திங்கள், 11 மே, 2015

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் குடிபோதை கார் விபத்து வலுவான சாட்சியம் இருந்தும் ஊத்தி மூடி...


இந்தியாவின் முதன்மைப் பணக்காரரும், பெரும்  தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் செய்த கார் விபத்து. சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் என்று அனைத்தும்சரியாகவும், பொருத்தமானதாகவும் இருந்தும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, தான் நிகழ்த்திய  கார் விபத்தில் இருந்து கெத்தாக வெளியே வந்தார்.இது இன்னமும் பலரின் மனதில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விபத்து கடந்த 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. நிறைந்த குடிபோதையில் ஆகாஷ் அம்பானி தனது வெளிநாட்டு கார் ஒன்றில் மும்பைத் தெருக்களில் இரவு உலா வந்துள்ளார்.அப்போது கண்மண் தெரியாமல் பக்கத்தில் சென்ற 'ஆடி'  சொகுசு  காரில்  மோதியிருக்கிறார். இதில் நல்ல வேளை யாருக்கும் உயிர் சேதமில்லை.சாட்சியம் கூறும் பெண்ணின்  நேர்மையை பாராட்டவேண்டும் .சட்டம் வழமை போல காசுக்கு கால்கழுவுகிறது 


கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மும்பை பெடர் ரோட்டில் எம்ஹெச் 01- பிகே 99 என்ற பதிவு எண் கொண்ட கருப்பு நிற ஆஷ்டன் மார்டின் கார் வேகமாக வந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் உருண்டு சென்று ஆடி கார் மீது மோதியது. பின்னர் ஆஷ்டன் மார்டினின் ஒரு டயர் கழன்று சென்று ஹுண்டாய் எலான்ட்ரா மீது மோதியுள்ளது.
சாலையில் சென்றவர்கள் பயந்து அலறி ஓட,  அந்த சாலையே கடும் பதட்டத்திற்கு ஆளானது. விபத்தையடுத்து   ஆஷ்டன் மார்டின் காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார். விசாரணைக்குப் பிறகு காரை ஓட்டி வந்தவர் ஆகாஷ் அம்பானி என்பதும்,  அவர் விபத்து நடந்த நேரத்தில் குடி போதையில் இருந்ததாகவும் தெரிய வந்தது.
விபத்து நடந்த அடுத்த நாள்,  திங்கட்கிழமை இரவு ரிலையன்ஸ் நிறுவன டிரைவர் ஒருவர் மும்பை கம்தேவி காவல் நிலையத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய காரை தான்தான் ஓட்டி வந்ததாகத்  தெரிவித்து சரண்டர் ஆனார். பொது மக்கள் அச்சத்தில் உறைந்த பயங்கர விபத்து அது. விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசுக் காரில் குடிபோதையில் பெரும் தொழிலதிபரின் மகன் மோதல் விபத்தை நடத்திவிட்டு போலீசின் கண்களில் இருந்து மறைந்து போனது ஜனநாயக சோகமே.

பிரச்னை அத்தோடு நிற்கவில்லை. இந்த குடிபோதை விபத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், "ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நல்ல குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தினார் என்று உறுதியாகக் கூற முடியும்" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்னமும் அவர் மீது நடவடிக்கை பாயவில்லை.

தற்போது  நடிகர் சல்மான்கான் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு, தான் நிகழ்த்திய கார் விபத்திற்கு, சிறைத்தண்டனை பெற்றுள்ளார். அதற்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பிரதானமான விஷயம். இது ஜாமீனோடு நின்றுவிடப் போவதில்லை.

இந்த வழக்கு 13 ஆண்டுகளாக நடந்து வந்தாலும் தீர்ப்பை எட்டிவிட்டது.ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஆகாஷ் அம்பானியின் கார் விபத்து குறித்து எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.இந்த விஷயம் இப்போது மீண்டும் வட இந்திய ஊடகங்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சட்டத்தை மதிப்பதற்குப் பதிலாக மிதிப்பதும்,சமயம் பார்த்து வளைப்பதும்தான் பணம் படைத்தோரின் வழக்கம் என்பது நாட்டின் பொது அமைதிக்கு உகந்தது இல்லை. 
  Flashback
குடிபோதையில் கார் ஓட்டி உயிர்ப்பலி வாங்கிய கொடூர குற்றத்திற்காக பாலிவுட் நடிகர் சல்மான்கான் சிறைத்தண்டனை பெற்றுள்ள விவகாரம் சினிமா வட்டாரத்தில் மட்டுமில்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
காரணம் குற்ற வழக்கில் சிக்கியவர் பிரபல சினிமா ஹீரோ. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  பாலிவுட் உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும், சினிமா வர்த்தகர்களின் செல்லப்பிள்ளை சல்மான்கான். இந்தியாவில் மட்டுமில்லாமல் பாகிஸ்தானிலும் சல்மான்கானுக்கு ஹிட் மார்க்கெட் இருப்பதால் அங்கும் இந்த சிறைத்தண்டனை தீர்ப்பு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு இரவில் நிகழ்ந்த  கார் விபத்தில் சாலையோரம் இருந்த ஒருவர் பலியானார்.இன்னொருவர் கால் முறிந்த நிலையில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்துக்கு காரணம் நடிகர் சல்மான்கான். அவர் அப்போது குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.அவருடன் வேறு சிலரும் காரில் இருந்துள்ளனர்.பின்னர் இது தொடர்பாக வேறு ஒருவர் போலீசில் சரணடைந்தார்.ஆனால் ஊடகங்கள் உள்ளிட்ட சமூக சக்திகள் தொடர்ந்து போராடியதால் வழக்கின் திசை மாறி, காவல் நிலையம், நீதிமன்றம் என்று சல்மான்கானை நடக்க வைத்து அவரே குற்றவாளி என்று நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் பரபரப்பை உண்டாக்கிய இந்த விபத்துக் கொலை வழக்கு, 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது. கடுமையான விசாரணைகளுக்குப் பிறகு  கடந்த 6 ஆம்  தேதி  மும்பை செசன்ஸ் நீதிமன்றம்  நடிகர் சல்மான்கானுக்கு  5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
ஆனால் சல்மான்கானின் சினிமா தாண்டிய அரசியல் செல்வாக்கா அல்லது நல்ல நேரமா என்று தெரியவில்லை. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நாளிலேயே, அவருக்கு முழு தீர்ப்பின்  நகல் வழங்கப்படாததால் அதைக் காரணம் காட்டி மும்பை உயர்நீதி மன்றம் அவருக்கு 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் சல்மான்கான் கைது செய்யப்படவில்லை. இதனால் சல்மான்கான் வீட்டுக்குச்  செல்ல அனுமதிக்கப்பட்டார். மேலும் அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவதாகவும் நீதிபதி அறிவித்தார்.
2 நாட்கள் கழித்து சல்மான்கான் கோர்ட்டில் ஆஜராகி ரூ.30,000 மதிப்புள்ள ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி கூறியதை தொடர்ந்து, இந்த தீர்ப்பின் காரணமாக சல்மான்கான் ஜெயிலுக்கு போவது தவிர்க்கப்பட்டது. இதனால் சல்மான்கான் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது ஒருபுறம் இருக்கட்டும். இதே போல இன்னொரு குடிபோதை கார் மோதல் வழக்கு இருக்கிறது. - தேவராஜன் விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக