ஞாயிறு, 3 மே, 2015

ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜி


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூர், மலையின் மறுபுறத்தில் உள்ள குடிசைகளில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களைக்கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். கெலார் பகுதியை சுற்றியுள்ள சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி. மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.


தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி தனியொரு ஆளாக சுத்தியலும் உளியுமாகக் களத்தில் இறங்கினார்.

இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் ஒரு புதிய பாதையை இவர் உருவாக்கினார். அதுவரை 80 கி.மீ. மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் இவரது அசுர உழைப்பின் பலனால் வெறும் 13 கி.மீ. தூரமானது. இதனால் அம்மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது.

தனது மனைவி மீதான காதல் தான் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய மான்ஜியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது இந்திய அரசு " அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியது.

ஆனால், அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் இதை செய்யவில்லை என இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி, பீகார் அரசு தனக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கி விட்டார்.

தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் பார்வை இவர் மீது திரும்பியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மான்ஜி அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக மாநில அரசு அறிவித்தபோதும், நோயின் தீவரம் காரணமாக 18-8-2007 அன்று மான்ஜியின் உயிர் பிரிந்தது. ரெயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உழைப்பால் எழுதப்பட்ட இவரது வெற்றி சரித்திரம் கேட்டன் மேத்தா இயக்கத்தில் 'Mountain Man' என்ற பெயரில் இந்தியில் திரை சித்திரமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

நன்றி மறவாத பீகார் மக்கள் இந்த புதிய பாதையை மான்ஜி சாலை என்ற பெயரில் இன்றளவும் அழைத்து வருகின்றனர்.

மாவட்டத்துக்கு ஒரு மான்ஜி பிறக்கவில்லை என்றாலும்கூட, மாநிலத்துக்கு ஒரு மான்ஜி பிறந்தாலும் போதும். உழைப்பின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தி சர்வதேச அரங்கில் இந்தியா வெற்றிக் கொடி நாட்டுவது, உறுதி. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக