திங்கள், 11 மே, 2015

ஆந்திரா போலீசாருக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்- வைகோ

ஆந்திரா மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் உண்மை அறியும் குழு அங்கு சென்று விசாரித்தது. அதன் களஆய்வு அறிக்கை வெளியீட்டு கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. கள ஆய்வு அறிக்கையை மும்பை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சுரேஷ் வெளியிட்டார். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்தவர்களும், அந்த சம்பவத்தை நேரில் பார்த்த 3 சாட்சிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 20 குடும்பத்தினருக்கும் மற்றும் 3 சாட்சிகள் என மொத்தம் 23 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். கருத்தரங்கில் வைகோ பேசியபோது, ‘’ஆந்திர அரசு 20 தமிழர்களை படுகொலை செய்ததன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி உடலை மறுபரிசோதனை செய்து 33 நாட்கள் ஆகியும், மறுபிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. மரங்கள் வெட்டிக் கடத்தி கொள்ளையடித்ததில் முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். இதனை மறைக்கவே 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சுவடு மாறுவதற்குள் ஆந்திர போலீசார் தமிழகத்திற்கு வந்து சந்தனக் கடத்தலில் ஈடுபடுவதாக அப்பாவி தமிழர்களை கைது செய்து வருகிறார்கள். இதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை. ஆந்திர போலீசாருக்கு எதிராக அனைவரும் ஒன்றுகூடி போராட வேண்டும்’’என்று தெரிவித்தார்.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக