ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

Maharashtra 3 மாதங்களில் 601 விவசாயிகள் தற்கொலை

மும்பை, 2015-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மராட்டியத்தில் 601 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். மராட்டிய அரசின் தகவலின்படி நாள் ஒன்றிற்கு 7 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர் என்பதை காட்டுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் மராட்டியத்தில் 1,981 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். ஆனால் கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகள் சதவீதம் இதில் 30 சதவீதம் ஆகி உள்ளது. விவசாயிகள் தற்கொலையை தடுப்பதே அரசின் முன்னுரிமை என்று மராட்டிய அரசு கூறிவரும் நிலையில் இதுபோன்று நடைபெற்று உள்ளது. மாநிலத்தில் கடந்த ஆண்டு விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட நிலை காணப்பட்டது. இந்தஆண்டு பெய்த பருவம் தவறிய மழையின் காரணமாக பயிர்சேதம் அதிகமாக ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர்.


மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் விதர்ப்பா பகுதியே விவசாயிகள் அதிமாக தற்கொலை செய்துக் கொண்ட பகுதியாக காணப்படுகிறது. பருத்தி அதிகமாக விளையும் பகுதியாக விதர்ப்பா விழங்குகிறது. மராட்டியத்தின் விதர்ப்பா பகுதியில் மட்டுமே ஜனவரி-மார்ச் இடைப்பட்ட மாதங்களில் சுமார் 319 பேர் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து மாராத்வாடா பகுதியில் 215 பேர் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். இந்த இரண்டு பிராந்தியங்களும் வறட்சி மற்றும் பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இதே நிலையே காணப்பட்டது.

கடந்த ஆண்டு மராட்டியத்தில் 1,981 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்களில் விதர்ப்பாவை சேர்ந்தவர்கள் 1,097 பேர் ஆவர். மாராத்வாடாவில் 574 பேர் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். வறட்சியை தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்கம் தெரிவிக்கையில், 90 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில், நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது என்பது மிகவும் குறைவானது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப பெறுவது தொடர்பாக அரசு அறிவுரை வழங்கியிருந்தாலும் வங்கிகள் உடனடியாக கடனை திரும்பி கொடுக்க வலியுறுத்தி வருகின்றன. என்று கூறப்பட்டு உள்ளது.

விளைபொருட்களுக்கு குறைவான விலை மற்றும் வங்கி கடன் ஆகியவை விவசாயிகளை மேலும் மோசமான நிலைக்கு தள்ளுகிறது. இவை அனைத்தையும் அரசு கருத்தில் எடுத்துக் கொள்வது இல்லை. ஒரு குவிண்டால் பருத்தியை விளைய வைக்க சுமார் ரூ. 6,800 செலவு செய்யப்படுகிறது. ஆனால் அரசால் நிர்ணயம் செய்யப்படும் விலையானது ரூ. 4 ஆயிரம் மட்டுமே. வறட்சி மட்டுமின்றி விவசாயிகள் கடனிலும் உள்ளனர் என்று விதர்ப்பா விவசாயி கிஷோர் திவாரி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக விவசாய துறை மந்திரி எக்நாத் காட்சே, எங்களுடைய அரசு விவசாயிகள் நெருக்கடிக்கே முன்னுரிமை வழங்கி வருகிறது. நாங்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து உள்ளோம், அவை விரைவில் பலன் அளிக்கும்,” என்று தெரிவித்து உள்ளார்   dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக