புதன், 6 மே, 2015

அன்புமணி கடிதத்திற்கு திமுக கிடுக்கி பிடி! வரிக்கு வரி பதிலடி!

தமிழகத்தின் அவலங்களை பட்டியலிட்டு முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு பகிரங்க கடிதம் எழுதியிருந்த தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, 'நோய்வாய் பட்டிருக்கும் தமிழகத்தை டாக்டர் என்ற முறையில் நான் குணப்படுத்துவேன்' என, நேற்று முன்தினம் பதிலளித்திருந்தார் பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி.அதற்கு தி.மு.க., சார்பில் கட்சியின் முன்னாள் எம்.பி.,யான தாமரைச்செல்வன் பதிலடி கொடுத்திருக்கிறார். அன்புமணியின் விமர்சனத்துக்கு வரிக்கு வரி கேள்வி எழுப்பி தாமரைச்செல்வன் விடுத்திருக்கும் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தாமரைச்செல்வன் அறிக்கை: 'என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ., அல்லது எம்.பி., பதவிக்கு போட்டியிட மாட்டோம்' என்று தானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்.
* இந்துார் மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்றைக்கு டில்லி நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நடந்து கொண்டிருக்கும் அன்புமணி ஊழல் பற்றி பேசலாமா?

* ராமதாஸ் பா.ம.க.,வை துவக்கும் போது, 'என் கட்சியில் உள்ளவர்கள் ஊழல் அல்லது தவறு செய்தால் மக்கள் மன்றத்தின் முன் பகிரங்கமாக விசாரணை நடத்தி அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முச்சந்தியில் நிற்க வைத்து
சவுக்கால் அடியுங்கள்' என்றார்.ஆனால் நீங்களோ சி.பி.ஐ., கோர்ட்டில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு நிற்கிறீர்களே .

* 'ஒரு சில கேள்விகளுக்கும் ஒருசிலரை பற்றியும் நான் பதில் அளிப்பதில்லை' என ராமதாஸ் கூறிய பின், விஜயகாந்தை தேடிச் சென்று சால்வை அணிவித்து, 'என் தொகுதியில் உங்கள் கட்சிக்காரர்களை வாக்களிக்க சொல்லுங்கள்' என கெஞ்சியது ஏன்? நீங்கள் பார்லிமென்டிற்கு போகத்தானே கெஞ்சி கூத்தாடினீர்கள். நீங்கள் கூட்டணி வைக்காத தமிழக கட்சி ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?
* தும்மினால் மதுவிலக்கு என்கிறீர்களே. மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது நாடு முழுவதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை. தைலாபுரம் தோட்டத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரியில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் வைக்கவில்லை.
* தர்மபுரி தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை, சிப்காட் தொழில் பூங்கா என பல திட்டங்கள் கொண்டு வருவோம் என சொல்லி விட்டு அதற்காக ஏதாவது சிறு நடவடிக்கை எடுத்தீர்களா?
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அமைச்சர்களாக, டி.ஜி.பி.,க்களாக,சர்வீஸ் கமிஷன் தலைவராக, துணைவேந்தர்களாக அமர வைத்து தி.மு.க., அழகு பார்த்தது.சென்னை, மேம்பாலங்கள் நிறைந்த மாநகரமாக இருக்கிறது என்றால், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இன்றைக்கு குடிநீர் கிடைக்கிறது என்றால், அதற்கு அவர் வகுத்துக் கொடுத்து நிறைவேற்றிய ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தான் காரணம்.வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு மட்டுமல்ல, அப்போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நிதியுதவி செய்து அவர்களை தியாகிகள் என்று அறிவித்து அவர்களுக்கு பென்ஷனும் கொடுத்து கவுரவித்தது தி.மு.க., ஆட்சி தான்.

* அன்புமணியின் பதவி ஆசைக்காக வன்னிய சமுதாய மக்களை அடகு வைக்கலாமா?
* மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், 'அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தமிழகத்தை, மருத்துவர் என்ற முறையில் என்னால் மீட்க முடியும்' என்று கூறியிருக்கிறீர்கள்.பணம் வாங்கிக் கொண்டு, தரமற்ற மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கினீர்களே, அந்த கல்லுாரிகளில் இருந்து மருத்துவரை கொண்டு வந்து வைத்து மீட்கப் போகிறீர்களா?
* டில்லி நீதிமன்றத்தில் ஊழல் வழக்கில் ஆஜராகிக் கொண்டிருக்கும் அவரை, மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் எப்படி ஏற்றுக் கொள்வது?இவ்வாறு தாமரைச்செல்வன் கூறியுள்ளார்.

- நமது நிருபர்  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக