ஞாயிறு, 3 மே, 2015

புகை கக்கும் வாகனங்கள் பதிவு ரத்து? புதிய சட்டம் வாகன உற்பத்தியாளர்களுக்கு வரப்பிரசாதம்?

புதுடில்லி: சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக, அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிக புகை கக்கும் கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்யவும், அந்த வாகனங்களை பறிமுதல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகர் டில்லியில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகையால், காற்றின் தரம் மாசு அடைவதாக புகார் எழுந்துஉள்ளது. இதையடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக, தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், டில்லி சாலைகளில் இயங்குவதற்கு தடை விதித்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அதில், கூறப்பட்டுள்ளதாவது:பல நாடுகளில், வாகனங்களின் இயங்கும் தன்மையை பொறுத்துத் தான், அவற்றின் பயன்பாடு முடிவு செய்யப்படுகிறது. எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பதை வைத்து, வாகனங்களின் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. சாலையில் இயங்குவதற்கு தகுதியானவையாக உள்ளதா என்பதை வைத்துத் தான், வாகனங்களின் ஆயுட்காலம் முடிவு செய்யப்படுகிறது. நம் நாட்டிலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். அதேநேரத்தில், காற்று மாசு அடைவதை தடுக்க வேண்டும் என்பதில், அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக, சில வரைவு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதன்படி, பாதுகாப்பு அம்சம், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை ஆகியவற்றை கருத்தில் வைத்து, வாகனங்களின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில்...:

முறையான சோதனை நடத்தி, அளவுக்கு அதிகமாக காற்று மாசை ஏற்படுத்தும் வாகனங்கள், இயங்குவதற்கு தகுதியற்ற நிலையில் உள்ள இன்ஜின்களை உடைய வாகனங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுபோன்ற வாகனங் களின் பதிவை ரத்து செய்யவும், அந்த வாகனங்களை பறிமுதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் கார்களை உடைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. சென்னை அல்லது குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகங்களுக்கு அருகே இந்த இடங்கள் அமையலாம். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

கடுமையாகும் விதிமுறைகள்


*பா.ஜ.,வைச் சேர்ந்த நிதின் கட்காரி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்றதில் இருந்து, சாலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
*சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தான், 'சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா' புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
*இந்த மசோதாவில், இயங்குவற்கு தகுதியற்ற நிலையில் உள்ள வாகனங்களை சாலைகளில் பயன்படுத்தினால், அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கும் விதிமுறைகள் உள்ளன.
*போக்குவரத்து விதிமுறைகளை மூன்று முறை மீறினால், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
*மது அருந்தி வாகனங்களை ஓட்டுவோரும், சிறைத் தண்டனை, அபராதம், ஓட்டுனர் உரிமம் ரத்து என, கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும். சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
*இந்த மசோதாவுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக