புதன், 8 ஏப்ரல், 2015

தெலுங்கு சினிமா வில்லன்களை மிஞ்சிய ஆந்திர போலீஸ் கடத்தல் மாபியாக்களிடம் பணம்.....

தெலுங்கு சினிமா படங்களில் எப்போதுமே... ரத்த வாடை அதிகமாகவே இருக்கும் மசாலா சினிமாக்களில் ரத்தமும், சதையும் கலந்திருக்கும். தோள்களில் துப்பாக்கியை தூக்கி போட்டபடி... நர நரவென பல்லைக் கடித்துக் கொண்டே காட்சி அளிப்பார் வில்லன். ஈவு இரக்கமற்ற மனிதர்களைப் போல மிகவும் கொடூரமாக காட்டப்படும் இந்த வில்லன்கள், சின்ன சின்ன விவகாரங்களுக்கு கூட டுமீல்... டுமீல்... என சுடத் தொடங்கி விடுவார்கள். பெரும்பாலான படங்களில் அடிமைகளாக இருக்கும் ஏழை தொழிலாளிகள் வில்லன் நடிகரின் துப்பாக்கி குண்டுக்கு இரையாவதை பார்த்திருப்போம்.
திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளிகள் 20 பேர் ரத்தம் சொட்ட... சொட்ட... சுட்டு வீழ்த்தப்பட்டிருந்த காட்சிகள் தெலுங்கு சினிமாக் காட்சிகளையும் மிஞ்சும் வகையில் நெஞ்சை உறைய வைப்பதாக அமைந்துள்ளது.

கடத்தல்காரர்கள், துப்பாக்கி மற்றும் ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், எனவே வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ஆந்திர மாநில வனத்துறையினர் கூறியுள்ளனர்.
இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. கடத்தல்காரர்கள் என்று கருதினால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதில் தவறு இல்லை. ஆனால் காக்கா... குருவிகளை சுட்டுத்தள்ளியது போல 20 பேரை ஒரே நேரத்தில் ஆந்திர போலீசார் போட்டுத் தள்ளி இருப்பதுதான் ஒட்டு மொத்த தமிழர்களின் இதயங்களையும் ஈட்டியாகத் துளைத்தெடுத்துள்ளது.
எப்போதுமே ஏழைத் தொழிலாளிகளின் உயிர் துச்சமாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் நடந்திருக்கும் பல்வேறு நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக அடுக்கலாம். அந்த வகையில் கடத்தல் மாபியாக்களின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழக கூலித் தொழிலாளிகள் ஆந்திர மாநில செம்மரக் காடுகளுக்கு உரமாவது தொடர்கதையாகி வருகிறது.
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் இருந்த போது, தமிழக கர்நாடக வனப்பகுதிகளில் இருந்த பரபரப்பை விட பல மடங்கு படபடப்பும், பரபரப்பும் பற்றிக் கொண்டிருக்கிறது ஆந்திர மாநில வனப்பகுதிகளில். செம்மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை சேர்ந்தவர்களும் விருட்சமாக வளர்ந்திருப்பதே இதற்கு காரணமாகும்.
தமிழக–கர்நாடக வனத்துறையினருக்கு வீரப்பன் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்தானோ... அதே போல ஆந்திர மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் ஏராளமான குட்டி வீரப்பன்கள் வெள்ளை வேட்டி சட்டையுடன் தோரணையாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் லட்சமாக மதிக்கப்படும் செம்மரக்கட்டைகள் கடல் கடந்து அயல் நாடுகளுக்கு சென்றதும் கோடிகளாக மாறுவதுதான் செம்மரக்கடத்தல் தொழிலை நங்கூரமாக்கி இருக்கிறது. இதனால் சென்னையில் சத்தமில்லாமல் பலர், பசுத்தோல் போர்த்திய புலியாக செம்மரக்கடத்தல் தொழிலில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சென்னை மற்றும் செங்குன்றம் மாதவரம் பால் பண்ணை இதனை சுற்றியுள்ள பகுதிகள் செம்மரக்கடத்தலின் இறுதி மையமாகவே மாறிப் போயுள்ளன.
இப்படி... உயிரை கொடுத்து கடத்தல் தொழிலில் ஈடுபடும் அளவுக்கு ஏழைத் தொழிலாளிகள் செம்மரக்கடத்தலில் ஈடுபடுத்தப்படுவது எப்படி? ஆந்திர வனப்பகுதியில் இருந்து கடத்தி செல்லப்படும் செம்மரக்கட்டைகள் கடல் கடந்து வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது எப்படி?
கடத்தல் பின்னணியில் இருக்கும் ‘‘செம்மர மாபியாக்கள்’’ யார்–யார்? என்பது போன்ற கேள்விகளும் அடுக்கடுக்காக எழுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஆந்திர மாநில செம்மரக்காடுகள் திகில் கிளப்பும் செந்நீர் (ரத்தம்) காடுகளாக மாறிப் போயிருப்பது திடுக்கிட வைக்கிறது. செம்மர கடத்தல் களத்தில் ஆந்திர மாநில போலீசாரின் அத்து மீறல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
இது தொடர்பாக இதற்கு முன்னர் அவ்வப்போது ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் போதே, தமிழக–ஆந்திர மாநிலங்களின் அரசு அதிகாரிகள் கலந்து ஆலோசிக்காமல் கண்னை மூடிக்கொண்டு இருந்ததுமே 20 தமிழர்களின் உயிர் பலிக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. திருப்பதி சேசாசலம் வனப் பகுதியில் தொடங்கி வெளிநாடுகளுக்கு பத்திரமாக கப்பலில் அனுப்பி வைக்கப்படுவது வரை செம்மரக்கடத்தல் சம்பவங்கள் அரங்கேறுவது எப்படி? என்பதை பார்ப்போம்.
இந்திய வனப்பகுதிகளில் எங்கும் இல்லாத தனிச்சிறப்பு திருப்பதி மலைப் பகுதியையொட்டி பரந்து கிடக்கும் சேசாசலம் வனப்பகுதிக்கு உள்ளது. விலை மதிப்பில்லாத அரிய பொக்கிஷமாக பார்க்கப்படும் செம்மரங்கள் இங்கு போல வேறு எங்கும் துளிர்த்து வளர்வதில்லை.
செழிப்பான இந்த வனப்பிரதேசத்தில் ஆந்திர மாநில வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் செம்மரங்கள் தொடர்ச்சியாக வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. இது இன்று... நேற்றல்ல, நீண்ட நாட்களாகவே நடைபெற்று வருகிறது. 87 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் செம்மரங்களை பாதுகாக்க ஆந்திர மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளன.
ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அம்மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற பிறகு செம்மரக் கடத்தலை தடுக்க புதிய வியூகம் வகுக்கப்பட்டது. செம்மரக் கடத்தல்காரர்களால் ஆந்திர வனத்துறையினர் 2பேர் கொல்லப்பட்ட பின்னர், அடுத்தடுத்து தமிழக கூலி தொழிலாளிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில்தான் ஆந்திர மாநில போலீசார் அதிரடியாக அரசிடமிருந்து புதிய உத்தரவை ஒன்றை பெற்றனர்.
செம்மரக்கடத்தலில் ஈடுபடுவோர்களை சுட்டுக் கொல்லலாம். அச்செயலில் ஈடுபடும் போலீசார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என்பதுதான் அதுவாகும். இதன் எதிரொலியாகத்தான் 20 உயிர்கள் ஒரே நேரத்தில் பறிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிகளையொட்டி வசிக்கும் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தியே செம்மரக் கடத்தல் கும்பல் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை ஜவ்வாது மலை பகுதியில் இருந்து ஏழை கூலி தொழிலாளிகள் கூட்டம் கூட்டமாக மரம் வெட்டும் வேலைக்கு என்று கூறிவிட்டு புறப்பட்டு செல்வார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் வெட்டப்போவது எந்த மரத்தை? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதெல்லாம் தெரியாது. இவர்களை மரம் வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் சம்பளத்தை மட்டுமே பேசி அழைத்துச் செல்வார்கள்.
ஆந்திர வனப்பகுதிக்கு சென்ற பின்னர்தான் பலருக்கு செம்மரத்தை வெட்ட வந்திருக்கிறோம் என்பதே தெரியவரும். இதுபோன்ற நேரங்களில் பின்வாங்க நினைக்கும் கூலிகளின் கண்ணை, கை நிறைய கிடைக்கும் பணம் மறைத்து விடுகிறது. அந்த அளவுக்கு கடத்தல் மாபியாக்கள் கூலி தொழிலாளர்களுக்கு பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள்.
நன்றாக வேலை செய்யும் கூலி தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 8 ஆயிரம் வரை சம்பளம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒருவாரம் தங்கி இருந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் லட்சாதிபதியாகவே வீடு திரும்புகிறார்கள்.
வறுமை... வேலை வாய்ப்பு இல்லாத நிலை இவைகளை பயன்படுத்தி ஏழை கூலி தொழிலாளர்களை செம்மரக் கடத்தல்காரர்களாக மாற்றி வருகிறது கடத்தல் கும்பல்.
மற்ற போதைகளை எல்லை தூக்கிச் சாப்பிட்டு விடும் திறன் பண போதைக்கு உண்டு.
ருசி கண்ட பூனை சும்மா இருக்காது என்பார்களே... அதுபோல கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்ச்சியாக பணத்துக்கு ஆசைப்பட்டு அதில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் திருமண வயதில் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், தங்களது மகள்களுக்காகவே கடத்தல் காரர்களாக மாறும் அவலமும் நீடிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், கண்ணமங்கலம், ஜவ்வாதுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தான் ஏழைத் தொழிலாளிகளை செம்மரக் கடத்தல் கும்பல் அழைத்துச் செல்கிறது. ஜவ்வாதுமலை பகுதியில் 40–க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.
மரம் வெட்டுவதையே தொழிலாக கொண்ட இவர்களை குறி வைத்தே கடத்தல் கும்பல் தொடர்ந்து செம்மரக் கடத்தல் தொழிலில் கொழித்துக் கொண்டிருக்கிறது. செம்மரக் கடத்தலில் ஈடுபடும் தொழிலாளர்களை அடையாளம் கண்டு, கடத்தல் கும்பலிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும், தனியாக புரோக்கர்கள் உள்ளனர். இவர்களுக்கும் பல ஆயிரங்கள் கமிஷன் தொகையாக கொடுக்கப்படுகிறது.
செம்மரங்களை வெட்டுவதற்கு காட்டுக்குள் செல்பவர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை ஜாமீனில் எடுக்கும் பணியில் தொடங்கி வழக்கு செலவுகள் வரை அத்தனையும் கடத்தல் மாபியாக்களே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள். ‘‘உனக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பு’’ என்று கடத்தல் முதலாளிகள் அளிக்கும் உத்தரவாதமே ஏழை தொழிலாளிகளை இதில் அதிகம் ஈடுபடச்செய்கிறது.
செம்மரத்தை கடத்துவதற்காக காட்டுக்குள் செல்லும் கூலி தொழிலாளிகள் 4 அல்லது 5 பிரிவுகளாக பிரித்து அனுப்பப்படுகிறார்கள். செம்மரம் வெட்டுபவர், லாரி கிளீனர், டிரைவர் ஆகியோர் ஒவ்வொரு குழுவிலும் இருப்பார்கள். நடுக்காட்டில் இருந்து வனப்பகுதியையொட்டியுள்ள மெயின் ரோடு வரை அணிவகுத்து நிற்கும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், வனத்துறையினர் கொஞ்சம் அசந்த நிலையில் இருக்கும்போது கடத்தலை கச்சிதமாக முடித்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.
அதே நேரத்தில் செம்மரக்கடத்தலில் பெரிய ஜாம்பவான்களாக திகழும் கடத்தல் புள்ளிகள் பலர் வனத்துறையினரின் உதவியுடனேயே செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டும் வருகிறார்கள். இவர்களின் ஆட்கள் சிக்கினாலும் ‘‘பெரியதலை’’கள் மாட்டுவதே இல்லை. ஒன்றிரண்டு பேர்களை மட்டுமே சுட்டுக் கொன்று வந்த ஆந்திர வனத்துறையினரும் போலீசாரும் சேர்ந்து நேற்று ஒரே நாளில் 20 பேரை சரமாரியாக சுட்டுக் கொலை செய்திருக்கும் சம்பவத்தை பார்க்கும் போது, இது பல நாட்களாக நடத்தப்பட்டு வந்த திட்ட மிட்ட சதி என்பது உறுதியாகத் தெரிகிறது.
செம்மரக்கடத்தலை பொறுத்தவரையில், கூலித் தொழிலாளிகள்தான் வனத்துறையினர் விரிக்கும் வலையில் சிக்கி உயிரிழக்கின்றனர். இவர்களை முதலீடாக்கி பண முதலைகளாக திரிபவர்கள் வலையை அறுத்து எறிந்து விட்டு தப்பி விடுகிறார்கள் என்று சொல்வதைவிட தப்பிக்க வைக்கப்பட்டு விடுகிறார்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
ஆந்திர போலீசார் சிலரின் துணையோடு செம்மர கடத்தலின் ஆணி வேராக இருக்கும் கடத்தல் புள்ளிகளை வேரறுத்தால் மட்டுமே செம்மரக்கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இல்லையென்றால் இன்று 20 தமிழர்கள்? நாளை எத்தனை பேரோ?. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக