ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

Kathmandu நிலநடுக்கம் 2,263க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம்

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், தலைநகர் காத்மாண்டு உட்பட, பெரும்பாலான இடங்களை உருக்குலைத்தது. இடிபாடுகளில் சிக்கி, 2,263க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதன் தாக்கத்தால், நம் நாட்டின் தலைநகர் டில்லி உட்பட, வட மாநிலங்களும் குலுங்கின. அண்டை நாடான நேபாளத்தில், நேற்று காலை, 11:56 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, 80 கி.மீ., துாரத்தில் உள்ள பொகாரா என்ற இடத்தில், பூமிக்கு அடியில், 15 கி.மீ., ஆழத்தை, மையமாகக் கொண்டு, இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில், 7.9 என, பதிவான இந்த நில நடுக்கம், 30 நொடிகளில் இருந்து, 2 நிமிடங்கள் வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, 12 முறை சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன. சாலையில் விரிசல்: இந்த நில நடுக்கத்தால், தலைநகர் காத்மாண்டு, அதன் அருகேயுள்ள மற்ற நகரங்களிலும் கட்டடங்கள் குலுங்கின. கோவில்கள், வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து விழுந்தன;
சாலைகளில் மிகப் பெரிய விரிசல்களும், பள்ளங்களும் ஏற்பட்டன. இதனால், போக்குவரத்து முடங்கியது; மொபைல் போன் சேவையும் துண்டிக்கப்பட்டது. காத்மாண்டுவின் மையப்பகுதியில் இருந்த, 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தரஹாரா டவர் என்ற, ஒன்பது மாடி கோபுரம் முற்றிலும் இடிந்து விழுந்து, தரைமட்டமானது. அதற்குள், ஏராளமானோர் இருந்ததாக தெரியவந்துள்ளது. மண்ணோடு மண்ணாக புதைந்து போன, அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பழமை வாய்ந்த கட்டடங்கள் மற்றும் வீடுகளுக்கு பெயர் பெற்ற அழகான காத்மாண்டு நகரம், நில நடுக்கத்தால் உருக்குலைந்து, கற்குவியல்களாக காட்சி அளித்தது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட, இடிபாடுகளில் சிக்கி, 2,263க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. அதனால், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கால், கை முறிந்தவர்கள், தலையில் பலத்த காயம் ஏற்பட்டவர்களை ஏற்றியபடி, மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் சென்றபடி இருந்தன.
நேற்று நள்ளிரவு நிலவரப்படி, 1457 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு நிதியமைச்சர், ராம் சரண் மகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல இடங்களிலும் இடிந்து விழுந்துள்ள கட்டடங்களிலிருந்து தொடர்ந்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.>வட மாநிலங்களில்...: இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவையும், அதிபர் ராம் பரன் யாதவையும் தொடர்பு கொண்டு பேசினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக, அவர்களிடம் உறுதி அளித்தார். நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கம், டில்லி, உ.பி., பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட, நம் நாட்டின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது. பீகாரில், மோதிஹாரி, சீதாமர்கி உள்ளிட்ட மாவட்டங்களில், கட்டட இடிபாடுகளில் சிக்கி, 23 பேர்இறந்தனர். நில நடுக்கம் காரணமாக, பீகாரின் வடக்கு பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நில நடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும், உ.பி.,யில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இங்கு, பாரபங்கி, கோராக்பூர் ஆகிய மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில், எட்டு பேர் இறந்தனர்.மாணவர்கள் காயம்: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில், 40 மாணவர்கள் காயமடைந்தனர்; அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளில், மூன்று பேர் இறந்தனர்.

மத்திய உள்துறை செயலர் கோயல் கூறுகையில், ''நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தால், நம் நாட்டில், 34 பேர் இறந்துள்ளனர்,'' என்றார்.

நில நடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, தொலைபேசியில் பேசி, போதிய பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பிரச்னையை சமாளிக்க, டில்லியில் உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று கூட்டினார். இதில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், தேசிய பேரிடர் மீட்பு குழு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நேபாளத்துக்கு உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைப்பது என்றும், உ.பி., பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் மீட்பு குழுவை அனுப்பி வைப்பது என்றும்முடிவு எடுக்கப்பட்டது. விமானப் படையினரை தயார் நிலையில் வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.பேரிடர் மீட்பு குழு விரைந்தது: நேபாளத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காகவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், தேசிய பேரிடர் மீட்பு குழு அங்கு விரைந்தது. உ.பி., மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து, சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் மீட்பு குழுவினர் சென்றனர். இந்த குழுவில், 450 பேர் இடம் பெற்றுள்ளனர். நேபாள தலைநகர் காத்மாண்டுவின் மையப் பகுதியில் இருந்த, பழமையான புராதன சின்னமான, 'தரஹாரா டவர்' என்ற கோபுரம், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் இடிந்து விழுந்து, தரைமட்டமானது. இதன் இடிபாடுகளில் இருந்து, 180 உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்த கோபுரம், 1832ல், அப்போதைய நேபாள பிரதமர் பீம்சேன் தபா என்பவரால் கட்டப்பட்டது. நேபாள ராணி, லலித் திரிபுர சுந்தரியின் உத்தரவின்படி, இந்த கோபுரம் கட்டப்பட்டது. 203 அடி உயரத்தில், ஒன்பது மாடிகளை உடைய இந்த கோபுரத்தின் எட்டாவது மாடியில், பார்வையாளர் மாடம் இருந்தது. இதில் இருந்து, காத்மாண்டுவின் அழகை ரசிக்கலாம். அழகிய கட்டடக் கலையின் பெருமைக்காக, இந்த கோபுரம், யுனெஸ்கோவால், உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த கோபுரத்துக்கு அருகில், 'பீம்சேன் டவர்' என்ற பெயரில், 1824ல், ஒரு கோபுரம் கட்டப்பட்டது. இது, 11 மாடிகளை உடையது. 1934ல், ஏற்பட்ட நில நடுக்கத்தால், இந்த கோபுரம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.நேபாளத்தில், 81 ஆண்டுகளுக்கு பின், இப்போது தான், பெரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. என் கண் முன், ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன; இதைப் பார்த்து உறைந்து போய் விட்டேன். மீட்பு பணிகளுக்காக இந்தியா உட்பட, அனைத்து நாடுகளிடமும் உதவி கோரியுள்ளோம்
கமல் சிங் பாம்
நேபாள போலீஸ் துறை செய்தி தொடர்பாளர்


''நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தால் நம் நாட்டில் 34 பேர் இறந்துள்ளனர்,'. நில நடுக்கத்தின் தாக்கம் ஏற்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி போதிய பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். தினமலர்.com
கோயல்
மத்திய உள்துறை செயலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக