சென்னை: பணிகளை லஞ்சம் பெற்றதாகக் கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10
பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 10 அதிகாரிகளின் பெயர்ப்பட்டிலை
வெளியிட்ட தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒப்பந்ததாரர் சங்கத்தினர்,
இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் புகார் அளித்துள்ளனர்.
ரமணா திரைப்பட பாணியில் ஊழல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று
சென்னை எழிலகம் அருகே வைக்கப்பட்ட பேனர்களால் ஏற்பட்ட பரபரப்பு
அடங்குவதற்குள் அதிகாரிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர்
ஒப்பந்ததாரர்கள். அதில், ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம்
கேட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளனர். புகாருக்குள்ளான ஊழல்
அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்
சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவராஜனும், ஊழல் அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். லஞ்சப் புகார்
தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஒப்பந்ததாரர்கள் நேற்று நடத்த இருந்த
பேச்சுவார்தை தள்ளிப்போனதையடுத்து இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகத்தில்
தமிழ்நாடு பொதுப் பணித்துறை பொறியாளர் ஒப்பந்தாரர்கள் சங்கம் சார்பில் 5
இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது. அதில் 2014 - 2015-ம் ஆண்டில்
அதிகப்படியானக ஊழல் செய்த பொறியாளர் யார் என்பது குறித்து விரைவில்
விளம்பரம் பலகை வைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த பேனரில்
புகைப்படத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கேள்வி குறி இடம் பெற்றிருந்தது.
பட்டியல் தயார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒப்பந்ததாரர் சங்கத்தின் தலைவர்
குணாமணி, அதிகாரிகள் அளவிற்கு அதிகமாக கொள்ளையடிப்பதன் காரணமாகவே பேனர்கள்
வைக்க நேரிட்டதாக தெரிவித்தார். ஊழல் அதிகாரிகளின் பட்டியல் விரைவில்
வெளியிடப்படும் என்றும் அப்போது கூறினார்.
இதனிடையே இன்று ஒப்பந்த்தாரர்கள், ஊழல் தடுப்பு மற்றும்
கண்காணிப்புத்துறை இயக்கத்திடம் புகார் மனு அளித்தனர். பொதுப்பணித்துறையில்
ஊழல் புரிந்ததாக முதல் 10 அதிகாரிகள் பட்டியலையும் அவர்கள் அளித்துள்ளனர்.
இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திய
அவர்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று
கேட்டுக்கொண்டனர்.
இந்த பட்டியலை அளித்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒப்பந்ததாரர்
சங்கத்தின் தலைவர் குணாமணி, இது ஆரம்பம்தான் என்றார். தொடர்ந்து
பத்துபேரின் பெயரையும் அவர் செய்தியாளர்களிடம் வாசித்தார்.
10 பேர் பட்டியல்
கே.மோகன்ராஜ் கண்காணிப்பு பொறியாளர், கட்டிடம் & பராமரிப்பு வட்டம்,
மருத்துவ பணிகள், சேப்பாக்கம். பாண்டியராஜ் உதவி செயற்பொறியாளர்,
சேப்பாக்கம். ராஜசேகர் உதவி செயற்பொறியாளர், அமைச்சர்கள் நீதிபதிகள்
குடியிருப்பு. திருமூர்த்தி, உதவி செயற்பொறியாளர், மருத்துவ பணிகள்,
எழும்பூர். சங்கரலிங்கம் உதவி செயற்பொறியாளர், சேப்பாக்கம்.
சிவசண்முகசுந்தரம், உதவி செயற்பொறியாளர், மருத்துவ கல்லூரி கட்டிட பணி.
கிருஷ்ணசாமி உதவி செயற்பொறியாளர், உயர்நீதிமன்ற கட்டிடம். சண்முகநாதன் உதவி
பொறியாளர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை. செந்தில் கமலாதரன் உதவி பொறியாளர்,
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை. ராஜகோபால் செயற்பொறியாளர், வடமாநில
கோட்டம், சேப்பாக்கம்.
உயிருக்கு ஆபத்து
இந்த ஊழல் அதிகாரிகளினால் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்
லஞ்சம் கேட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அதை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்
என்றும் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேனர் வைத்து
பரபரப்பை கிளப்பிய ஒப்பந்ததாரர்கள், இன்றைக்கு வெளியிட்ட அதிகாரிகள்
பட்டியல் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
Read more a//tamil.oneindia.com
Read more a//tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக