சனி, 9 மே, 2015

சல்மான்கான் தண்டனை நிறுத்தி வைப்பு! நீதிமன்றம் சினிமாவின் முன்பு அடிபணிந்தது?

இந்திய சட்டம் ஏழைகளின் எதிரி!  500 ரூபாய் திருடியவன் 2 ஆண்டு ஜெயில்ல இருக்கார். குடித்துவிட்டு காரை ஒட்டி கொலை செய்தவனுக்கு 10 நிமிடத்தில் ஜாமீன்
மும்பை: கார் விபத்து வழக்கில், சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட, ஐந்தாண்டு சிறைத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் நிறுத்தி வைத்தது; இதையடுத்து, அவர் சிறை செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது; ஐகோர்ட் உத்தரவால், சல்மான் கானின் ரசிகர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.கடந்த 2002ல், மும்பையில், மது குடித்து கார் ஓட்டிய சல்மான் கான், நடைபாதையில் துாங்கியவர்கள் மீது மோதினார்; இதில், ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில், சல்மான் கானுக்கு, மும்பை செசன்ஸ் கோர்ட், ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, மும்பை ஐகோர்ட்டில், சல்மான் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், அவருக்கு, இரு நாட்களுக்கு மட்டும், இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டது.இந்த இரு நாள் ஜாமின், நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சல்மான் கான் சார்பில், முழுமையான ஜாமின் கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதி திப்ஷே முன், நேற்று விசாரணைக்கு வந்தன.


சால்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அமித் தேசாய், ஸ்ரீகாந்த் ஷிவாடே ஆகியோர், தங்கள் வாதத்தில் கூறியதாவது:செசன்ஸ் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, சாட்சியமளித்தவர்கள், 'விபத்து நடந்த போது, காரில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர்' என, தெரிவித்தனர்.காரை, ஓட்டுனர் அசோக் சிங் ஓட்டியதாகவும், சல்மான் கான், காரின் பின்புறம் அமர்ந்திருந்ததாகவும் கூறினர்; ஆனால், செசன்ஸ் கோர்ட், இதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தண்டனை அளித்துள்ளது. இவ்வாறு, அவர்கள் வாதிட்டனர்.

இதையடுத்து, நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனை, நிறுத்தி வைக்கப்படுகிறது. அவருக்கு முழு ஜாமின் வழங்குவதுடன், அவர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும், இந்த கோர்ட் ஏற்றுக் கொள்கிறது.சல்மான் கானின் பாஸ்போர்ட், பாந்த்ரா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்; அவர் வெளிநாடு செல்ல நேர்ந்தால், பாந்த்ரா போலீசாரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்; ஜாமினுக்கு, 30 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை அடுத்து, சல்மான் கான் சிறை செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும், சல்மான் கானின் ரசிகர்கள் கோர்ட் வளாகத்திலும், அவர் வீட்டு முன்னும், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, சல்மான் கான், கோர்ட்டுக்கு வரவில்லை.

தவிப்பு:


* ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கானுக்கு, ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட முதல் நாளிலேயே, ஜாமின் அளிக்கப்பட்டு உள்ளது.
*நாடு முழுவதும், 2.5 லட்சம் விசாரணை கைதிகள், ஜாமின் கிடைக்காமல் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.
* இவர்களில் பலர், அப்பாவிகள்; ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கு கூட வசதியில்லாதவர்கள்.
*இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுமோ, அந்த தண்டனை காலத்தை விட அதிகமான நாட்களாக, இவர்கள் சிறையில் வாடுகின்றனர்.
*சுப்ரீம் கோர்ட், நீண்ட காலமாக விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்யும்படி, கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது.
*சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவின்படி, எத்தனை விசாரணை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்ற புள்ளி விவரத்தை, அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை.

பாடகர் மீது வழக்கு:

சல்மான் கானுக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, பிரபல பின்னணி பாடகர் அர்பிஜித் பட்டாச்சார்யா, தங்க நகை வடிவமைப்பாளர் பாரா அலி கான் ஆகியோர், தீர்ப்பை கடுமையாக விமர்சித்திருந்தனர்.நடைபாதைகளில் துாங்குவோர் நாய்கள் என்றும், அவர்கள் விபத்தில் இறப்பதற்கு தகுதியானவர்கள் என்றும் கூறியிருந்தனர். அவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டியது, அரசின் பொறுப்பு என்றும் கூறியிருந்தனர். அவர்களின் கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பை மாஜிஸ்திரேட் கோர்ட்டில், வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு:இரு பிரிவினருக்கு இடையே, வன்முறையை துாண்டும் வகையிலும், சாதாரண மக்களை அவமதிக்கும் வகையிலும் பேசிய, அர்பிஜித், பாரா அலி கான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி, மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது.

ரசிகர் தற்கொலை முயற்சி:

மும்பை ஐகோர்ட் வளாகத்தில் திரண்டிருந்த, சல்மான் கானின் ரசிகர்களில் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். சல்மான் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து, அந்த ரசிகர் விஷம் குடித்ததாக, அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். உடனடியாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கோர்ட் வளாகத்திற்கு அருகில், குடிசைப்பகுதியில் வசிக்கும் சிலர், 'சல்மான் கானை விடுதலை செய்யக் கூடாது' என, கோஷம் எழுப்பினர்; இந்த இரு சம்பவங்களாலும், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக