செவ்வாய், 5 மே, 2015

சேவை வரி மசோதா நிறைவேற அதிமுகவின் தயவு பாஜகவுக்கு தேவை! பின்வாங்கும் அதிமுக?

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில், இன்சூரன்ஸ் மசோதா, நிலக்கரி சுரங்க மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை, பா.ஜ., நிறைவேற்றிகாட்டியது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி, கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிவிட்ட போதிலும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறது. இந்நிலையில், வரும் 8ம் தேதியுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையவுள்ள நிலையில், கடைசி வாரத்தின் முதல்நாளாக, இன்று பார்லி., கூடுகிறது. டில்லியில், விவசாயி தற்கொலை சம்பவம், காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, நிறைவேற்றுவது கடினமே என்ற நிலைக்கு, பா.ஜ.,வே வந்துவிட்டது. இதனால், இன்னொரு முக்கியமான, சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மட்டுமாவது நிறைவேற்றிட, பா.ஜ., தீவிரம் காட்டுகிறது. ஆனால், அது முடியுமா என்பது தெரியவில்லை. அரசியல் சட்டத்திருத்த மசோதா என்பதால், பார்லிமென்ட்டின் மொத்த பலத்தில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. அ.தி.மு.க., உள்ளிட்ட, முக்கிய கட்சிகளின் நிலை, என்னவாக இருக்கும் என்ற பதைபதைப்பில், பா.ஜ., உள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா அளவுக்கு, இம்மசோதாவை, காங்., எதிர்க்கவில்லை. அதேசமயம், இம்மசோதா மாநில நலனுக்கு எதிராக உள்ளதாக, பகிரங்கமாகவே அ.தி.மு.க., தன் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் இம்மசோதா, லோக்சபாவில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மசோதாவின் மீது, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு, சபையில், ஓட்டெடுப்பு நடக்கும்போது தான் தெரியும்.




பதற்றம்:

அனேகமாக, ஓட்டெடுப்பின் போது, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்யலாம் என்றே, தகவல் கசிவதால், பா.ஜ.,வும் பதற்றத்தில் உள்ளது. அ.தி.மு.க.,வின் இந்த நிலைப்பாடு, மேலும் உறுதியானால், காங்கிரசும் தன் எதிர்ப்பை சற்றே அதிகப்படுத்தி, பா.ஜ.,வுடனான பேரத்தை அதிகப்படுத்தலாம். எனவே, கிரிக்கெட்டில், கடைசி ஓவர்களில் நிலவுவது போன்ற, கடைசிநேர பரபரப்பு, பார்லி., வட்டாரங்களிலும் காணப்படுகிறது.


- நமது டில்லி நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக