புதன், 29 ஏப்ரல், 2015

ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக சம்மதித்தது ஏன்? ... மனம் திறந்தார் ஆச்சாரியா tamil.oneindia.com

பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார் பி.வி.ஆச்சாரியா. பவானிசிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க அளித்த காலக்கெடு வெறும் ஒரே நாள்தான். இந்த ஒருநாளைக்குள், வழக்கு குறித்து படித்து, தண்டனையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு சிக்கியது. அப்போதுதான், ஆபத்பாண்டவராக கர்நாடக அரசின் கண்களுக்கு தெரிந்தார், ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, 2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 வருடங்கள் அரசு வக்கீலாக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தவர். உடனடியாக சட்ட அமைச்சகம், ஆச்சாரியாவை தொடர்பு கொண்டு உதவ கேட்டுக்கொண்டது. சம்மதித்தார். ஆச்சாரியா. 18 பக்கங்களில், பளார், சுளீர் வாததங்களை தயார் செய்து, ஹைகோர்ட்டில் சமர்ப்பித்தும் விட்டார். ஜெயலலிதா வழக்கு விவரங்களை ஃபிங்கர் டிப்சில் வைத்திருந்த ஆச்சாரியாவை விட்டால் வேறு யார்தான் இந்த பணிக்கு பொருத்தமாக இருந்திருக்க முடியும். இதோ, மீண்டும் புயல் போல கிளம்பியுள்ள ஆச்சாரியா, 'ஒன்இந்தியாவுக்கு' தனது பிரத்யேக பேட்டியை அளித்தார். அதன் விவரம்:
கே: ஜெயலலிதா வழக்கில் வாதாடுவதில்லை என்று ராஜினாமா செய்த நீங்கள் மீண்டும் வர தூண்டியது என்ன? ப: கர்நாடக அரசு சார்பில் என்னை அணுகி, ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டனர். குறுகிய காலத்திலேயே, வாதத்தை சமர்ப்பிக்க எனது அனுபவம் உதவும் என்று அவர்கள் நினைத்தனர். ஏனெனில், திங்கள்கிழமை தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட், கர்நாடக அரசுக்கு, வாதத்தை சமர்ப்பிக்க ஒருநாள்தான் அவகாசம் தந்திருந்தது. எனவே, அரசின் கோரிக்கையை நான் ஏற்றேன்.
அம்சங்கள் கே: வாதத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? ப:கர்நாடக அரசுதான் வழக்கை நடத்தும் நிலையில், அதன் கருத்தை கேட்காமலேயே, அரசு வக்கீலை நியமித்து, வழக்கை நடத்திக்கொண்டனர். இதைத்தான் முக்கிய வாதப்பொருளாக வைத்துள்ளோம்
கருத்து கே: பவானிசிங் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து.. ப: கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகு, வழக்கை செயல்படுத்தும் முழு பொறுப்பும் கர்நாடக அரசுக்கே வந்துவிடுகிறது. அரசு வக்கீலையும், கர்நாடக அரசுதான் நியமிக்க வேண்டும். இதைத்தான் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது.
பங்கு என்ன கே: ஜெ.வழக்கில் இனிமேல் உங்கள் பங்கு என்னவாக இருக்கும்? ப: எனது பங்கு குறைவானதே. திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, ஒருநாள் அவகாசத்தில் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. அதை செய்துள்ளேன். இதுதான் எனது பங்காக இருக்கும்
ஜெ. வழக்கில் இருந்து விலகிய நீங்கள் மீண்டும் திரும்ப வேறு ஏதேனும் முக்கிய காரணம் உண்டா? ப: நான் ஏற்கனவே கூறியதைப்போல, இந்த வழக்கில் தற்போது எனது பங்கு மிகவும் குறைவே. குறுகிய காலத்தில் என்னால்தான், வாதத்தை தாக்கல் செய்ய முடியும் என்று கர்நாடக அரசு நம்பியது. அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றினேன். அவ்வளவே.
கே: ஜெ. அப்பீல் மனு மீது தீர்ப்பை எப்போது எதிர்பார்க்கலாம்? ப: இதற்கு நான் பதில் அளிப்பது பொருத்தமாக இருக்காது. ஆனால், உச்ச நீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவை கணக்கிட்டால், மே 12ம் தேதிக்குள் தீர்ப்பு வந்தாக வேண்டும்.
கே: மே 12ம் தேதிக்குள் ஹைகோர்ட் தீர்ப்பளிக்க முடியாவிட்டால், நீதிபதி என்ன செய்யலாம்? ப: மே 12ம் தேதிக்குள், தீர்ப்பளிக்க முடியாவிட்டால், மேலும் காலக்கெடு தருமாறு, உச்சநீதிமன்றத்திடம், ஹைகோர்ட் நீதிபதி கோரிக்கைவிடுக்கலாம்.
கே: எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம்தான்..வழக்கின் முடிவு என்னவாக இருக்கும்? (சிரித்தபடியே..) என்னால் எப்படி இதற்கு பதில் சொல்ல முடியும்..கோர்ட்தான் இதில் முடிவெடுக்க வேண்டும். எவ்வளவு சிறப்பாக வாதத்தை சமர்ப்பிக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக வாதத்தை சமர்ப்பித்துள்ளோம். இறுதி முடிவை கோர்ட்தான் எடுக்க வேண்டும். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.

Read more at: /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக