வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஏமனில் இருந்து மும்பை திரும்பிய தமிழர்கள் :இந்திய கடற்படை வீரர்கள் சரமாரியாக சுட்டனர்.

அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் உள்நாட்டுப்போர் வலுத்து வருகிறது. அங்கு வேலை நிமித்தமாக சென்றுள்ள சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் போர்ப்பிரதேசங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து அவர்களை பத்திரமாக மீட்டு வர மத்திய அரசு ‘ஆபரேஷன் ரஹத்’ என்ற பெயரில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அவர்களை மீட்பதற்காக முதல் கட்டமாக ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ என்ற போர்க்கப்பல், ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மூலம் 40 தமிழர்கள் உள்பட 358 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் (புதன்கிழமை) அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 168 பேர் அங்கிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘சி-17 குளோப் மாஸ்டர்’ போர் விமானம் மூலமாக கொச்சி அழைத்து வரப்பட்டனர்.


அந்த விமானம் நேற்று அதிகாலை 1.50 மணிக்கு கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு வந்து தரை இறங்கியது. ஜிபோட்டியில் புறப்பாடு தாமதம் ஆனதால் 5 மணி நேரம் கால தாமதமாக இந்த விமானம் கொச்சி வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 168 பேரில் 151 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். 17 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களை கேரள மந்திரிகள் கே.சி. ஜோசப், இப்ராகிம் குஞ்சு, கே.பாபு மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

வந்திறங்கியவர்களின் குடும்பத்தினரும் வந்திருந்து, தங்களது குடும்ப உறுப்பினர்கள், போர்ப்பிரதேசத்தில் இருந்து எந்த பாதிப்பும் இன்றி உயிரோடு திரும்பி வந்தது கண்டு ஆனந்தக் கண்ணீரோடு வரவேற்று நெகிழ்ந்தனர்.

ஜின்சி என்ற நர்சின் பெற்றோர், “எங்கள் மகள் ஜின்சி போர்ப்பிரதேசமான ஏமனில் இருந்து திரும்பி பத்திரமாக வந்து சேர்ந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். இன்னொரு மகள் டின்சி, சனாவில் இருக்கிறாள். அவளும் பத்திரமாக இங்கு வந்து சேர்ந்து விடுவாள் என்று நம்புகிறோம்” என கூறினர்.

மந்திரி கே.ஜி.ஜோசப் கூறும்போது, “ஏமனில் இருந்து வந்திறங்கியவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. அவர்களுக்கு உடனடி உதவியாக கைச்செலவுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குகிறோம்” என கூறினார்.

ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 8 மராட்டியர்கள், 10-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 190 பேரை கொண்ட மற்றொரு இந்திய குழுவினர், ‘சி-17 குளோப் மாஸ்டர்’ போர் விமானம் மூலமாக நேற்று அதிகாலை 3.25 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினர். அவர்களை மராட்டிய மாநில சுற்றுலாத்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கிரித் சோமையா எம்.பி., மற்றும் உயர் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். ஏமனில் இருந்து அவர்களை வெளியேற்றிக் கொண்டு வருவது என்பது இமாலய பணியாக அமைந்து விட்டதாக, ‘சி-17 குளோப் மாஸ்டர்’ விமானத்தின் துணை விமானியான விங் கமாண்டர் விக்ரம் அப்பி கூறினார்.

மீட்கப்பட்டு மும்பை வந்த தமிழர்களான சக்கரபாணி மற்றும் சக தமிழர்கள் நிருபர்களிடம் கூறுகையில், “தற்போது ஏமன் நாட்டில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. எப்போது எங்கு குண்டு வெடிக்கும் என்று தெரியாது. 10 நாட்களாக தூக்கம் இன்றி தவித்தோம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை” என கூறினர்.

மேலும், “மத்திய அரசு எங்களை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டது. பின்னர் இந்திய அதிகாரிகள் எங்களை துறைமுகத்திற்கு வர சொன்னார்கள். இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் பத்திரமாக மும்பை வந்தடைந்தோம். எங்களை பத்திரமாக மீட்டு வந்த இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எனினும் எங்களை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களால் துறைமுக பகுதிக்கு கூட வர முடியாது. ஏனெனில் அங்கு போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து உள்ளது. நாங்கள் இந்திய கப்பல் வந்து நின்ற இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தான் இருந்தோம். எனவே வந்துவிட்டோம். ஆனால் அங்கு இருந்து 200 கி.மீ. தாண்டியும் ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களையும் இந்திய அரசு மீட்டு வர வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

ஏமனில் உள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த சென்னையை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறுகையில், “நாங்கள் அனைவரும் இந்திய கப்பலில் ஏறி அமர்ந்து புறப்பட தயாராக இருந்தோம். அப்போது திடீரென போர் விமானம் ஒன்று எங்கள் கப்பலை வட்டமிட்டதால் கலக்கம் அடைந்தோம். இதனால் தாக்கப்பட்டு விடுவோம் என்று பயந்து விட்டோம். இருப்பினும் இந்திய கடற்படை வீரர்கள் அந்த விமானத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து எங்களை வட்டமிட்டு கொண்டு இருந்த போர் விமானம் அங்கு இருந்து சென்று விட்டது. அதன் பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டோம்” என்றார்.

திண்டுக்கல்லை சேர்ந்த முனியப்பன் கூறும் போது, “ஏமனில் யார் தீவிரவாதி, யார் ராணுவ வீரர், யார் பொதுமக்கள் என்றே தெரியாது. அங்கு வெறும் ரூ.4 ஆயிரத்திற்கு துப்பாக்கி விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்களும் ஆயுதம் ஏந்தி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

மேரி அம்மா வர்க்கீஸ் என்ற நர்ஸ், “நான் ஏடனில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தேன். ஒரு நாள் பலத்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. அதிலிருந்து நான் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டேன். கடைகள் அடைக்கப்பட்டு விட்டன. சாப்பிடுவதற்கு பல நாட்கள் சாப்பாடு கிடைக்கவில்லை” என்றார்.

பைஜூ என்ற நர்ஸ், “போரினால் சனா நகரம் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. இப்போது ஏடனில் சண்டை வலுத்து வருகிறது. சனாவில் நர்சாக பணியாற்றிய எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. உள்ளூர் நர்சுகள், ஆஸ்பத்திரியை விட்டு போய் விட்டதால், நாங்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஏடனில் மட்டும் சுமார் 300 இந்தியர்கள் தவிக்கின்றனர்” என்றார்.

மும்பை வந்தடைந்தவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ரெயில்கள் மூலம் கட்டணமின்றி செல்வதற்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்து கொடுத்தது. கேரளா செல்லும் மங்களா எக்ஸ்பிரஸ், சென்னை வரும் சென்னை மெயில், கொல்கத்தா செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரெயில்கள் மூலம் பயணம் ஆயினர்.

மும்பை வந்த தமிழர்கள், அங்குள்ள சி.எஸ்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.10 மணிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், மதியம் 2 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் தமிழகம் புறப்பட்டனர். முன்னதாக மும்பையில் அவர்களுக்கு மாநில அரசு சார்பில் கைச்செலவுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. உணவுப்பொட்டலங்களும் வினியோகிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் மராட்டிய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக