செவ்வாய், 23 ஜூன், 2015

சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசிய ஒரே தகுதியில் ஜெயலலிதாவின் நத்தம் விஸ்வநாதன்

whiskey-bottles-photoநத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்…. 1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர்.  ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.  அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார் என்ற கருத்தும் உண்டு. அதன் பின் தனிக் கட்சி தொடங்கி, மீண்டும் தற்போது அதிமுகவிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.  ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சிக் காலம், ஏகப்பட்ட ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருந்ததால், தனிப்பட்ட முறையில் பெரிதாக பணம் பண்ணியவர் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது.

தற்பொழுதைய ஆட்சியில், ஜெயலலிதா மற்றும் மன்னார்குடி மாஃபியாவின் முழு நம்பிக்கையைப் பெற்று, அமோக வசூல் செய்து வருபவர், நத்தம் விஸ்வநாதன்.   தமிழக வரலாற்றிலேயே, மிக மிக அதிகமாக சம்பாதித்தவர் என்ற பெயரை பெறும் அளவுக்கு இன்று நத்தம் முன்னேறியிருக்கறார் என்றால் அது மிகையல்ல.   எத்தனையோ குற்ற்ச்சாட்டுகள் இருந்தாலும், மன்னார்குடி மாஃபியா மற்றும் ஜெயலலிதாவின் முழுமையான நம்பிக்கையை பெற்றவராக திகழ்கிறார் நத்தம்.
மதுபானக் கடையில் ஒவ்வொரு முறை ஒரு க்வார்ட்டர் வாங்கப்படுமேபோதும், ஒவ்வொரு முறை மின் வெட்டின் போதும், நத்ததித்தின் பாக்கெட்டுகள் நிரம்புகின்றன.

ஒரு வகையில் தமிழகம் ஒரு புதிரான மாநிலம்தான்.    ஒரு புறம் சமூக பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், மற்றொரு புறம் மதுவுக்கு அடிமையாக மாறி வருகிறது. தமிழகமே இருளில் மூழ்கிக் கிடந்தாலும், நத்தத்தின் பாக்கெட்டுகள் நிரம்புவது நிற்கவேயில்லை.   இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கான காரணம், இவர் பொறுப்பாக இருக்கும் மின்துறை மற்றும் கலால் துறை.  தமிழக அமைச்சரவையில் வேறு எந்த அமைச்ருக்கும் இத்தனை செல்வாக்கு இருந்தது கிடையாது.    தனியாரிடமிருந்து மின் கொள்முதல் மற்றும், டாஸ்மாக்கில் வேண்டிய நிறுவனங்களுக்கு சப்ளை ஆர்டர்.  இவை இரண்டும் நத்தம் விஸ்வநாதனை கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.     தமிழகத்தில் உள்ள பள்ளிகளையும், பொதுக் கழிப்பிடங்களையும் இணைத்து வரும் தொகையை விட, டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் அதிகமாகி உள்ளது என்கிறது ஒரு புள்ளி விபரம்.
ஆசிட் காயங்களோடு சந்திரலேகா ஐஏஎஸ்
ஆசிட் காயங்களோடு சந்திரலேகா ஐஏஎஸ்
சந்திரலேகா ஐஏஎஸ் முகத்தில் ஆசிட் வீசியவர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், கடந்த 15 ஆண்டுகளுக்குள், அனைத்து அதிமுக தலைவர்களையும் ஓரங்கட்டி, இன்று முதலிடத்தில் கொடிகட்டிப் பறக்கிறார் நத்தம்.  ஜெயலலிதாவின் நேரடி மேற்பார்வையில், பல நூறு கோடிகளை சுரண்டி கொழுத்திருக்கும் நத்தம் விஸ்வநாதனை முதலமைச்சர் ஆக்கியிருக்க வேண்டும் என்கின்றனர் நத்தம் விஸ்வநாதனின் விசுவாசிகள்.  தலைமைச் செயலக வட்டாரங்களில் முணு முணுப்பது என்னவென்றால், நத்தம் விஸ்வநாதனும அவர் மகனும், இந்த ஆட்சியில், இந்நாள் வரை 4000 கோடிக்கும் அதிகமாக சுரண்டியிருப்பார்கள் என்கின்றன மதிப்பீடுகள்.
நத்தத்தின் பணம் சம்பாதிக்கும் திறன், அதிமுகவில் உள்ள அனைவரும் அறிந்ததே. டாஸ்மாக்கின் வருமானத்தை வைத்துத்தான், அம்மாவின் இலவச திட்டங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.  ஒரு புறம், இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், விசித்திரமாக இன்னொரு புறம், டாஸ்மாக்கின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கிறது.    இதை சரிக்கட்டுவதற்காக, விலையை ஒரு புறம் உயர்த்திக் கொண்டே செல்கிறது அரசு.
மின் துறையைப் பொறுத்தவரை, எண்ணூரில் அமைந்துள்ள ஒரே ஒரு மின் திட்டம்தான், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தை லான்கோ இன்ஃப்ராடெக்  நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது மின் வாரியம்.   மீதம் உள்ள அனைத்து திட்டங்களும், திமுக அரசால் உருவாக்கப்பட்டவை. லான்கோ திட்டம் கூட, திமுக அரசு ஆலோசித்து வந்த திட்டமே.
அதிமுக அரசு உருவாக்கிய, என்ணூர், இரண்டாவது 1320 மெகாவாட் திட்டமும், உடன்குடி மின் திட்டமும், நீதிமன்ற வழக்குகளில் மாட்டிக் கொண்டு முடங்கிப் போயுள்ளது.   எந்த காரணத்தையும் சொல்லாமல், சீன நிறுவனம் குறைந்த விலைக்கு டெண்டர் கோரியுள்ளது என்ற ஒரே காரணத்துக்காக, அந்த டெண்டரே ரத்து செய்யப்பட்டது.  காரணமின்றி டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு  கண்டனங்களை தெரிவித்திருந்தாலும், மூன்றாவது முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணன், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் நத்தம் விஸ்வநாதனால், வலுக்கட்டாயமாக ரத்து செய்யப்பட்டது. இதுவும் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதில் பெருமளவு பணம் கைமாறியுள்ளது என்று மின் வாரிய வட்டாரங்கள்  கூறுகின்றன.   இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தாமதிக்கப் பட்டாலோ, தொடர்ந்து தனியாரிட மிருந்து மின்சாரம் வாங்க முடியும் என்ற ஒரே காரணத்தினாலேயே இந்த மின்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெங்கட்ரமணன் ஐஏஎஸ்
வெங்கட்ரமணன் ஐஏஎஸ்
திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, மின்  வெட்டை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மின்வெட்டை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல.. நத்தம் தலைமையிலான மின்துறை, ஒவ்வொரு மின் திட்டத்தையும் எவ்வாறு தாமதப்படுத்துவது என்ற ஒரே குறிக்கோளோடு முனைப்பாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.    தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்வதில் மட்டும் நத்தம் விஸ்வநாதனுக்கு மாதந்தோறும் 25 கோடி வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
நத்தம் விஸ்வநாதனுக்கு எந்தெந்த வழிகளில் பணம் வருகிறது என்று பார்ப்போம்.
  • சட்டவிரோதமான சரக்கு விற்பனை
  • ஒவ்வொரு கிராமத்திலும், யார் பார் நடத்துவது என்று ஏலம் விடுதல்
  • பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு மது விற்பனை நடத்தும் பார்கள்.
  • எம்ஜிஎம் நிறுவனத்திலிருந்து அதிகப்படியாக கொள்முதல் செய்வதற்கு அவர்கள் தரும் ஊக்கத்தொகை.
நத்தம் விஸ்வநாதனின் மாதாந்திர வருமானம் உத்தேசமாக
  • 12 பாட்டில்கள் அடங்கிய 40 லட்சம் பெட்டிகளின் மூலமாக ஒரு மாதத்துக்கு, ஒரு பெட்டிக்கு 60 ரூபாய் வீதம் 24 கோடி.
  • 12 பாட்டில்கள் அடங்கிய ஒரு பெட்டிக்கு 40 வீதம், 25 லட்சம் பெட்டிகளுக்கு 12 கோடி.
இந்த மதுபான விற்பனை மூலமாக மட்டும் நத்தம் விஸ்வநாதனுக்கு ஒரு மாதத்துக்கு 408  கோடி வசூல் ஆகிறது.
இது மாதந்தோறும் வசூலிக்கும் தொகை.  டாஸ்மாக்கில் புதிய ப்ராண்டுகளை அறிமுகப்படுத்துவதற்கு, ஒரே தவணையில், புதிய சரக்கை விற்பனை செய்யும் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.
  • புதிய வகை மதுபானம் / பீர்களை அறிமுகப்படுத்த 60 லட்சம் (சராசரியாக ஒரு ஆண்டுக்கு 20 புதிய ப்ராண்டுகள் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகின்றன.
  • நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார் லைசென்சுகளை (FL3 license) புதுப்பிக்க ஒரு வருடத்துக்கு 25 லட்சம் என்ற வகையில் ஆண்டுக்கு 100 கோடி. (மொத்த பார்களின் எண்ணிக்கை 400)
  • டாஸ்மாக் பார்களுக்கான லைசென்சுகள் வழங்க, 5 முதல் 10 லட்சம் (வாடிக்கையாளரின் சக்திக்கு ஏற்ப) மொத்தம் உள்ள 800 பார்களையும் கணக்கில் எடுத்தால், இது மட்டுமே 80 கோடி.
  • டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் மற்றும், அதிகாரிகளின் இடமாற்றத்துக்கு சராசரியாக ஒரு லட்சம். வருடத்துக்கு இத்தொகை 5 கோடி.
இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால், (ஜெயலலிதாவின் பங்கு இல்லாமல்) நத்தம் விஸ்வநாதனுக்கு மட்டும் ஆண்டு வருமானம், 800 கோடி.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களில் அதன் அசல் தன்மையை காண்பிக்கும் வகையில், “ஹோலோகிராம்” எனப்படும் தமிழக அரசின் முத்திரையோடு உள்ள பளபளக்கும் ஸ்டிக்கர்கள் அனைத்து பாட்டில்களின் மீதும் ஒட்டப்படும்.   இந்த ஹோலோகிராம் ஒட்டும் பணியை இவ்வளவு நாளாக செய்து வந்தது, “கும்பத் ஹோலோகிராம்” என்ற நிறுவனம். திடீரென்று இந்த நிறுவனத்தை வெளியேற்றி விட்டு, “யுஃப்ளெக்ஸ்” என்ற புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தந்திருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். இதற்கான பின்புலம் என்னவென்றால், கும்பத் நிறுவனம் சரிவர பணிகளைச் செய்யவில்லை என்பதல்ல…..  நத்தம் கேட்ட 10 சதவிகிதத்தை இந்நிறுவனம் தர மறுத்ததே காரணம்.  கும்பத் ஏற்கனவே 5 சதவிகிதம் தந்து கொண்டிருந்தனர். தற்போது 10 சதவிகிதம் வேண்டும் என்று கேட்டபோது, கும்பத் நிறுவனம் மறுத்ததே இதற்கான முக்கிய பின்புலம்.    ஜெயலலிதா எப்படியும் தண்டிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்த்த நத்தம் அவ்வாறு நடைபெறாத காரணத்தால் தற்போது தாற்காலிகமாக இம்முடிவை தள்ளிப் போட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருந்தால், மற்றொரு புறம், நத்தம் விஸ்வநாதனின் மகன், அமர், ஜெகதரட்சனோடு இணைந்து, இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அன்ட் வைன்ஸ் மற்றும், மோகன் ப்ரூவரிஸ் ஆகிய நிறுவனங்களை திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதரட்சகனோடு சேர்ந்து, ஆட்டையைப் போட முயன்று கொண்டிருக்கிறார்.     இந்த அரசு வந்த பிறகு, சரிவர ஆர்டர்கள் தரப்படாத காரணத்தால், மோகன் ப்ரூவரிஸ் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  .
ஜெயலலிதா, தன்னை வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டு ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் அதானி சகோதரர்களை நத்தம் விஸ்வநாதன் சந்தித்தார் என்பது ஜெயலலிதாவுக்கே தெரியாது.    17 பிப்ரவரி 2015 அன்று, டெல்லியில் நடந்த எரிசக்தி தொடர்பாக நடந்த மாநாட்டுக்குப் பிறகு கவுதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானியை சந்தித்திருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். 
டெல்லியில் 17.02.2015 அன்று நடந்த மாநாட்டில் நத்தம் விஸ்வநாதன்
டெல்லியில் 17.02.2015 அன்று நடந்த மாநாட்டில் நத்தம் விஸ்வநாதன்
அந்த சந்திப்பின் பின்னணியில்தான், அதானி தமிழகத்தில் 1000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி ஆலையை உருவாக்க இருக்கிறார்.  இணைப்பு
ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்த 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க  அதானியோடு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.  முதல் தவணையாக 200 மெகாவாட்டுக்கு மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூரிய ஒளி காற்றாலைகளுக்கான நிலங்களை கண்டுபிடித்து, அடிமாட்டு விலைக்கு அந்த நிலங்களை அதானிக்காக வாங்கி வருபவர், நத்தம் விஸ்வநாதனின் மகன், அமர்.    வெளிப்படையாகவே, நிலம் கூடுதல் விலைக்குத்தான் வழங்கப்படும் என்பது அடானி குழுமத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.    முதல் தவணையாக 50 லட்சம் இது வரை வழங்கப்பட்டுள்ளது.  ஒரு மெகாவாட்டுக்கு 30 லட்சம் வீதம் பேரம் பேசப்பட்டுள்ளது.   இந்த சூரிய ஒளி மின் திட்டம் வாங்குவதற்காக 5000 ஏக்கர் நில ஆக்ரமிப்பு செய்யப்பட உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.  அதானியோடு ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக, ஜெயலலிதாவின் அனைத்து நடவடிக்கைகளும், அதானிக்கும், அதானி மூலமாக மோடிக்கும் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.   சட்டவிரோதமாக பலரின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் “மக்கள் டிஜிபி” நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது உதவியாளர்களின் தொலைபேசிகளையும், அல்லது அதானி சகோதரர்களின் தொலைபேசியையும் ஒட்டுக் கேட்டால் முழு உண்மையும் தெரியும். ஆனால், அவருக்கு ஜெயலலிதாவை விட நத்தம் விஸ்வநாதன் முக்கியம் என்பதால் அவர் உண்மையை உள்ளது படி சொல்ல மாட்டார்.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, மத்திய அரசுக்கு, மத்திய உளவு நிறுவன அதிகாரிகள் தகவல் அளித்தால், எப்போதுமே அந்த தகவல் மத்திய அரசுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பதன் மர்மம் என்ன என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்.   அந்த மர்மம், அடானி சகோதரர்களோடு நத்தம் காட்டும் நெருக்கமே…..
நிலக்கரி இறக்குமதியில் தன்னுடைய பங்கை சராமாரியாக நத்தம் உயர்த்தியிருந்தாலும், நிலக்கரி இறக்குதி குறித்து, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை (Directorate of Revenue Intelligence) அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி குறித்து விசாரணை நடத்துகிறது என்பதை மட்டும், ஜெயலலிதாவிடமிருந்து வசதியாக மறைத்து விட்டார் நத்தம்.  தமிழக மின்வாரியத்திற்கு, நிலக்கரி வாங்குவது தொடர்பாக பல்வேறு சாட்சியங்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, விசாரித்து வருகிறது என்ற விஷயம், ஜெயலலிதாவுக்கு தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை.   கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நிலக்கரி இறக்குமதியில், மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்பதும், அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்படியே நடந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயம்.
நத்தம் சம்பாதிக்கும் பணம் எங்கே ?
பணத்தை பதுக்குவதில் நத்தமும் அவரது மகன் அமரும், சமர்த்தர்கள்.  கடந்த நான்கு ஆண்டுகளாக நத்தம் விஸ்வநாதனும் அவரது மகனும் சம்பாதித்த பணங்களில் பெரும்பாலான தொகையை வெளிநாடுகளில் பதுக்கியுள்ளனர்.     இந்தியாவில், ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கம் தொடர்பான தொழில்களில், பெரும்பாலான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலைகளான, கொல்கத்தா மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பரசமால் லோதா என்ற ரியல் எஸ்டேட் முதலையிடம், நத்தத்தின் பல்வேறு படங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பரசமால் லோதா
பரசமால் லோதா
இந்த லோதாவின் பின்னணியும் சுவராஸ்யமானது.   இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்ன எல்ஐசிக்கே சவால் விடும் வகையில் நடத்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனமான பியர்லெஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவர்தான் இந்த லோதா.      உலகெங்கும் பல்வேறு இடங்களில் நிதி மற்றும் இன்ன பிற தொழில்களில் லோதாவுக்கு முதலீடு உண்டு.   இது போன்ற தொழில்களில் ஈடுபடுவோருக்கு, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மிக மிக எளிதான காரியம் என்பதாலேயே, லோதாவை தேர்ந்தெடுத்துள்ளார் நத்தம் விஸ்வநாதன்.
நத்தத்திடம் உதவியாளராக உள்ள கோபி என்பவர் நத்தத்துக்கு நெருங்கிய உறவினர்.  இவர்தான் நத்தம் சார்பாக பல்வேறு வசூல்களையும் செய்கிறார். மின் வாரியத்துக்கே சென்று வசூல்களை செய்யும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவர். நத்தத்தின் சகோதரரான மேகநாதன் என்பவரும், அவர் மகன் ராம் என்பவரும், இந்த வசூலை பார்த்துக் கொள்கிறார்கள்.    கோபி, மேகநாதன் மற்றும் ராம் ஆகியோரின் மூவர் கூட்டணி, வெளிப்படையாகவே கூறுவது என்னவென்றால், டாஸ்மாக் சில்லரை கடைகளில் பாட்டில் விலைகளை விட அதிகமாக செய்யப்படும் வசூலில் வரும் தொகையில் பெரும்பகுதி, ஜெயலலிதாவுக்கு செல்கிறது என்பதே.
நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர், அடிக்கடி சிங்கப்பூர், துபாய் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.  எதற்காக இந்த பயணங்கள் என்றால், சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்காகவே.    சமீப காலங்களாக, சென்னை, கோவை மற்றும் பெங்களுருவில் அலுவலகங்களை வைத்திருக்கும் “காஸா க்ராண்ட்” என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், அமர் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பொருளாதார சரிவால், முடங்கியும், கடும் பின்னடைவையும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  காசா க்ராண்ட் மட்டும், புதிது புதிதாக ஃப்ளாட் கட்டுமானத்தை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. சக ரியல் எஸ்டேட் நிறுவனங்களே வியப்புள்ளாகும் வகையில், காஸா க்ராண்ட் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.    இது அனைத்தும் அமரின் முதலீட்டால் மட்டுமே சாத்தியமானது.
நத்தம் விஸ்வநாதன் ஈடுபடும் பல்வேறு வசூல் வேட்டைகளில் பெரும் பான்மையானவை, ஜெயலலிதாவுக்கு தெரியாதது என்றே கூறுகின்றனர்.   ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடக்கிறதா, அல்லது தெரியாமல் நடக்கிறதா என்பது நமக்குத் தெரியாது.  ஆனால், ஜெயலலிதா இருக்கையிலேயே திமுக முன்னாள் அமைச்சரும், பெரும் செல்வந்தரும், கல்விக் கொள்ளையருமான ஜெகதரட்சகனோடு சேர்ந்து தொழில் செய்ய நத்தம் முனைகிறார் என்றால், அவர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறை செல்வதையே நத்தம் விரும்புகிறார் என்றே பொருள் கொள்ள முடியும்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்
என்கிறார் வள்ளுவர்.
நத்தம் செய்வது அனைத்தும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடப்பது என்று ஒரு நாளும் கூற முடியாது.    டாஸ்மாக்கிலும், மின் வாரியத்திலும் நடக்கும் கொள்ளைகளை ஊரே அறியும்.  ஜெயலலிதா அறியாமல் இருக்க மாட்டார்.  ஆனால், ஜெயலலிதாவுக்கும் தெரியாமல், பல்வேறு வேலைகளை நத்தம் விஸ்வநாதன் செய்து வருகிறார் என்பதே உண்மை.
tamil-nadu
ஜெயலலிதா சிறை சென்ற பிறகு, பதவியேற்கையில், அனைத்து மந்திரிகளும் முதலைக் கண்ணீர் வடித்துப் பதவியேற்ற போதே ஜெயலலிதா இவர்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.   ஆனால் ஜெயலலிதா ஒரு முன்னாள் நடிகை என்பதாலோ என்னவோ, இது போன்ற நடிப்புகளையே விரும்புகிறார். குனிந்து கூழைக் கும்பிடு போடுபவர்களை நமது உண்மை விசுவாசிகள் என்று நம்புகிறார்.    இப்படி கூழைக் கும்பிடு போட்டு, முதலைக் கண்ணீரை வடிய விடுபவர்கள் போலிகள் என்பது ஜெயலலிதாவுக்கு நன்றாகத் தெரியும்.   ஆனால், இது போன்ற போலி முகமூடி அணிபவர்களையே அவர் மனது ரசிக்கிறது.  அந்த போலித்தனத்தில் ஆழ்ந்து நீந்த அவர் மனம் விரும்புகிறது..savukkuonline.com
_MG_1591

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக