வியாழன், 25 ஜூன், 2015

காக்காமுட்டை பாட்டி: கைதட்டலுக்காக 76 ஆண்டுகள் காத்திருந்தேன்

காக்காமுட்டை' படத்துல பசங்களுக்கு பாட்டியாக நடித்து சிரிக்கவும், நெகிழவும் வைத்த பாட்டியை தேடிச் சென்றோம்...
''50 வருஷத்துக்கும் அதிகமாவே சினிமாவுல இருக்கேன். இப்போதான் எனக்கு பெரிய அங்கீகாரம் கிடைச்சுருக்கு'' -வெற்றிலை போட்டபடி பேச்சை தொடர்கிறார் சாந்திமணி பாட்டி.

''என் உண்மையான பேரு சரோமி தைரியம். பிறந்து வளர்ந்தது எல்லாமே சேலம். என் கூட பிறந்தவங்க ஆறு பேர். எல்லாரும் படிச்சு நல்ல நிலையில, பெரிய பெரிய வேலைல இருக்காங்க. எனக்கு மட்டும் அப்போயிருந்தே சினிமா மேல கொள்ள ஆசை. சினிமாவுல எப்டியாவது பெரிய நடிகையா ஆகிடணும்ன்னு ஒரு வெறி. அப்போ எங்க தெருல தெருக்கூத்து நடக்கும் அதப் பாத்து பாத்து எனக்கு சினிமாவுல நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசையாப்போச்சு. சுத்தி இருக்குறவங்க எல்லாம் சென்னைக்கு போனாதான் சினிமாவுல நடிக்கமுடியும்ன்னு பேசுறது கேட்டுட்டு, எங்க அக்கா வேலைக்கு போய்  வாங்கி வச்சிருந்த  சம்பளம் 400 ரூபாய எடுத்துட்டு ரயில் ஏறி சென்னை வந்துட்டேன்.
இங்க எனக்கு யாரையுமே தெரியாது. நடிக்கணும்ன்ற ஆர்வம் மட்டும் கொழுந்துவிட்டு எரிஞ்சது .

சேலத்துல இருந்தப்போ அங்கே மார்டன் தியேட்டருக்கு எஸ்.ஆர்.ஜானகி அம்மா வருவாங்க. அப்போ பழக்கம். சென்னை வந்ததும் நேரா போய் அவங்க வீட்டுக்கு போனேன். எனக்கு முழு ஆதரவு கொடுத்தது அந்த அம்மாதான். நாடகத்தில் நடித்தால்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி, பக்கத்து தெருவில் இருந்த குடந்தை மணி அணியில் என்னை சேர்த்துவிட்டார். ஆறு மாதங்கள் எனக்கு பயிற்சி அளித்தார். மேடையேறி பேசவே அவ்வளவு பயம் எனக்கு. அதனாலேயே பீச்சில் போய் உட்கார்ந்து கத்தி கத்தி டயலாக் பேசி பழக சொல்லுவார். நானும் அப்படியே செய்தேன். அவர் நாடகங்களுக்கு அசோசியட் ரைட்டராக இருப்பதுடன், நடிக்கவும் செய்தார். பின்னர் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாடகத்தில் நான் ராணியாகவும், அவர் ராஜாவாகவும் நடித்தோம். அடுத்தடுத்த 20க்கும் மேற்பட்ட நாடகங்களில் சேர்ந்து நடித்தோம்.

பின்னர், ஒரு கட்டத்தில் நாடக கம்பெனி நஷ்டமடைய, நடிப்புக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் எனக்கு சம்பளமே வேண்டாம் என்று நடித்தேன். பின்னர் தேவி நாடக சபாவில் இணைந்து நடிக்க கற்றுக் கொண்டேன். எஸ்.ஆர். ஜானகி அம்மாவே என்னை அழைத்துச் சென்று நடிகர் சங்கத்தில் என்னை மெம்பராக சேர்ந்து விட்டிருந்தார். அதன் தலைவராக இருந்தவர் எஸ்.எஸ்.ஆர். அப்போது எனக்கும், குடந்தை மணிக்கும் காதல். இருவரும் வேறு வேறு மதம் என்பதால் வீட்டில் ஒப்புக் கொள்ளவேயில்லை.

பின்னர் என் கணவர் என் பெயரை சாந்தி என்று மாற்றினார். இருவரது வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. ஒரு வழியாக மாமியார் வீட்டில் ஒப்புக்கொண்டார்கள். திருமணம் ஆனதும் சினிமா வேண்டாம் என்று சொல்லி, என் கணவரின் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு அழைத்துச் சென்றார். அதற்கு பிறகு 15 வருடங்கள் சினிமாவை விட்டே விலகியிருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்தோம். ஆனால் குடும்பம், குழந்தை என்று சினிமாவை விட்டே விலகியிருக்க வேண்டியதாய் இருக்கிறதே என்று அழுதேன். திருமணமாகி ஐந்து வருடங்கள் எனக்கு குழந்தையில்லை. பின்னர் ஒரு வழியாக ஐந்து வருடங்கள் கழித்து எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் பிறந்தது. சினிமாவில் எனக்கு இந்த பாத்திரம் என்று நினைத்தேதான், என்னுடைய நிஜவாழ்க்கையை வாழ்ந்தேன்.
அப்போது நிறைய வறுமை வேறு. கணவரும் அடிக்க ஆரம்பித்தார். நீ இருப்பதால்தான் என்னால் டைரக்டர் ஆக முடியவில்லை. குழந்தைகளை என்னிடம் விட்டுவிட்டு நீ எங்கயாவது போய்விடு என்று என்னை தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தார். இருவீட்டிலும் எனக்கு ஆதரவில்லை. மாமியாரோ குழந்தைகள் வேண்டுமென்றால் பொறுத்துக் கொண்டிரு என்று சொல்லிவிட்டார். சொல் பேச்சு கேக்காமல் சினிமாவில் தான் நடிப்பேன் என்று வீட்டை விட்டு ஓடியதால், எங்கள் வீட்டில் சுத்தமாக பேசக்கூட முடியாது. இந்நிலையில், நான் என்ன செய்ய முடியும்? ஒரு வழியாக குழந்தைகளை அவரிடமே விட்டுவிட்டு நான் மட்டும் மீண்டும் ரயிலேறி சென்னை வந்துவிட்டேன். இங்கே வந்து கோடம்பாக்கத்தில் ஏ.எஸ்.மணி என்பவரது வீட்டில் தங்கிக் கொண்டு நடிக்கச் செல்வேன். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன்.

அந்தக் காலத்தில் நான் நன்றாக ஹைட் அன்ட் வெயிட்டாக இருந்ததால் என்னை ஸ்டன்ட் நடிகையாக மாற்றினார்கள். ஒரு நாள் ஸ்டன்ட் சென்று வந்தால் 500 ரூபாய் வரை கிடைக்கும். எந்தப் பணத்தையும் நான் எடுத்துக் கொள்ள மாட்டேன். அப்படியே ஏ. எஸ்.மணியிடம் கொடுத்துவிடுவேன். குழந்தைகள் வளர்ந்ததும் ஒவ்வொருவராக என்னிடம் வந்து விட்டர்கள். பின்னர் குழந்தைகளுக்கு மட்டும் தனிவீடு பார்த்து தங்கவைத்தேன். நான் மட்டும் கோடம்பாக்கத்தில் இருந்து கொண்டு திரைப்படங்களில் நடித்தேன். ஒரு சீன், இரண்டு சீன் என்று நடித்துக் கொடுத்தால் அப்போது பத்து ரூபாய் தான் கிடைக்கும். பின்னர் குதிரை ஓட்டவும் கற்றுக் கொண்டேன்.

பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில், கூட்டத்தோடு கூட்டமாக நடித்திருக்கிறேன்'' என்றவர் தொடர்ந்து காக்காமுட்டை வாய்ப்பு குறித்து பேசினார்.

நடிகர் சங்கத்தில் மெம்பராக இருப்பதால் பாட்டி வேடம் என்று சொல்லி என்னை அழைத்தார்கள். என்னோடு 27 பேர் வந்திருந்தார்கள். 27 பேரும் வரிசையாக நிற்க, மணிகண்டன் என்னை தேர்வு செய்தார். பிறகு தொடர்ந்து படப்பிடிப்பு வேலைகளில் கலந்து கொண்டேன். இன்னொரு பெரிய பிரச்னையாக, தவமிருந்து பெற்ற மூத்தப் பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்த்திருந்தார்கள். சிகிச்சை பலனளிக்காமல் அவள் இறந்தும் விட்டாள்.

சூட்டிங் முடிந்து ஒரு வருடம் வரை படம் திரையிடப்படவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாகிப்போச்சு. என்னைப் பார்த்து என் மூத்தப் பொண்ணு கற்பகமும், சினிமாவில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தாள் டப்பிங் பேசினாள். நான் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்று பெரிதும் விரும்பினாள். ஆனால் இந்த வெற்றியை பார்ப்பதற்கு முன்னதாகவே இறந்தும் விட்டாள்.

முதல் நாளே மினி உதயம் தியேட்டரில் போய் மகள், பேரன் பேத்திகளுடன் போய் திரைப்படம் பார்த்தேன். என்னை ஸ்கிரீன்ல  பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. வெளியில் வந்தவுடன் அப்படியே ரவுண்ட் கட்டிவிட்டார்கள். பாட்டி இங்க வாங்க...னு பிடிச்சு இழுத்து போட்டோ எடுத்தாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது. தியேட்டர்ல நான் வர்ற சீன்ல கைதட்றத பாத்து கண்ணுலயிருந்து தண்ணியே வந்துருச்சு எனக்கு.

செத்துப் போனா கூட நிம்மதியா செத்துபோவேன். அவ்ளோ சந்தோசம்... 76 வருசம் கஷ்டப்பட்டதுக்கு இப்போதான் பலன் கிடச்சுருக்கு. சினிமாவில் தடம் பதிக்காமல் சாகக்கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன். அதுக்கு இப்போதான் பலன் கிடச்சுருக்கு. சாகுற வரைக்கும் நடிக்கணும் .அது தான் என்னுடைய ஆசை'' ஆனந்தக் கண்ணீர் வழிய விடை பெறுகிறார் சாந்திமணி பாட்டி.

- ந.ஆஷிகா vikatan.com

படங்கள்: ர.சதானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக