செவ்வாய், 28 ஏப்ரல், 2015

ஜெ. வழக்கில் மீண்டும் அரசு வக்கீலாக ஆச்சாரியா? விவரம் தெரிந்தவர் விலைக்கு படியாதவர்!

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பணியாற்றியவர் ஆச்சாரியா. ஆனால் அப்போதைய பாஜக அரசிடமிருந்தும், வேறு சிலரிடமிருந்தும் வந்த நெருக்குதல்களால் அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனது சுய சரிதை புத்தகத்திலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீடு செய்தபோது பவானிசிங்கை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை. தமிழக அரசே நியமித்துக் கொண்டது. எனவே, இந்த நியமனத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துவிட்டது. மேலும் கர்நாடக அரசு தனது வாதத்தை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 28ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
சட்ட அமைச்சருடன் சந்திப்பு இந்நிலையில், கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியாவை நியமிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, இதுகுறித்து இன்று காலை ஆச்சாரியாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது அரசு வக்கீலாக ஆச்சாரியா வாதிட சம்மதமா என்று ஜெயச்சந்திரா கேட்டதாக கூறப்படுகிறது. ஆச்சாரியா என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.
ஆச்சாரியாவுக்கு ஜெயலலிதா வழக்கு குறித்த முழு விவரமும் தெரியும் என்பதால், அவரே பொருத்தமானவர் என்று கர்நாடக அரசு கருதுகிறது. ஹைகோர்ட்டில், அப்பீல் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக செல்ல வேண்டியிருந்தால், அப்போதும் ஆச்சாரியாவை கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது
ஆச்சாரியா வந்தால் அவ்ளோதான்.. ஆச்சாரியா, வழக்கிற்குள் வந்தால், மிகவும் ஆக்ரோஷமாக வாதங்களை எடுத்து வைப்பார் என்பதால், வழக்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆச்சாரியா நியமன அறிவிக்கை இன்று பிற்பகலுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆச்சாரியா மீண்டும் களமிறங்க சம்மதிக்காவிட்டாலும், அவரிடம் ஆலோசனைகள் பெறப்படும் என்று தெரிகிறது.

Read more //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக