வியாழன், 23 ஏப்ரல், 2015

பணத்திற்கு அடிமையாகாத எந்த மனிதனும் உலகில் இல்லை என்று ஜெயலலிதா நம்புகிறார்!

vbk-01-Jaya_1420502gஎத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!! இந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது.     1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது.
ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்.  அதை இந்த நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.     இந்த ஊழல் வழக்கை தன் தலையில் வைத்துக் கொண்டே, இரண்டு முறை ஆட்சியையும் பிடித்து விட்டார். ஆனால் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விலைக்கு வாங்கி, எப்படியாவது மே மாதத்துக்குள் மீண்டும் முதல்வராகி விடலாம் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்ந்திருக்கிறது.     மே 23 மற்றும் 24ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவித்திருந்த உலக முதலீட்டாளர்களின் மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது  
இதை தள்ளி வைப்பதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.   இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் செய்திப்படி, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலில் திட்டமிடப்பட்டது செப்டம்பர் 2014ல் திட்டமிடப்பட்ட இந்த மாநாடு, பின்னர்  2015 மே 23 மற்றும் 24 ஆகிய நாட்களுக்கு மாற்றப்பட்டது.    தற்போது மீண்டும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.  இணைப்பு    இந்த மாற்றத்துக்கான காரணம்தான் வினோதமாக உள்ளது.    மே மாதம் கோடைக்காலமாம்.  வெயில் அதிகமாக இருக்குமாம்.   அதனால் வேறு மாதத்துக்கு தள்ளி வைத்தால் நிறைய்ய முதலீடு செய்கிறோம் என்று பல்வேறு முதலீட்டாளர்கள் தெரிவித்தார்களாம்.  அதனால் இந்த மாநாடு செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.   இந்த ஆண்டுதான் முதன் முறையாக மே மாதம் கோடைக்காலம் வருவது போல, தமிழக அரசின் அறிவிப்பைப் பார்த்தீர்களா ?    இப்படி ஒரு கோமாளித்தனமாக அரசாங்கத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?      இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், தங்கள் மாநிலத்துக்கு முதலீட்டை கொண்டு வருவதற்காக ஏகப்பட்ட முனைப்புகளில் ஈடுபடுகிறது.
சமீபத்தில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார் இணைப்பு    சீன நிறுவனத்தோடு 500 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வந்திருக்கிறார் இணைப்பு )  ஆந்திராவில் பாலங்கள் கட்டுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களில் சீன நிறுகூனங்களோடு கையெழுத்திட்டு வந்திருக்கிறார் இணைப்பு     ஆனால் மின் துறையில் முதலீடு செய்ய வரும் இதே சீன நிறுவனத்தை தமிழக அரசு, ஓட ஓட விரட்டுகிறது.
naidu_650x400_81428948340
சீன அதிகாரிகளோடு பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு

ஒரு பத்திரிக்கையாளர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.   திமுக ஆட்சியல் இருந்தபோது, மே 2010ல், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி இறந்து போனார்.  அப்போது, முதலமைச்சர் கருணாநிதி, நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.   அப்போது ஒரு பத்திரிக்கையாளர் மற்றொரு புகைப்படக் கலைஞரிடம் ஜெயலலிதா வரவில்லையா ? அவர்கள் கட்சி பிரமுகராயிற்றே என்று கேள்வி எழுப்பியதும் அந்த புகைப்படக் கலைஞர் சொன்னது என்ன தெரியுமா ? “என்ன சார் லூசுத்தனமா கேக்கறீங்க ?    பாடியை போயஸ் கார்டனுக்கு எடுத்துட்டு வரச் சொல்லிட்டாங்க” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.   இதுதான் ஜெயலலிதா.
இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும், முதலமைச்சர்களும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்து, அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்து, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்யச் சொல்லி வலியுறுத்திக் கொண்டிருக்கையில், ஜெயலலிதா, ஒய்யாரமாக போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு, வந்து முதலீடு செய்யுங்கள் என்றால் எந்த தொழிலதிபர் வருவார் ?  அதுவும் வரும் தொழில் அதிபர்களை சந்திப்பதற்கும் நேரம் ஒதுக்குவதில்லை.    மகாராணிக்கு எப்போது மூடு இருக்கிறதோ, அப்போதுதான் சந்திப்பார்.  அப்படியே சந்தித்தாலும் உடனடியாக தொழில் தொடங்கி விட முடியாது.   கட்சி நிதி என்று ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் கேட்கும் 8 முதல் 12 சதவிகித கமிஷனை அளித்தால் மட்டுமே அடுத்த கட்ட வேலைகள் நடக்கும்.    அப்படி அளிக்க மறுத்தால், தொழிற்சாலை நடத்த ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.  இந்த லட்சணத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடாம்.   கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போகும் கதைதான் இது.
11097998_1500876423501836_3212638305975522449_n
செப்டம்பர் 2014ல், உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கான தேதி ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.   செப்டம்பர் 20 என்று முதலில் முடிவு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் ஜெயலலிதா பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக செப்டம்பர் 27க்கு தள்ளி வைக்கப்பட்டது.   இப்படிப்பட்ட ஒரு சூழலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை செப்டம்பர் 2014ல் நடத்த ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பாரே என்றால், எந்த அளவுக்கு தான் விடுதலை ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை என்பது புரிகிறதா ?
பணத்துக்கு அடிபணியாத ஒரு மனிதனும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ற ஜெயலலிதாவின் தீர்மானமான எண்ணமே இப்படியொரு மூர்க்கமான மூடநம்பிக்கையில் ஜெயலலிதாவை ஆழ்த்தியது. ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கக் கூடிய பல்வேறு சம்பவங்கள் நடக்கும்.  குறிப்பாக துன்பமும் மனவேதனையும் அடையக் கூடிய பல்வேறு சம்பவங்கள் நடைபெறும்.  அந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்பவனே வாழ்வில் முன்னேறுகிறான்.
எப்படியாவது பணம் கொடுத்து விலைக்கு தீர்ப்பை வாங்கி விடலாம் என்று உறுதியான நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதாவுக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.    அந்த தீர்ப்பிலிருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக் கொண்டிருக்கிறாரா என்றால் துளியும் இல்லை.     மீண்டும் குமாரசாமியை விலைக்கு வாங்கி விடலாம் என்றும், நாம் நிச்சயம் விடுதலை செய்யப்படப் போகிறோம் என்ற எண்ணமே, மே மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிட வைத்தது.
IN02_K_GNANADESIKA_2230325eஇதே போல, ஜெயலலிதாபோடு இருப்பவர்கள் சொன்ன பொய்யை நம்பித்தான், திமுக பவானி சிங்குக்கு நியமனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கும், தள்ளுபடி செய்யப்பட்டு, பவானி சிங் நியமனம் செல்லும் என்று தனக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று உறுதியாக நம்பியிருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைச் சுற்றி பொய்யையும் புரட்டையும் கூறி ஜெயலலிதாவை இருட்டறையில் வைத்திருக்கும் நால்வர் குழுவின் முக்கிய உறுப்பினரான தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர் மற்றும் பவானி சிங் ஆகிய இருவரையுமே சரிக்கட்டி விட்டதாகவும், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே வரும் என்று நம்ப வைத்தனர்.     பானுமதியை ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே நன்கு தெரியும்.   சதாசிவத்தை பாராட்டி தமிழக அரசு நடத்திய விழாவில், அனைத்து நீதிபதிகளுக்கு முன்பாகவும் தன்னை “மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா” என்று அழைத்தவர் என்றும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாறுதலில் செல்வதற்கு முன்பாக தன்னை சந்தித்து ஆசி பெற்றவர் என்பதும் நன்கு தெரியும்.    ஆனால், மதன் பி லோக்கூரையும் சரிக்கட்டி விட்டதாக, ஞானதேசிகன் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் கூறியதை அப்படியே நம்பினார் ஜெயலலிதா.    இந்த வழக்கில் தீர்ப்பு வரும் அன்று, ஞானதேசிகனின் மகன், உச்சநீதிமன்றத்தில் இருந்தார் என்றால் அதிகாரிகளுக்கு ஜெயலலிதாவை காப்பாற்றுவதில் உள்ள முனைப்பை புரிந்து கொள்ளுங்கள்.
ஜெயலலிதாவை பொய்யையும் புரட்டையும் கூறி இருளில் அவரை வைத்திருப்பதன் பின்னணியில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலர் ஞானதேசிகன், மக்கள் டிஜிபி ராமானுஜம் மற்றும், முதல்வரின் மூன்றாவது செயலாளர் வெங்கட்ரமணன். அமைச்சர்களின் வசூல் கணக்குகளை ஜெயலலிதாவிடம் வாரந்தோறும் தெரிவிப்பதும் இந்த வெங்கட்ரமணன்தான். இந்த நால்வர் அணி போதாது என்று, தற்போது புதிதாக இந்த வரிசையில் சேர்ந்திருப்பவர் ஆர்எஸ்எஸ் பிரமுகர் குருமூர்த்தி.    சங்கராச்சாரியாரை கைது செய்தபோது, இதே ஜெயலலிதாவை மனதார சபித்த இதே குருமூர்த்திதான், தற்போது டெல்லியில் பேசி ஜெயலலிதாவை காப்பாற்ற முயற்சி செய்வதாக அடிக்கடி ஜெயலலிதாவிடம் பேசி வருகிறார்.      இவை தவிர, அமைச்சர்கள் பிரார்த்தனை என்ற பெயரில் நடைபெறும் கோமாளித்தனங்களையெல்லாம் பார்த்து, நாம் நிச்சயம் விடுதலை செய்யப்படப் போகிறோம் என்ற நம்பிக்கையிலேயே ஜெயலலிதா இன்னும் இருந்து வருகிறார்.
venkatrmanan2
வெங்கட்ரமணன், அவரது மகள் ஜுவாலா, மற்றும் அவரது மனைவி பத்மினி வெங்கட்ரமணன்.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி
25க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் ஜெயலலிதா மீது 1996ல் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டன.   அவற்றுள் சில வழக்குகளைத் தவிர, பெரும்பாலான வழக்குகள், போதுமான ஆதாரங்கள் உள்ளவை.    அந்த வழக்குகளில் சிலவற்றில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு மேலமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டார்.   சில வழக்ககளை அவர் 2001ல் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் குழி தோண்டிப் புதைத்தார்.     எத்தனையோ நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், தனது ஊழலுக்கு ஆதரவாகவும் சாட்சியமாகவும் மாற்றியதில் ஜெயலலிதா கை தேர்ந்தவர்.
அரசு நிறுவனமான டான்சி நிலத்தை, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் அவர் தோழி சசிகலாவும், குறைந்த விலைக்கு வாங்கினர் என்பது வழக்கு.   ஆனால், அது வரை நேர்மையான நீதிபதி என்று அறியப்பட்ட தினகர், ஜெயலலிதாவை விடுதலை செய்து, தனது தீர்ப்பில் என்ன கூறினார் தெரியுமா ?
“TANSI property is not government property and so there is no question of Jayalalithaa having bought government property; there is no specific law which bars a public servant from buying property; the Code of Conduct, which requires that Ministers should not buy government property, has no statutory force; “the market value does not lie in the property contemplated to be purchased but in the mind of the person contemplating to purchase the property”; the trial judge was not justified in using market value as the yardstick for concluding that there was a wrongful loss to the government; the prosecution had failed to show that Rs.7.32 lakhs was the guideline value but the defence showed “positive” evidence that the value of the TANSI land property was Rs.3 lakhs a ground (2,400 sq ft); and so “no sinister motive” could be seen in the transaction. Once it was held that there was no wrongful loss or wrongful gain, and a substantive offence is not made out, then there is no conspiracy (Section 120-B of the IPC).
டான்சி நிலம் அரசு நிலமே அல்ல.    ஆகையால் ஜெயலலிதா அரசு நிலைத்தை வாங்கினார் என்ற கேள்வியே எழவில்லை.   ஒரு பொது ஊழியர் நிலம் வாங்குவதை தடுப்பதற்கான சட்டம் எதுவும் இல்லை.   ஒரு அமைச்சர் அரசு நிலத்தை வாங்கக் கூடாது என்ற விதி, விதியே தவிர சட்டம் அல்ல.    ஒரு நிலத்தின் சந்தை விலை என்பது அந்த நிலத்தில் அல்ல, வாங்குபவர் மனதில் உள்ளது.   சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டதென்று கருதி ஜெயலலிதாவை தண்டித்ததன் மூலம், நீதிபதி தவறிழைத்துள்ளார்.  அந்தப் பகுதியில் ஒரு க்ரவுண்டின் விலை அரசு நிர்ணயத்திபடி 7.32 லட்சம் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது. ஆனால் ஜெயலலிதா தரப்பில் டான்சி நிலத்தின் ஒரு க்ரவுண்டின் அரசு மதிப்பு வெறும் மூன்று லட்சம்தான் என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது ஆகையால், இந்த பரிவர்த்தனையில் உள்நோக்கம் எதுவும் இருப்பதாக கருத முடியாது. அரசுத் தரப்புக்கு நஷ்டம் இல்லை, ஜெயலலிதா தரப்புக்கு நியாயமும் இல்லை என்ற நிலையில் கூட்டுச் சதி என்பதற்கான பேச்சே எழவில்லை.”
இதுதான் நீதிபதி தினகரின் தீர்ப்பு.
ராம் ஜெத்மலானி, ஹரீஷ் சால்வே போன்ற வழக்கறிஞர்களெல்லாம், காசு கொடுத்தால் கோவேறு கழுதையை கல்யாணி குதிரை என்று வாதிடுபவர்கள்.  ஆனால், ஃபாலி நரிமன் போன்ற வழக்கறிஞர்கள், தங்களுக்கென்று ஒரு அளவுகோலை கடைபிடிப்பவர்கள்.    இந்த வழக்குக்குத்தான் ஆஜராக வேண்டும், இந்த வழக்குக்கு ஆஜராகக் கூடாது என்ற வரைமுறையை கடைபிடிப்பவர்கள்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் நிபுணர் என்று இந்தியாவில் கருதப்படுபவர்களில் ஒருவர் ஃபாலி எஸ்.நரிமன்.    1971ம் ஆண்டு முதல் மூத்த வழக்கறிஞராக இருப்பவர்.    மே 1972 முதல் ஜுன் 1975 வரை, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்த நரிமன், நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்டவுடன் அதை எதிர்த்து ராஜினாமா செய்தார்.      அவர் எழுதிய ஒரு புத்தகம்தான் The State of the Nation. அந்த புத்தகத்தில் ஊழல் குறித்து தனியாகவே ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். அந்த அத்தியாயத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
the-state-of-the-nation-original-imaeffahggwb9gxg
The collapse of the Jain hawala group of cases had its own backlash on public perception about the criminal justice system.  It confirmed the worst fears of the general public:  an innominate class of persons not bothered too much about the niceties of the legal procedure !   their perception was that the big fixh never appeared to get their just desserts through the legal process, either because the law was defective or for some other reason too complicated for them to comprehend !  It was only the small fish that invariably get caught, sentenced and incarcerated !  We cannot honestly say that the general public was wrong in its perception of our laws and our complex criminal justice system.
“ஜெயின் ஹவாலா வழக்குகள் ஆதாரம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, இந்திய குற்றவியல் நடைமுறைகளைப் பற்றி பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது.  மேல்தட்டு மக்கள், சட்டத்தையும், அதன் வழிமுறைகளையும் பற்றிக் கவலையே படுவது கிடையாது என்ற பொதுமக்களின் அச்சத்தை அது உறுதி செய்தது.     சட்டத்தின் வழிமுறைகள் காரணமாகவோ, அல்லது வேறு ஒரு புரிந்து கொள்ள முடியாத காரணங்களினாலோ, பெரிய மீன்கள் சட்டத்தில் எப்போதும் சிக்குவதில்லை என்ற அவர்களின் பொதுவான நம்பிக்கையை அது உறுதி செய்தது.    சிறிய மீன்கள்தான் எப்போதும் பிடிபட்டு, தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றன.   நமது குற்றவியல் நடைமுறைகளைப் பற்றி பொதுமக்கள் வைத்திருக்கும் இந்த நம்பிக்கையை நாம் தவறு என்று சொல்ல இயலாது.”
இதுதான் பாலி நரிமன் ஊழல் செய்யும்  பெரிய மனிதர்கள் குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளது.   இந்த பாலி நரிமன்தான், இந்தியாவிலேயே வரலாறு படைக்கக்கூடிய வகையில் ஊழல் வழக்குகளை, தாமதித்து, சட்டத்தின் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு ஊழல் பெருச்சாளிக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறார்.      தன்னுடைய சொந்த மகன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில், அந்த நீதிமன்றத்தில் வாதாடுவது முறையல்ல என்ற மரபையும் மீறி, ஜெயலலிதாவுக்காக வளைத்து வளைத்து வாதிடுகிறார்.
இப்போது இறுதியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்குதான் வினோதமானது.  பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து இருப்பது சரியா தவறா என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு.
இந்த வழக்கை திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகன் தொடுத்துள்ளார்.    இந்த வழக்கு காரணமாக, ஜெயலலிதாவின் வழக்கு தீர்ப்பு தாமதப்படுகிறது, இது தேவையற்ற வழக்கு என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.   2003ல், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று திமுக வழக்கு தொடுத்திராவிட்டால், இந்த வழக்கு என்றைக்கோ குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. இந்த வழக்கில் புகார்தாரரான சுப்ரமணியன் சுவாமி, ஜெயலலிதாவோடு சமரசமாகி, இந்த வழக்கை என்றோ மறந்து விட்டார் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
இந்த வழக்கில் பவானி சிங் நியமனம் சரியே என்று தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, தனது தீர்ப்பில், பவானி சிங் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டபோது, அன்பழகன் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  அதன் பிறகுதானே மனு தாக்கல் செய்தார் என்பதை தனது தீர்ப்பில் ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளார்.    ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞரான பவானி சிங், ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபணை இல்லை என்று வாதாடியதை நாம் மறந்து விட முடியாது.  இதற்குப் பிறகே திமுக களமிறங்கியது.   நீதிபதி குமாரசாமி முன்பாக பவானி சிங்குக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின், கர்நாடக இரு நீதிபதி அமர்வுக்கு முன்பாக மேல் முறையீடு செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.  அதன் பின்னரே உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடரப்பட்டது.    வழக்கு விசாரணை முடியும் தருணத்தை எட்டி விட்டது, பவானி சிங் வாதத்தை முடிக்கப் போகிறார் என்பதை உச்சநீதிமன்றம்முன்பு சுட்டிக் காட்டியும், இந்த வழக்கை காலதாமதப்படுத்தி, தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும் வரை தாமதப்படுத்தியது உச்சநீதிமன்றமேயன்றி, திமுக அல்ல.  ஒரு எதிர்க்கட்சியாக திமுக தனது பணியை சரியாகவே செய்துள்ளது.
பவானி சிங் வழக்கு என்ன ?    2003ல் இந்த வழக்கை உச்சநீதிமன்றம், கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.  அந்த உத்தரவின்போது, இவ்வழக்குக்கான அரசு வழக்கறிஞரை, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து, கர்நாடக அரசு நியமிக்க வேண்டும் என்று அப்போது உத்தரவிடப்பட்டது.   அதன்படி நியமிக்கப்பட்ட பி.வி.ஆச்சார்யாவை கடுமையான நெருக்கடி கொடுத்து, ராஜினாமா செய்ய வைத்தார் ஜெயலலிதா.  அதன் பிறகு, பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது பவானி சிங் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, பவானி சிங் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.   ஒரு குற்றவாளி எனக்கு இந்த அரசு வழக்கறிஞர்தான் வேண்டும் என்று வாதாடுவது போன்ற வினோதத்தை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?     ஆனால் ஜெயலலிதா இப்படி ஒரு வழக்கை தொடுத்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, பவானி சிங்கைத்தான் நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
28BG_JAYA_PUBLIC_P_2129362f
அதன்பிறகு, பவானி சிங் ஒழுங்காக வாதாடினாரா என்றால் இல்லை.    அந்த வழக்கில் தன் வாதத்தை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தினார்.    வழக்கு முடியும் தருவாயை எட்டவும், உடல் நிலை சரியில்லை என்று மருத்துவ சான்றை சமர்ப்பித்து தாமதப்படுத்தினார்.  விசாரணை நீதிமன்ற நீதிபதி இந்த தாமதத்தைப் பார்த்து எரிச்சலடைந்து, பவானி சிங்கின் மூன்ற நாள் ஊதியத்தை அபராதமாக விதித்தார்.  இப்படி விதிக்கப்பட்ட அபராதத்தை கர்நாடக உயர்நீதிமன்றம் சரியென்று தீர்ப்பளித்தது.   இன்று கேரள ஆளுனராக இருந்து கொண்டு, பதவிக்காக பிச்சை எடுக்கும் சதாசிவம் அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்ததால், பவானி சிங் உடல் நிலை சரியாகும் வரை வழக்குக்கு தடை விதித்தார்.
இப்படிப்பட்ட பவானி சிங்தான், தற்போது ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுவில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.   உச்சநீதிமன்றத்தின் முன் இந்த வழக்கு வந்தபோது, பவானி சிங் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் போனது, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, இதற்கும் மேலாக, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை என்று கூறியது, ஆகிய காரணங்களை மட்டுமே வைத்து, பவானி சிங் நியமனத்தை செல்லாததாக்கியிருக்க வேண்டும்.   ஆனால், இதை மாதக்கணக்கில் இழுத்தடித்து, பெங்களுரில் வழக்கு விசாரணையே முடியும் வரை காத்திருந்து, அதன் பிறகு, பிளவுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நீதிபதி மதன் லோக்கூர் தனது தீர்ப்பை தொடங்குவதற்கு முன்னதாகவே இப்படி குறிப்பிடுகிறார்.
Before adverting to the facts of the case, it needs mention that this case is a classic illustration of what is wrong with our criminal justice delivery system. If the allegations made by Mr. K. Anbazhagan are true that the  accused persons used their power and influence to manipulate and subvert the criminal justice system for more than 15 years thereby delaying the conclusion of the trial against them, then it is a reflection on the role that power and influence can play in criminal justice delivery.
However, if the allegations made by him are not true, even then it is extremely unfortunate that a criminal trial should take more than 15 years to conclude. Whichever way one looks at the unacceptable delay, it is the criminal justice delivery system that comes out the loser. Something drastic needs to be done to remedy the system, if not completely overhaul it, and as this case graphically illustrates, the time starts NOW.
இந்த வழக்கினுள் நுழைவதற்கு முன்பாக, நமது குற்றவியல் நீதி பரிபாலனத்தில், என்ன தவறு உள்ளது என்பதை விளக்குவதற்கு இந்த வழக்கு ஒரு அற்புதமான உதாரணம்.  திரு  திரு கே.அன்பழகன் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இவ்வழக்கின் குற்றவாளிகள் தங்கள் அதிகாரத்தை   பயன்படுத்தி, குற்றவியல் நீதிபரிபாலனத்தை தாமதப்படுத்தவும், நீதி பிறழச் செய்யவும் பல்வேறு முயற்சிகள் எடுத்து, அந்த முயற்சிகளின் பலனாக இவ்வழக்கை 15 ஆண்டுகள் இழுத்தடித்திருக்கின்றனர்.
அப்படியே அவர் கூறுவது உண்மை இல்லை என்று எடுத்துக் கொண்டாலும் கூட, ஒரு குற்றவியல் வழக்கு முடிவதற்கு 15 ஆண்டுகள் ஆனது என்பது துரதிருஷ்டவசமானது. எந்த கோணத்தில் இந்த தாமதத்தைப் பார்த்தாலும், குற்றவியல் நீதிபரிபாலனமே, இதில் இழப்புக்குள்ளாகியிருக்கிறது.   இந்த நடைமுறையை முழுமையாக மாற்றவில்லை என்றாலும், இதை சரி செய்ய ஏதாவது செய்தே ஆக வேண்டும். அதற்கான நேரம் இப்போது தொடங்குகிறது.”  “இப்போது” NOW என்ற வார்த்தையை பெரிய எழுத்துக்களில் போட்டு நீதிபதி அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மதன் பி லோக்கூர்
நீதிபதி மதன் பி லோக்கூர்
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை என்ன செய்தது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.  27 செப்டம்பர் 2014 அன்று ஜெயலலிதாவுக்கு தண்டனை.   28 செப்டம்பர் 2014 அன்று, இந்த மேல் முறையீட்டில் பவானி சிங் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டுமென்று, லஞ்ச ஒழிப்புத் துறை அரசுக்கு கடிதம் எழுதுகிறது.  29 செப்டம்பர் 2014 அன்று தமிழக அரசு, பவானி சிங்கை, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் நியமிக்குமாறு ஆணை வெளியிடுகிறது.
தமிழக அரசின் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.  அவர்தான் தண்டிக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு பிறகு பன்னீர் செல்வம் என்ற அடிமை முதலமைச்சராகி உள்ளார்.   தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர் செல்வத்தின் கீழ்தான் இயங்குகிறது.   எங்கே கர்நாடக அரசு, அரசு வழக்கறிஞரை நியமித்து விடப்போகிறதோ என்ற அவசரத்தில், ஒரே நாளில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆணை வெளியிடுகிறதென்றாலே, இது குற்றவாளிக்கு ஆதரவான செயல் என்பது தெரிய வேண்டாமா ?      தூங்கி வழியும் லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வளவு வேகமாகவா வேலை செய்யும் ?
பணியில் இருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆன ஒரு ஐஜியை ஜெயலலிதா வழக்கில் அத்தனை தில்லு முல்லுகளையும் செய்வதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையில் நியமித்துள்ளனர்.  அவர் பெயர் ஏஎம்எஸ் குணசீலன்.     அந்த குணசீலனுக்கு ஒரே வேலை, ஜெயலலிதா வழக்கில் எப்படி குளறுபடி செய்வது, எவ்வளவு வேகமாக செய்வது என்பதுதான்.      அப்படித்தான் பவானி சிங்கை நியமித்த அரசாணை வேக வேகமாக வெளியிடப்பட்டது
ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி ஏஎம்எஸ் குணசீலன்
ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி ஏஎம்எஸ் குணசீலன்
ஜெயலலிதாவின் சார்பாக என்ன வாதிடப்பட்டது என்றால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 301 (1)ன் படி, ஒரு அரசு வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்திலும் சரி, அதன் பிறகு மேல் முறையீட்டிலும் சரி, தொடர்ந்து வாதிடலாம்.  அதற்கு தடையேதும் இல்லை.  அந்த அடிப்படையில்தான் பவானி சிங் மேல் முறையீட்டில் வாதிட்டார் என்று கூறினர்.   ஆனால் நீதிபதி மதன் லோக்கூர் என்ன கூறுகிறார் என்றால், 2003ல் இந்த வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, இவ்வழக்கில் அரசு சார்பாக வாதாட, ஒரு சிறப்பு அரசு வழக்கறிஞரை, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.     அந்த உத்தரவு விசாரணைக்கு மட்டும்தான், மேல் முறையீட்டுக்கு பொருந்தாது என்பது உண்மையே என்றாலும், பவானி சிங், “அரசு வழக்கறிஞராக” நியமிக்கப்படவில்லை, மாறாக  “சிறப்பு அரச வழக்கறிஞராக” (Special Public Prosecutor) நியமிக்கப்பட்டுள்ளார். ஆகையால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் “அரசு வழக்கறிஞர்” என்று குறிப்பிட்டு வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் பவானி சிங்குக்கு பொருந்தாது என்று கூறுகிறார் நீதிபதி லோக்கூர்.
மேலும் தனது தீர்ப்பில் லோக்கூர் இதை குறிப்பிடுகிறார்.    இந்த மேல் முறையீடு ஜாமீன் மனு விசாரணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன் வந்தபோது, பவானி சிங், தண்டனையை நிறுத்தி வைக்கவும், குற்றவாளிகளை ஜாமீனில் விடுவிக்கவும், தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  இதை நீதிபதி அப்படியே பதிவு செய்துள்ளார். இந்த நேர்வில் கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமித்திருந்தால், அவர் நிச்சயமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்.
மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 301 (1)ல் உள்ளபடி, ஒரு அரசு வழக்கறிஞர், மேல் முறையீட்டிலும், எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் ஆஜராகலாம் என்று குற்றவாளிகள் வாதிடுவது சரியாக இருந்தால், 29 செப்டம்பர் 2014 அன்று தமிழக அரசு அவசர அவசரமாக பவானி சிங்கை மேல் முறையீட்டுக்கு அரசு வழக்கறிஞராக நியமித்து உத்தரவிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.     பவானி சிங் ஆஜராவாதற்காக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு, விசாரணை நீதிமன்றத்தோடு முடிந்தது என்பதை தெரிந்தே தமிழக அரசு புது உத்தரவை பிறப்பித்துள்ளது.
இறுதியாக குற்றவாளிகளின் சார்பில், வழக்கு விசாரணை முடிந்து விட்டது. சரியோ தவறோ (de facto) என்பதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை முடித்து வைக்குமாறு கோரினர்.   நான் இதில் மாறுபடுகிறேன். ஒரு அரசு வழக்கறிஞரோ, அல்லது தனியார் வழக்கறிஞரோ,  ஒரு வழக்கில் வாதிடுவதற்கு எவ்விதமான ஆவணமும் இல்லாமல் வாதிடுவார் என்பதை ஏற்றுக் கொண்டால், நீதி பரிபாலனமே குழப்பத்திற்குள்ளாகி விடும்.
மேற்கூறிய காரணங்களால், பவானி சிங் வாதிட்டு இது வரை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீடு முழுவதுமே செல்லாதது.  விதிகளின்படி, கர்நாடக அரசு, புதிய அரசு வழக்கறிஞரை நியமித்து, விசாரணை புதிதாக நடத்த வேண்டும் என்று நீதிபதி லோக்கூர் தீர்ப்பளித்தார்.
ஆனால் நீதிபதி பானுமதி இதிலிருந்து மாறுபட்ட கோணத்தில் இவ்வழக்கை அணுகுகிறார்.   24.12.2014 அன்றுதான் பேராசிரியர் அன்பழகன், கர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு மனு அனுப்புகிறார்.  அதுவும், இந்த வழக்கில் மேல் முறையீட்டை தினந்தோறும் நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்ட பிறகு அணுகுகிறார் என்கிறார் நீதிபதி பானுமதி.  ஆனால் நீதிபதி லோக்கூர் இது குறித்து கூறுகையில், மேல் முறையீடு விசாரணை 2 ஜனவரி 2015 அன்று தொடங்குவதற்கு முன்னதாகவே அன்பழகன் மனு செய்து விட்டார் என்கிறார்.
நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி
குற்றவியல் சட்டம் 301 (1)ன் படி, பவானி சிங் அரசு குற்றவியல் வழக்கறிஞர்தான்.  அவரை சிறப்பு குற்றவியல் வழக்கறிஞராக (Special Public Prosecutor) பார்க்கத் தேவையில்லை.   அந்த அடிப்படையில் பவானி சிங் இந்த வழக்கின் மேல் முறையீட்டில் ஆஜராகி வாதாடியது தவறல்ல.  மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை 29 செப்டம்பர் 2014 அன்று பவானி சிங்கை புதிதாக நியமித்து ஒரு ஆணை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை.   பவானி சிங்குக்கே உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் ஆஜராகி வாதிட உரிமை இருக்கிறது.    இந்த வழக்கில், அரசு வழக்கறிஞரை நியமித்திருக்க வேண்டிய கர்நாடக அரசு, தன் பொறுப்பை தட்டிக் கழித்துள்ளது.    மேல் முறையீட்டுக்கு புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமா வேண்டாமா என்று உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டிருக்க வேண்டிய கர்நாடக அரசு, அவ்வாறு கேட்காமல் பேராசரியர் அன்பழகனின் பின்னால் ஒளிந்து கொண்டு, அமைதியாக இருந்துள்ளது.
நீதிபதி லோக்கூர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, உச்சநீதிமன்றம் 2003ல் இவ்வழக்கை கர்நாடக நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டபோது, கர்நாடக அரசை அரசு வழக்கறிஞரை நியமிக்கச் சொல்லி உத்தரவிட்டது.   அந்த உத்தரவு, விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டதோடு நிறைவுக்கு வந்து விட்டது.  உச்சநீதிமன்றம் மேல் முறையீடு குறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில், கர்நாடக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட எவ்வித முகாந்திரமும் இல்லை.  மாறாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைதான் கர்நாடக அரசை கலந்தாலோசித்து இருக்க வேண்டும்.  அல்லது உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.    இதை இரண்டையும் செய்யாமல், அவசர அவசரமாக ஒரே நாளில் பவானி சிங்கை, லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கறிஞராக நியமித்ததன் பின்னணி என்ன என்பது, ஜெயலலிதாவை “புரட்சித் தலைவி அம்மா” என்று அழைத்த நீதிபதி பானுமதிக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.   ஆனால், பவானி சிங் நியமனம், அவர் வாதாடியது இரண்டுமே செல்லும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி பானுமதி.
இதையடுத்தே, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.    நீதிபதி மதன் லோக்கூர் இந்த மேல் முறையீட்டை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடப் போகிறார் என்பதை, தலைமை நீதிபதி தத்து முன்கூட்டியே அறிந்திருக்கக் கூடும்.    அப்படி ஒரு வேளை அவரது தீர்ப்பை, மூன்று நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொண்டால், குமாரசாமிக்கு பதிலாக, ஜெயலலிதாவுககு சாதகமான ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற காரணத்துக்காவே அவசர அவசரமாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை ஒதிஷா நீதிமன்றத்துக்கு மாற்றினார் தத்து.
எத்தனை கோணம், எத்தனை பார்வை என்பதற்கு ஏற்ப,  தத்து ஒரு கோணத்தில் பார்த்தால் அத்தனை நீதிபதிகளும் அதே கோணத்தில் பார்க்க வேண்டுமா என்ன ?
justice-H.L-Dattu-new-chief-justice-of-India
பவானி சிங் வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்லா பந்த் ஆகியோர் முன்னிலையில் ஏப்ரல் 21 அன்று விசாரணைக்கு வந்தது.    ஏப்ரல் 22ம் தேதியன்று மொத்த விசாரணையையும் முடித்த நீதிபதிகள் தீர்ப்பு தேதியை 27 அன்று ஒத்தி வைத்தனர்.  ஒத்தி வைக்கையில், 23 ஏப்ரல் 2015 தேதிக்குள், அன்பழகன் தரப்பு மற்றும் கர்நாடக அரசுத் தரப்பு, ஏழு பக்கங்களுக்கு மிகாமல், எழுத்து பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் இது குறித்து தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவோடு சேர்த்து, வாய்மொழியாக நீதிபதிகள் சொன்னதுதான் முக்கியமானது.   இந்த வழக்க கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழக அரசுக்கு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க எவ்விதமான அதிகாரமும் இல்லை.  அதே நேரத்தில், இந்த காரணத்தால், இந்த மேல் முறையீட்டை புதிததாக நடத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை.  அன்பழகன் தரப்பு, தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், திங்கட்கிழமைக்குள் சமர்ப்பிக்கலாம்.    கர்நாடக நீதிபதி (குமாரசாமி).  அன்பழகன் தாக்கல் செய்யும் அந்த மனுக்களை நீதிபதி குமாரசாமி, மிகுந்த கவனத்தோடு பரிசீலிக்க வேண்டும் என்றும்  கூறினர்.
இதன் மூலமாக இந்த வழக்கில் மேல் முறையீடு மீண்டும் நடைபெற வாய்ப்பு இல்லை.    தலைமை நீதிபதி தத்து நினைத்தது போல, புதிதாக விசாரணை நடத்தி, அதற்கு குமாரசாமிக்கு பதில் புதிய நீதிபதியை நியமிக்கலாம் என்ற திட்டமும் தவிடுபொடியாகி விட்டது.
நீதிபதி தீபக் மிஸ்ரா
நீதிபதி தீபக் மிஸ்ரா
இந்த உத்தரவின் சாராம்சம் என்னவென்றால், பவானி சிங் வாதாடியிருக்க வேண்டிய விஷயங்களை, அன்பழகன் தரப்பு எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கும்.   அந்த வாதங்களை அரசுத் தரப்பு வாதங்களுக்கு நிகராக பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.    திமுக தரப்பு இவ்வழக்கில் எப்படிப்பட்ட எழுத்துபூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   பவானி சிங் ஒழுங்காக வாதாடியிருந்தால் கூட அவ்வளவு சிறப்பாக வழக்கை எடுத்துரைக்க முடியாத அளவுக்கு திமுக தரப்பின் எழுத்துபூர்வமான வாதங்கள் அமையும்.
இந்த நிலையில்தான் நீதிபதி குமாரசாமி, இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கப்போகிறார்.
கடந்த சனிக்கிழமையோடு ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டன.    எப்படிப்பட்ட ஒரு கடுமையான மன அழுத்தத்தில் இருந்தால், ஜெயலலிதா தன்னை இப்படி ஒரு வீட்டுச்சிறையில் தானே அடைத்துக் கொண்டு ஆறு மாதம் இருப்பார் என்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்.
jaya-3_0_0
ஜெயலலிதா, தான் இன்னமும் விடுதலையாகி விடுவோம் என்றே உறுதியாக நம்புகிறார்.   அப்படித்தான் செப்டம்பர் 27க்கு முன்னதாகவும் நம்பினார்.   அவரை சுற்றியுள்ள கழுகுக் கூட்டங்கள் அப்படித்தான் அவரை நம்ப வைத்து வருகின்றன.
நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு இருப்பதைப் போல, போயஸ் தோட்டத்துக்குள் அவரது அறையில் அமர்ந்து கொண்டு, அவர் நினைப்பதுதான் உலகம் என்றும், மீண்டும் முதல்வராகப் போகிறோம் என்றும் தன்னிடம் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தால், எதையும் யாரையும் விலைக்கு வாங்கி விடலாம் என்றும் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு வள்ளுவரே பதில் கூறியிருக்கிறார்.
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
கலைஞர் உரை:
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
மு.வ உரை:
எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.  savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக