புதன், 6 மே, 2015

தமிழகம், கேரளா, கர்நாடகா எல்லையில் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்ட்தலைவன் கைது: மனைவி உள்பட 4 பேர்


கோவை: தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில மாவோயிஸ்ட் தலைவன் உட்பட 5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணையில், 5 இடங்களில் தாக்குதல் நடத்தியதும்,  மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதும்  தெரியவந்துள்ளது.  பிடிபட்டவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.  அவர்கள் சாலையில் வீசி  எறிந்த டைரி, சிம்கார்டு போலீசாரிடம் சிக்கியுள்ளது.  இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.கோவை  அருகேயுள்ள  கருமத்தம்பட்டியில் அன்னூர் ரோட்டில் சதாசிவம் (55) என்பவர் பேக்கரி நடத்தி  வருகிறார். நேற்று மாலை  மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, காரில் வந்த 5  பேர் டீ குடிக்க பேக்கரி முன்பு வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அதே  சமயம்  இவர்களை பின் தொடர்ந்து வந்த கோவை கியூ பிரிவு போலீசார் மற்றும் ஆந்திரா  சிஐடி போலீசார் துப்பாக்கி  முனையில் சுற்றி வளைத்தனர்.


பட்டப்பகலில்  துப்பாக்கி முனையில் கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தை பார்த்து  அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சி  அடைந்தனர். இதனால் உடனடியாக கும்பலை  வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை பீளமேட்டில் உள்ள கியூ பிராஞ்ச்   அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். நேற்றிரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.இதனிடையே 5 பேர்  கும்பலை போலீசார் சுற்றி வளைத்த  போது, அதில் இருந்த ஒரு ஆசாமி ஒரு டைரி, செல்போன் சிம் கார்டை தூக்கி   எறிந்துள்ளார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் ஒருவர்  பார்த்து விட்டார். ஆசாமி தூக்கிப் போட்ட  சிம்கார்டு, டைரியை எடுத்து  போலீசில் ஒப்படைத்தார்.

டைரியில் 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள்  குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து   வருகின்றனர். அவர்கள் வந்த காரை சோதனையிட்டபோது காரில் ஆயுதங்கள்  இருந்ததாகவும், அவற்றை போலீசார்  கைப்பற்றி ரகசியமாக வைத்துள்ளதாகவும்  கூறப்படுகிறது.பிடிபட்டவர்களிடம் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில்   5 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அதில், ரூபேஷ், அவரது  மனைவி சைனா, ஈஸ்வரன், அனூப்,  கண்ணன் என்பதும், அதில், ரூபேஷ் கேரளா,  தமிழகம், கர்நாடகா மாநில மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு தலைவன் என்பதும்   தெரியவந்துள்ளது. ரூபேஷ் மனைவி சைனா கேரள உயர் நீதிமன்றத்தில் கிளார்க் ஆக  வேலை செய்து வந்துள்ளார்.

பணியை ராஜினாமா செய்து மாவோயிஸ்ட் இயக்கத்தில்  சேர்ந்துள்ளார். 5 பேரிடமும் கோவை மேற்கு மண்டல டிஐஜி ஆயுஷ்  மணி திவாரி,  கோவை எஸ்பி சுதாகர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.ஆந்திர போலீஸ் குழு வருகை:  இதனிடையே   மாவோயிஸ்ட் கும்பலிடம் விசாரணை நடத்த ஆந்திராவில் இருந்து எஸ்.பி.  தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று  காலை வந்து சேர்ந்தது. இவர்களும்  கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கேரளா மாநிலம்  வயநாடு அருகே பழங்குடியினருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்   மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடி ஆகியவற்றை மாவோயிஸ்ட்கள் தாக்குதல்  நடத்தினர். அதேபோல,  பாலக்காட்டில் ஒரு ரிசார்ட், திருச்சூர் டவுனில்  தனியார் கம்பெனி உட்பட கேரளாவில் மட்டும் 5 இடங்களில் தாக்குதல்   நடத்தப்பட்டன. தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதை செய்தது ரூபேஷ் என்பது  தெரியவந்துள்ளது.

 இவர்கள் கேரளா மட்டுமல்ல தமிழகம், கர்நாடகாவிலும்  தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.ரூபேஷ்,  ஏற்கனவே ஒரிசா  சென்று ஆயுதப்பயிற்சி பெற்று வந்தவர் என்பதும், அவர் 3 மாநில தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளதால்  ஏராளமானவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கலாம்  என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்தும் தீவிர விசாரணை   நடத்தப்பட்டு வருகின்றன.முதல் கட்ட விசாரணையில் இந்த கும்பலுடன்  தொடர்புடைய நபர்கள் கோவையில் இருப்பது  தெரிய வந்துள்ளது. அது குறித்தும்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆந்திராவில்  இவர்களுக்கு  பெரிய அளவில் நெட் ஒர்க் இருக்கும் எனத் தெரிகிறது.

எனவே  பிடிபட்ட 5 பேரும் ஆந்திரா கொண்டு செல்லப்படுவார்கள் என்றும்  கூறப்படுகிறது.தமிழக, கேரள எல்லைப்பகுதியில்  மாவோயிஸ்ட் கும்பல்  நடமாட்டம் இருந்து வருகிறது. இவர்களைத் தடுக்க இரு மாநில போலீசார்,  அதிரடிப்படையினர்  மற்றும் வனத்துறையினர் தீவிர ரோந்து மற்றும் தேடுதல்  வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேரள பகுதியில்  அவ்வப்போது மாவோயிஸ்ட்  இயக்கத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பரபரப்பு கிளம்பும்.  இந்நிலையில் அந்த  இயக்கத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவன் உட்பட 5 பேர் கோவை  அருகே பிடிபட்டிருப்பதும், அவர்களுடன்  தொடர்புடைய கும்பல் கோவையில்  இருப்பதும் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. - See more at:/tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக