வெள்ளி, 8 மே, 2015

NGO க்கள் இல்லாத உலகம் போராட்டக்களமாக இருக்கும்.மனிதர் வாழும் உலகமாக இருக்காது?

செ.கார்கி : NGOs 4009 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கின்றது மத்திய அரசு. நீங்கள் நினைக்கலாம், மோடி மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்துவிட்டார் என்று. ஆனால் உண்மை நிலவரம் இதற்கு நேர் மாறாக உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 20 லட்சம் தொண்டு நிறுவனங்களுக்கு மேல் உள்ளது. இதில் வெறும் 8975 தொண்டு நிறுவனங்களை மட்டும் தடை செய்திருப்பது வெறும் கண் துடைப்பு நடவடிக்கையே. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தை (Foreign contribution regulation act) மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.ஆனால் உண்மை என்னவென்றால் என்.ஜி.ஓக்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இந்திய அரசால் இயங்க முடியாது. நேபாளத்திற்கு நிதி உதவி செய்ய தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கின்றது.
மேலும் இதற்காக செய்யப்படும் நிதியுதவிக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவாக இருந்தால் வருமான வரி விலக்கு, எதிராக செயல்பட்டால் அங்கீகாரமே ரத்து, இதுதான் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கடைபிடிக்கும் நடைமுறை.
 20 லட்சம் தொண்டு நிறுவனங்களுக்கு மேல் இருக்கையில் வெறும் 9000 தொண்டு நிறுவனங்களை மட்டும் தடை செய்திருப்பதில் இருந்து எந்த அளவுக்கு இதன் ஆதிக்கம் மேலோங்கியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒட்டு மொத்த என்.ஜி.ஓக்களையும் தடை செய்யும் ஆற்றல் இந்த முதலாளிய சமூக கட்டமைப்புக்கு எப்போதுமே இனி வாய்க்கப்போவது கிடையாது. அப்படி ஒரு வேளை இந்தியாவில் தடைசெய்யபட்டால் விளைவுகள், ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் தாக்கி தகர்க்கப்படுவதற்கான சூழலை வெகு விரைவில் கொண்டுவந்துவிடும்.
 ஒரு சமூக நல அரசு தன்குடிமக்களுக்கு செய்யவேண்டிய அனைத்து கடமைகளில் இருந்தும் விலகி ஒட்டு மொத்த சமூக கட்டமைப்புக்கு எதிராக மாறும்பொழுது அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பாத்திரம் முதன்மையாக மாறுகின்றது. அடித்தளத்தில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு ஒட்டு மொத்த மேல்கட்டுமானத்தையும் எரித்து சாம்பலாக்காமல் தடுக்க இது போன்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு மிகத்தேவையாக உள்ளன. நீங்கள் தமிழக அரசால் நடத்தப்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்தில் போய்ப் பார்த்தால் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பாத்திரம் மிக விரிவாக கொடுக்கப் பட்டிருக்கின்றது. அதை அப்படியே கீழே தருகிறேன்.
 1) அனைத்து உதவிகளையும் செய்தல்
 2) மீட்புப்பணியில் ஈடுபடுதல்
 3) சிறுபான்மையினருக்கு மனித வளத்தை மேம்படுத்துதல்
 4) உள்ளூர் அளவில் சேவை செய்தல்
 5) சமூக நிர்வாகத்திற்கு உதவிசெய்தல்
 6) கல்வி அறிவை ஊக்குவித்தல்
 7) சுய மரியாதையை மேம்படுத்துதல்
 8) சமூக அளவிலான இடுவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்
 9) வயது வந்ததோர் கல்வியை ஊக்குவித்தல்
 10) வருமான அதிகரிப்பு
 11) சேமிப்பு மற்றும் வங்கி சமூக நிறுவனம்
 12) முதன்மை உடல் ஆரோக்கியம்
 13) சிறு தொழில் வேளாண் உற்பத்தி
 14) அரசுடன் கூட்டு சேர்ந்து இயக்கப்படும்
 இப்படியாக சமூகத்தின் அனைத்து வித பரிணாமங்களையும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எடுக்கின்றன. தன்னுடைய குடிமக்களுக்கு ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்கின்றன. அப்படி செய்யாமல் போகும்பட்சத்தில் கிளர்ந்தெழும் சமூகக் கோபம் ஒட்டு மொத்த சமூக அமைப்பையே புரட்டிப் போடவல்லது.
 இன்று எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினை இந்த தொண்டு நிறுவனங்களே ஆகும். புரட்சிகர சக்திகள் யார் என்று தெரியாத அளவிற்கு இவை தம்மைக் காட்டிக் கொள்கின்றன. எந்தெந்த பிரச்சினைகளை கம்யூனிஸ்ட்கள் கையில் எடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எடுக்கின்றன. இதனால் குழப்பம் அடையும் மக்கள் பெரும்பாலும் எளிமையான வழிமுறைகள் மூலம் இந்த சமூகக் கட்டமைப்பிற்கு உட்பட்டு போராடக் கற்றுத் தரும் தொண்டு நிறுவனங்களின் பின்னால் அணிதிரளுகின்றனர். ரத்தம் சிந்தி போராடுவதை விட மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது மிக எளிது. பெரும்பாலான நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள் இதனால் தான் தொண்டு நிறுவனங்களின் பின்னால் அணிதிரளுகின்றனர். அன்னாஹாசரே முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை இதனால் தான் மிக எளிதாக பிரபலம் அடைய முடிகின்றது. சமூகக் கட்டமைப்பிற்கு எதிராக இவ்வளவு எளிதாகப் போராட முடியும் என்றால் நம்ம ஊர் நடிகர் விஜய் என்ன நேற்று வந்த சூனா பானா கூட தங்களை வீரனாக வெளிக்காட்டிக் கொள்ளலாம்.
 ஆனால் மோடி அரசு எடுத்திருக்கும் இந்த தடை உத்தரவால் சில சிறுபான்மையினர் நடத்தும் என்.ஜி.ஓக்களும் சுற்றுச்சூழல் என்.ஜி.ஓக்களும் கலக்கம் அடைந்திருக்கலாம். காரணம் மிக எளிது. ஒன்று தனது ஆர்.எஸ்.எஸ். காக்கி டவுசர்களை மகிழ்விப்பது. மற்றொன்று தனது கொலைவெறி பிடித்த பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்க்கும் என்.ஜி.ஓக்களை ஒழித்துக்கட்டுவது. நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் கிரீன்பீஸ் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மீதான தடை. இந்த கிரீன்பீஸ் அமைப்பு சிங்க்ரொளியில் அமையவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தது. மேலும் போஸ்கோ, வேதாந்தா போன்ற கனிமவள கொள்ளை கம்பெனிகளை எதிர்த்தும் போராட்டங்களை முன்னெடுத்தது. நிலமை கையைவிட்டுப் போவதை உணர்ந்த மோடி அரசு தற்போது அதைத் தடை செய்திருக்கின்றது.
 கேரளாவில் எண்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தடை செய்யப்படுவதற்குக்கூட அரசு சாரா தொண்டு நிறுவனங்களே காரணம். அவை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தான் எண்டோசல்பான் தடைசெய்யப்பட்டது. மேலும் குஜராத் இனப் படுகொலையை அம்பலப்படுத்துவதில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களே பெரும்பங்காற்றின. ஆனால் இவையெல்லாம் நோக்கமற்ற சேவைகள் என்று நம்மால் கூறிவிட முடியாது. ஒவ்வோரு தொண்டு நிறுவனத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது. அதன் அடிப்படையில் இருந்தே அவை வேலை செய்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திற்கும் பணம் தரும் புரவலர்களுக்கு (புரவலர்கள் என்றால் பெரும்பன்னாட்டுக் நிறுவனங்கள்) அடிப்படையான சில கருதுகோள்கள் இருக்கின்றன. போர்டு பவுண்டேசன், ராக்பெல்லர் பவுண்டேசன், கோகாகோலா பவுண்டேசன், பில்கேட்ஸ் பவுண்டேசன், லெக்மன் பிரதர்ஸ் பவுண்டேசன் போன்றவை மக்கள் நலன் மேல் அக்கறை உள்ளவை என்று யாரும் சொல்லமட்டார்கள். அப்படிப்பட்ட பவுண்டேசன்களிடம் இருந்து பணம் வாங்கும் இவர்கள், யாரின் நலன்களுக்காக வேலை செய்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 அரசு சாரா தொண்டு நிறுவனங்களால் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கலாம். அதைவைத்துக் கொண்டு நாம் நியாயம் கற்பித்தால் எதிர்கால இலக்கை தவற விட்டுவிடுவோம். அந்தந்த நாடுகளின் சட்டவாத வரம்பிற்குள் நின்றே அவை வேலைசெய்கின்றன. தன்னுடைய எல்லை எது என்பதும் தனக்கு நிதிஉதவி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் எசமானர்களின் தேவை என்ன என்பதையும் அவை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்கின்றன. அதைத்தாண்டி ஒரு சிறு துரும்பைக்கூட அவை எடுத்துப்போடாது. இது போன்ற என்.ஜி.ஓக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் பெரும்பாலும் நடுவிலேயே கைவிடப்பட்டு போராட்ட சக்திகளை காட்டிக்கொடுக்கும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது. பொதுவாக சொல்லப்போனால் புரட்சிகர சக்திகளை தின்று ஏப்பம் விடும் வல்லமை படைத்தவை இந்த தொண்டு நிறுவனங்கள்.
 வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சொல்லியே 9 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் மோடியின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ்சே ஒரு பெரிய என்.ஜி.ஓ கூடராம் என்பதை மறந்துவிட்டார். அமெரிக்காவில் வாழும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் அய்.டி.ஆர்.எப் (India development and relief found) என்ற அமைப்பை நடத்தி வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்தியாவில் 9 நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறியிருக்கின்றது. அதிலே முக்கியமானது வனவாசி கல்யாண் ஆசிரமம், சுவாமி விவேகானந்தர் கிராம வளர்ச்சிக் கழகம், கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் போன்றவை. இதுமட்டும் அல்லாமல் 67 துணை அமைப்புகளும் இந்தியாவில் செயல்படுவதாக அறிவித்துள்ளது அய்.டி.ஆர்.எப். இந்த அமைப்புகள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் வுடன் மிக நெருக்கமாக உள்ளவை. இந்த அமைப்புகளின் நோக்கம் பழங்குடி இன மக்களுக்கு இந்துமதவெறி போதனைகளை வழங்கி அவர்களை இந்துமத வெறியர்களாக மாற்றுவது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களில் அவர்களை அடியாட்களாகப் பயன்படுத்துவது போன்றவையே.
 ஒரு பக்கம் மதம் மாற்றுவதில் தீவிரமாக ஈடுபடும் கிருஸ்தவ தொண்டு நிறுவனங்கள், மறுபக்கம் மத வெறியைத் தூண்டி இன அழிப்பு செய்யத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தொண்டு நிறுவனங்கள். இவர்களுக்கு இடையேயான கழுத்தறுப்பு போட்டியே இந்தத் தடைக்குக் காரணம். இந்த தடை மூலம் மோடியால் இரண்டு காரியங்களை சாதித்துக் கொள்ளமுடியும், ஒன்று தங்களுக்குப் போட்டியாக செயல்பட்ட கிருஸ்துவ தொண்டு நிறுவனங்களை ஒழிப்பது; மற்றொன்று தங்களுடைய பொருளாதார சீர்திருத்தத்திற்குத் தடையாக இருந்த சுற்றுச்சூழல் சார்ந்த தொண்டு நிறுவனங்களை எச்சரித்து பணியவைப்பது.
 ஆனால் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் தடை செய்யும் தைரியம் ஆளும் வர்க்கங்களுக்கு ஒருபோதும் வராது. கிராமப் பஞ்சாயத்துகள் வரை அவை ஊடுருவி இருக்கின்றன. அரசின் பெரும்பாலான சமூக நலத்திட்டங்கள் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தரும் நிதியைக் கொண்டே செயல்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு, பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கல்வி, இடைநின்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப்பள்ளி நடத்துவது, முதியோர் இல்லங்கள், அநாதை குழந்தைகளுக்கான காப்பகம், மகளிர் சுயவுதவிக் குழுக்கள் நடத்துவது, பல்கலைக்கழகங்களுக்கு மானியம் அளிப்பது, அரசுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.
 மக்களுக்கு அரசாங்கத்தின் மேல் அதீத நம்பிக்கையை ஏற்படுத்துவது, அதன் மூலம் தங்களுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்வது என்பதுவே இந்த என்.ஜி.ஓக்கள் கடைபிடிக்கும் நடைமுறை. மேலும் உள்ளூர் அளவில் இருக்கும் கனிம வளங்கள் பற்றிய தகவல்களையும், விவசாயம் சார்ந்த தகவல்களையும் புராஜெக்ட்டுகளாக மாற்றி தங்களுடைய எசமானர்களின் பாதங்களில் இவை சமர்பிக்கின்றன. இந்த புரோக்கர் வேலையை பார்ப்பதற்காக என்.ஜி.ஓக்களில் பணியாற்ற உதவும் வகையில் சில கல்வி நிலையங்கள் சான்றிதழ் படிப்புகளை வேறு கொண்டுவந்திருக்கின்றன. எனவே முற்போக்கு சக்திகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பற்றி நம் மக்களிடம் கண்டிப்பாக அம்பலப்படுத்த வேண்டும், அது எந்த மதம் சார்ந்த தொண்டு நிறுவனமாக இருந்தாலும் சரி.
 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்! எங்கு பார்த்தாலும் போராட்டக்களமாக இருக்கும். உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், உண்மையான புரட்சியாளர்களும் அதிகம் இருப்பார்கள். அனைத்து போராட்டங்களும் ஒரு முழுமையானத் தீர்வை நோக்கித் தள்ளப்படலாம், ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி நடப்பதற்கான புறச்சூழ்நிலையும் அதற்கான கன்னியும் எளிதில் பிடிபடும். குறிப்பாக 21-ம் நூற்றாண்டு புரட்சிகளின் நூற்றாண்டாக இருக்கும்.
- செ.கார்கி  keetru.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக