செவ்வாய், 5 மே, 2015

நேபாளத்தில் இந்திய ஊடங்கங்கள் மீது கடும் விமர்சனம்! விளம்பர பிரியர் மோடியின் உபயம்?

இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு அனுப்பியிருந்தது. இந்தியா பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 1000 பேர் வரையில் தற்போது நேபாளத்தில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்தப் பணிகள் தொடர்பான செய்தி சேகரிப்பிலும் வெளியீட்டிலும் இந்திய ஊடகங்களின் அணுகுமுறை தொடர்பில் நேபாள மக்களின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தி மனநிலை வெளிப்பட்டிருக்கிறது. நேபாளம் இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை இந்திய 'நாட்டுப்பற்று' ஊடகங்கள் மறந்துவிட்டதாக பெருமளவிலான டுவிட்டர் குறிப்புகள் விமர்சித்துள்ளன.'டிவி சீரியல் எடுப்பது போல் நடந்துகொள்கிறார்கள்'

'இந்திய ஊடகங்கள் தங்கள் நாட்டின் உதவிகளைக் கூறி பெருமைப்பட்டுக்கொள்ளும் போக்குடனும் சரியான நிலவரங்களை வெளிப்படுத்தாமலும் வெறுமனே பரபரப்பை ஏற்படுத்தும் விதமாகவும் நடந்துகொள்வதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்' என்றார் பிபிசி நேபாளச் சேவையின் செய்தியாளர் பகீரத் யோகி.
இந்திய செய்தியாளர்கள் டிவி சீரியல்களை படம்பிடிப்பது போல நேபாளத்தில் நிலநடுக்கம் மற்றும் மீட்பு - நிவாரணப் பணிகளில் செய்தி சேகரித்துவருவதாக ஒருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
'நிவாரணப் பொருட்கள் சென்றுசேரமுடியாத இடத்துக்குக் கூட உங்களின் ஊடகவியலாளர்களால் செல்லமுடியுமாக இருந்தால் கையில் ஒரு முதலுதவி பெட்டியையோ, தண்ணீர் போத்தலையோ ஏன் அவர்களால் கொண்டுசெல்லமுடியாது' என்று இன்னொரு டுவிட்டர் குறிப்பு கூறுகின்றது.
'இந்திய ஊடகங்கள் மத்தியில் ஏதாவது பத்திரிகை தர்மம் இருக்கின்றதா என்பதே சந்தேகம். நேபாளத்தை அவர்கள் போலியான செய்திகளால் அச்சமூட்டுகிறார்கள்' என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.
'இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புள்ளவையாகவும் நடுநிலைமிக்கவையாகவும் அக்கறை உள்ளவையாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் நேபாளத்தில் களத்தில் நிற்கின்ற தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களின் அணுகுமுறையில் தான் பிரச்சனை இருப்பதாகத் தெரிகின்றது' என்றார் பகீரத் யோகி.
உயிர்களையும் குடியிருப்புகளையும் இழந்துநிற்கும் மக்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்காதவாறு இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் அவர்களுடன் உரையாடுவதாக உள்நாட்டு டுவிட்டர் கருத்துக்கள் கூறுகின்றன.
'இந்திய ஊடகவியலாளர்கள் சுமார் 200 பேர் வரையில் நேபாளம் எங்கிலும் சென்று செய்தி சேகரித்துவருகின்றனர். அவர்கள் இந்தியாவின் உதவிகளையே முன்னிலைப்படுத்துவதாகவும் மற்ற நாடுகளிடமிருந்து நேபாளிகளுக்கு கிடைக்கும் உதவிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் அதிருப்திகள் உள்ளன' என்றும் கூறினார் பிபிசியின் நேபாளி மொழிச்சேவை செய்தியாளர் யோகி.
நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் சமூகவலைத் தளங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் பகீரத் யோகி கூறினார்   /tamil.webdunia.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக