புதன், 8 ஜூலை, 2015

அதிமுகவினர் 4 ஆண்டு வேதனை விளக்கக் கூட்டம் நடத்தலாம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் | கோப்புப் படம்
அதிமுகவினர் நான்கு ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூட்டம் நடத்த சொல்வது மிகவும் கேலிக்குரியது. அதை விட நான்கு ஆண்டு கால வேதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தலாம்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக அரசின் நான்காண்டு கால சாதனைகளை விளக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு தவறான தகவல்களை வழங்கியிருக்கிறார். எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மின்தேவை முற்றிலும் நிறைவு செய்யப்பட்ட மாநிலமாக தமிழகம் இப்பொழுது ஒளிர்கிறதாக கூறியிருக்கிறார். இதன்மூலம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

பொதுவாக மின்உற்பத்தி திட்டங்களில் பருவ மாறுதல்களுக்கு ஏற்பதான காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் நமக்குக் கிடைக்கும். இதை நிரந்தரமாக நம்பியிருக்க முடியாது. நிரந்தரமாக மின் உற்பத்தி செய்யும் அனல், புனல், அணு மின்சாரத்தை நம்பி தான் ஒரு பொறுப்புள்ள அரசு செயல்பட வேண்டும். ஒரு யூனிட் புனல் மின்சாரத்திற்கு 50 பைசா செலவாகிற நிலையில், சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்திற்கு ஏழு ரூபாய் விலை கொடுத்து வாங்குவது ஏன்?
காற்றாலை மின்சாரத்தை ரூபாய் 6 முதல் ரூபாய் 14 வரை விலை கொடுத்து வாங்குவது அவசியம் தானா? தமிழக அரசை பொறுத்தவரை நீர் மின் திட்டங்களையும், அனல்மின் திட்டங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வருடம் முழுவதும் தண்ணீர் இருந்தும் பாபநாசம் மின்திட்டம் மின் உற்பத்தி செய்யாமல் முடங்கி கிடக்கிறது.
அதேபோல நீலகிரி குந்தா, பைக்காரா நீர் மின் திட்டமும் செயலற்று கிடக்கிறது. இத்தகைய மின்நிலையங்களில் நிறுவுதிறனில் 50 சதவீததிற்கும் குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கோடை காலத்தில் 10 சதவீதத்திற்கு கூட மின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்நிலையில் செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கி விட்டு, தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூபாய் 10,000 கோடிக்கு மேல் வாரி வழங்குவதில் ஊழல் இல்லையென்று ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா?
இன்றைக்கு மின்தேவை முற்றிலும் நிறைவு செய்ததாக கூறுகிற ஜெயலலிதாவிற்கு ஒரு சவால் விட விரும்புகிறேன். 2001 ஆம் ஆண்டிற்கு பிறகு விவசாயிகள் பம்புசெட் நிறுவ மின் இணைப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை ஜெயலலிதா மறுக்க முடியுமா? 15 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்து வரும் கொடுமையை களைய ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது தலைமை செயலகத்திற்கு வருவது மிகமிக குறைந்து வருகிறது. அப்படியே வருகை புரிந்தாலும் பத்திரிகையாளர்கள் பார்வையில் படாமல் அலுவலகத்திற்கு வந்த ஒரு மணி நேரத்திற்குள் வீடு திரும்பி விடுகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லையென்று பல்வேறு செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் முதல்வர் பொறுப்பேற்று ஒருமுறை கூட அமைச்சரவை கூட்டத்தை நடத்தவில்லை. சக அமைச்சர்கள், முதலமைச்சரை பார்க்க முடியவில்லை. தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் தான் முதலமைச்சரை, சக அமைச்சர்கள் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது?
அதிமுகவினர் நான்காண்டுகால சாதனைகளை விளக்கி கூட்டம் நடத்த சொல்வது மிகவும் கேலிக்குறியது. அதை விட நான்காண்டுகால வேதனைகளை விளக்கிக் கூட்டம் நடத்தலாம்'' என்று கூறினா tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக