சனி, 11 ஏப்ரல், 2015

சகாயம் IAS இன் உதவியாளர் சாலைவிபத்தில் பலி? சகாயத்தை மிரட்ட திட்டமிட்ட சாலைவிபத்து கொலை?


கிரானைட் முறைகேடுகளை விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு படம் எடுத்து கொடுத்தவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, மதுரை மாவட்டம் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. மலை மற்றும் கரடு முரடான பாதைக்கு சகாயம் நேரடியாகவே சென்று கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டார ஆட்கள் சென்று பார்க்க முடியாத இடங்களுக்கு ஆளில்லாத குட்டி விமானங்களை கொண்டு ஆய்வு நடத்தினார் சகாயம். இந்த குட்டி விமானங்களை இயக்கியவர் பார்த்தசாரதி. இவர் மதுரை கருப்பாயூரணி அருகே உள்ள வீராபாஞ்சனூரில் வசித்து வந்தார். இவருக்கு சீனியம்மாள் என்ற மனைவியும், பூரணி என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர், ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு ஆய்வு மேற்கொள்வதற்காக ஆளில்லாத 20 குட்டி விமானங்களை வைத்துள்ளார். சகாயம் குழுவினர் கேட்டுக் கொண்டதின் பேரில் ஆட்கள் செல்ல முடியாத இடத்திற்கு ஆளில்லாத குட்டி விமானங்களை அனுப்பி படங்கள் எடுத்தார். 10 நாட்களாக குட்டி விமானம் மூலம் படங்கள் எடுத்த பார்த்தசாரதி, அண்மையில்தான் குட்டி விமானம் எடுத்த அனைத்து படங்களையும் சகாயம் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்குபவர் தான் விபத்தில் பலியான பார்த்தசாரதி. (வட்டமிடப்பட்டுள்ளது)

இந்நிலையில், ஏரோநாட்டிக்கல் படித்து வரும் மாணவர் ஒருவரை, இன்று அதிகாலை 5 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு, காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார் பார்த்தசாரதி. வீட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே வேகத்தடை இருந்துள்ளது. மெதுவாக காரில் வந்த பார்த்தசாரதி, வேகத்தடையை காலை 5.30 மணி அளவில் தாண்டி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த வழியாக பார்த்தசாரதி அடிக்கடி வந்துள்ளார். வேகத்தடை இருப்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த சூழ்நிலையில் வேகத்தடையை தாண்டி 20 மீட்டர் தூரத்தில் பார்த்தசாரதி கார் மரத்தில் மோதியதுதான் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சகாயம், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதை படம் எடுத்து கொடுத்த பார்த்தசாரதி, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகாயம் குழுவுக்கு கிரானைட் முறைகேடு தொடர்பாக படம் எடுத்து கொடுத்தவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சண்.சரவணகுமார்
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக