என்று நிறுத்தப்படும். வருமானம் அதிகமுள்ள பெரு நகரங்களுக்கு மட்டும் கூடுதல் கட்டணத்துடன் அம்பானி ரயில், அதானி ரயில்கள் சென்ட் மணக்க பளபளப்பாக இயக்கப்படும். சிறு நகரங்களுக்கும் ஊரகப் பகுதிகளுக்கும் செல்லும் ரயில்களும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும் ஒழிக்கப்படும்.
நட்டம் அதிகமாக உள்ள ரயில்வே மண்டலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு, கோடிக்கணக்கிலான ரயில்வே சொத்துக்கள் பறிபோகும். ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனமான தொலைத்தொடர்புத்துறை முடமாக்கப்பட்டதைப் போல, ரயில்வே துறையும் முடமாக்கப்படும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும். ஒப்பந்த சேவை அடிப்படையில் அற்பக் கூலிக்கு தொழிலாளர்கள் சுரண்டப்படுவார்கள். சீசனுக்கு ஏற்பவும், கிராக்கிக்கு ஏற்பவும் சாதாரண ரயில்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். இதனால் காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றப்படும்.
11-rail-cartoonஇருப்பினும், முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் ரயில்வே துறையை லாபகரமானதாக்கி, ‘வளர்ச்சி’யைச் சாதிக்க தனியார்மயம் அவசியம் என்று இதனை மோடி நியாயப்படுத்துகிறார். பேருந்துகளை வாங்கி தனியார் முதலாளிகள் இயக்குவதைப் போல, மூலதன அழுத்தமும் குறைவான லாபமும் கொண்ட ரயில்களை தனியார் முதலாளிகள் வாங்கி இயக்குவதற்கு மடியில் பணத்தைக் கட்டிக் கொண்டு தயாராக இருப்பதைப் போல பல திட்டங்களை மோடி கும்பல் அறிவித்த போதிலும் யாரும் முதலீடு செய்ய வரவில்லை. அரசாங்கம் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அதில் நான் டெலிபோன் கனெக்ஷன் கொடுக்கிறேன் என்று தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பொதுச் சொத்தில் மஞ்சள் குளித்ததைப் போல, அரசாங்கம் தண்டவாளம் போட்டு, ரயிலையும் கொடுத்தால் நான் அதிக கட்டணத்துக்கு அந்த ரயிலை ஓட்டுவேன் என்கிறார்கள் தனியார் முதலாளிகள். இதற்கு மாமா வேலை செய்கிறார் மோடி.
இந்திய ரயில்களில் அன்றாடம் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். பேருந்து போக்குவரத்தை விட, ரயில் போக்குவரத்துதான் மலிவானது, வசதியானது என்று சாமானிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே சாமானிய மக்கள் பயன்படுத்தும் முன்பதிவு செய்யப்படாத ரயில்பெட்டிகளை அதிகரிப்பதற்கு மாறாக ஏ.சி., பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, பாசஞ்சர் ரயிலை எக்ஸ்பிரஸ் ரயிலாக்குவது, எக்ஸ்பிரஸ் ரயிலை சூப்பர் பாஸ்ட் ஆக்குவது, பயணிகள் ரயில் கட்டண அதிகரிப்பு, தட்கல் திட்டத்தில் மாற்றம், பிரீமியம் ரயில், பிளாட்பார டிக்கெட் கட்டண அதிகரிப்பு – என அடுத்தடுத்து தாக்குதலை ஏவியது போதாதென்று, இனிமேல் ரயில்களை இத்தகையோர் பயன்படுத்தவே கூடாது என்று வர்க்கவெறியுடன் ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கிளம்பியுள்ளது மோடி அரசு. தனியார் முதலாளிகளுக்கு இலாப உத்திரவாதம் வேண்டுமென்பதால், பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக பயணிகள் ரயில்களை மாற்றுவது என்பதே மோடியின் திட்டம். இப்போது சென்னையில் தொடங்கப்பட்டுள்ள பளபளப்பான குளுகுளு மெட்ரோ ரயிலின்
அநியாயக் கட்டணத்தால், அதில் யாரும் பயணிக்க முடியாமல் வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. அதேபோல அனைத்து ரயில்களையும் மாற்றுவதுதான் மோடியின் நோக்கம்.
குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளரைக் கொண்டு அதிக லாபத்தை ஈட்டுவதுதான் தனியார் முதலாளிகளின் நோக்கமாக உள்ளபோது, தனியார்மயத்தால் சேவை அதிகரிக்கும் என்பது வடிகட்டிய பொய். இந்திய ரயில்வேயில், ரயில் பெட்டிகளையும், பெட்டிகளிலுள்ள கழிப்பறைகளையும் சுத்தப்படுத்துவது, ரயில் பயணத்தில் உணவு தயாரித்து பரிமாறுவது, ரயில் நிலைய கழிவறைகளைப் பராமரிப்பது முதலானவை ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தனியார் என்றால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்; தனியார்மயம் என்றால் சேவை நன்றாக இருக்கும் என்ற பொய்யை ரயில் பெட்டிகளின் கழிப்பறைகளே நாறடித்துக் கொண்டிருக்கின்றன.
பிரிட்டனில் 1990-களில் ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட விளைவுகள் குறித்து அரசியல் பொருளாதார நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு 2013-ஆம் ஆண்டில் “சமூக கலாச்சார மாற்றம் குறித்த ஆய்வு மையம்” என்ற அமைப்பால் அறிக்கையாக வெளியிடப்பட்டது. “தி கிரேட் டிரெயின் ராபரி” (மாபெரும் ரயில் கொள்ளை) என்று தலைப்பிட்டு, தனியார்மய தாசர்களின் முகத்தில் காறி உமிழாத குறையாக, தனியார்மயத்தால் சேவை அதிகரிக்கவில்லை, கட்டணக் கொள்ளைதான் தீவிரமாகியுள்ளது என்று அந்த அறிக்கை அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது.
இருப்பினும், இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்து, கோடிக்கணக்கான சொத்துக்களுடன் அடிக்கட்டுமான வசதிகளைக் கொண்டுள்ள நாட்டின் முதுகெலும்பான ரயில்வே துறையை, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யும் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனத்தை, மக்களின் வாழ்வோடு நெருக்கமான பிணைப்பைக் கொண்ட ரயில்வே துறையைத் தனியார் முதலாளிகள் விழுங்கி ஏப்பம் விடுவதற்காக அத்துறையைத் தனியார்மயமாக்க வெறியோடு அலைகிறது மோடி கும்பல். இந்த அநியாயத்தையும் பேரழிவையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?

– மனோகரன்  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக