வியாழன், 25 ஜூன், 2015

சிறுமியை பலாத்காரம் செய்தவரோடு சமரசம் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு! லஞ்சம் லஞ்சம் ?

நான் எப்படி அந்த நபருடன் வாழ முடியும்?- சிறுவயதில் பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண் ஆதங்கம் 
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு பிற்போக்குத்தனமானது என சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறும்போது, "ஜாமீன் மனு மீது அது சாரா வேறு தீர்ப்பை வழங்கமுடியாது. குற்றவாளியே வழக்கில் இருந்து ஜாமீன் மட்டுமே கோரியிருக்கும் நிலையில் வழக்கை சமரச மையத்துக்கு எப்படி பரிந்துரைக்க முடியும்? இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட நபரின் சம்மதம் இல்லாமல் வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரைக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

பியுசிஎல் தேசிய பொதுச் செயலாளர் வி.சுரேஷ் கூறும்போது, "ஆதரவற்ற சிறுமியின் பலாத்கார வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பிற்போக்குத் தனமானது. பலாத்கார வழக்குகளின் நீதி பரிபாலனத்துக்கே எதிராக இருக்கிறது இந்த உத்தரவு. சட்ட வரம்புகளைக் கடந்து பலாத்கார வழக்குகளை சமரசம் செய்ய முடியாது. எனவே இந்த வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்துள்ளது பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் வன்முறைக்கு உட்படுத்துவதேயாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் நாகசைலா, "இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது சட்ட விரோதமானது, அடிப்படையற்றது. ஒரு குற்றம் நடைபெறும்போது அந்தக் குற்றம் சமுதாயத்துக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. எனவேதான், இத்தகைய குற்ற வழக்குகளில் அரசு பிரதிவாதியாக இருக்கிறது. எனவே குற்றங்களுக்கு ஏற்ப தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த உத்தரவோ நீதி பரிபாலனையின் அடிப்படையையே அசைத்துப் பார்ப்பதாக இருக்கிறது.
ஏமாற்று, பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற சிறு வழக்குகளை மட்டுமே நீதிமன்ற அனுமதியுடன் சமரச மையத்துக்கு பரிந்துரைக்க முடியுமே தவிர பாலியல் பலாத்காரம் போன்ற பெருங் குற்றங்களை கடினமாக கையாள வேண்டும். பலாத்கார வழக்குகளை சட்ட வரையறைக்கு அப்பாற்பட்டு சமரசம் செய்ய முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை அறியாமல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அருவருக்கத்தக்கது.
மேலும், நீதிமன்ற உத்தரவில், தகப்பன் இல்லாத குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதியை கண்டுகொள்ளவில்லை. ஒரு பலாத்காரகரை நம்பி ஒரு பெண், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை எப்படி ஒப்படைக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
நான் எப்படி அந்த நபருடன் வாழ முடியும்?
கடலூரைச் சேர்ந்த 22 வயது லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தி இந்து-விடம் தொலைபேசியில் பேசியபோது, "அந்தச் சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னமும் என் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. குழப்பமும், பதற்றமும் மட்டுமே என் வாழ்வில் எஞ்சியிருக்கிறது.
நீதிமன்றம், வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரைத்திருப்பது எனக்குத் தெரியாது. ஆனால் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபரின் குடும்பத்தார் பல மாதங்களாகவே சமரசம் பேச முயன்று வருகின்றனர். (லட்சுமியின் பக்கத்து வீட்டில்தான் குற்றவாளியும் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது).
ஆனால், என்னால் எப்படி அந்த நபருடன் என் எதிர்காலத்தை தொடர முடியும். இதே போன்ற நிலை அவரது சகோதரிக்கு நேர்ந்திருந்து அப்போது நீதிமன்றம் இத்தகைய யோசனையை சொல்லியிருந்தால் அதை அவர் எளிதாக ஏற்றுக்கொண்டிருப்பாரா? அந்த சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளில் அவர் ஒரு முறைகூட எங்களை திரும்பிப் பார்த்ததில்லை. என் குழந்தையை தொட்டு தூக்கியதில்லை.
டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை அந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என்றே கூறிவந்தார். சிறைக்கு செல்லும் முன்னரே சமரசத்துக்கு வந்திருக்கலாமே. சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு ஏன் சமரசம் பேச முயல வேண்டும். சிறைவாசத்தை தவிர்க்கவே இந்த முயற்சியெல்லாம். அவரைப் பார்த்தாலே எனக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை.
அப்படி ஒரு சூழலில் கணவன் - மனைவியாக எப்படி வாழ முடியும். எனக்கு அவர்பால் எந்த உரிமை உணர்வும் இல்லை" என் ஆதங்கம் எல்லாம் இந்தக் குழந்தையும் இவ்வுலகத்தில் எப்படி வாழப்போகிறேன் என்பதே. என்னையும், என் குழந்தையையும் என் தாயாரே கவனித்துக் கொள்கிறார். அவரது காலத்துக்குப் பிறகு எங்கள் நிலைமை?" என பேச்சை முடித்தார்.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக