புதன், 15 ஏப்ரல், 2015

ஆந்திர போலீசை துண்டு துண்டா வெட்டணும் – நேரடி ரிப்போர்ட்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழனி, மூர்த்தி, முருகன், பெருமாள், முனுசாமி, சசிகுமார், மகேந்திரன், வெள்ளிமுத்து, கோவிந்தசாமி, ராஜேந்திரன், சின்னசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் குடும்பங்களை சந்திப்பதற்காக அவர்களின் கிராமங்களுக்கு சென்றோம்.
கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளில் முதல் 7 பேர் கண்ணமங்கலம் எனும் சிறு நகரத்திற்கு அருகில் உள்ள காளசமுத்திரம், முருகபாடி, புதூர் காந்தி நகர், படவேடு ஆகிய நான்கு கிராமங்களை சேர்ந்தவர்கள். அடுத்த 5 பேர் ஜவ்வாது மலையில் இருக்கும் மேல்குப்சானூர் என்கிற மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். கண்ணமங்கலத்திலிருந்து இக்கிராமம் 35 கிலோ மீட்டர் தொலைவில் ஜவ்வாது மலையின் உச்சியில் இருக்கிறது.
இக்கிராமங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் கண்ணமங்கலத்திலிருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் தான் அருகில் இருக்கும் பெரிய நகரம். முதல் நான்கு கிராமங்களிலும் மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இதர தமிழக கிராமங்கள் போல விவசாயம் வறண்டு போயிருக்கிறது. எனவே, ஊருக்கு பாதி பேர் சென்னை, பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். இதில் சமவெளி பகுதி மக்களில் பெரும்பான்மையினர் வன்னியர்கள்.

பழனி, காளசமுத்திரம்.
பழனிக்கு வயது 35. பி.எட் பட்டதாரி, தற்காலிகமாக ஒரு தனியார் பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார். திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. நாற்பது நாளில் ஒரு கைக்குழந்தை இருக்கிறது.
வீட்டில் பழனியின் துணைவியார் இல்லை. அன்று அப்பகுதிக்கு அன்புமணி ராமதாஸ் வந்ததால் இறந்தவர்களின் மனைவிமார்களும், தாய் தந்தையும் அங்கே சென்றுவிட்டிருந்தனர். வீட்டில் பழனியின் தம்பி மனைவியும், அத்தையும் இருந்தனர். அவர்களிடம் பேசினோம். பெரும்பாலான கேள்விகளுக்கு பழனியின் தம்பி மனைவியே பதிலளித்தார்.
pazani-house
“வெட்டி வெட்டி துண்டு துண்டா மூஞ்ச கூட பாக்க முடியாத மாரி அநியாயமா கொல பண்ணிட்டீங்க”
“நூல் வாங்க கண்ணமங்கலத்துக்கு போறதா சொல்லிட்டு போனவரு அன்னைக்கு வரல. அடுத்த நாள் காலயிலயும் வரல. அப்புறம் செவ்வாக்கிழமை நைட்டு போலீசுக்காரங்க வந்து போட்டோவ காட்டி இதுபோலன்னு சொன்னாங்க, அதுல மூஞ்சி கூட சரியாத் தெரியல, போட்ருந்த துணிய வச்சு எங்க மாமியார் தான் அது என் புள்ளைன்னு அடையாளம் காட்னாங்க. பொழைக்கிறதுக்கு அவர் டெய்லர் கடை வச்சிருந்தாரு.
கொஞ்ச நாள் டீச்சர் வேலைக்கும் போய்க்கிட்ருந்தாரு, சம்பளம் பத்தலைன்னு முழுசா டெய்லர் வேலையே செய்ய ஆரம்பிச்சுட்டாரு. கண்ணமங்கலம், வேலூரு தாண்டி வேற எங்கையும் போக மாட்டாரு. அதுவும் கொழந்த பொறந்ததிலிருந்து எங்கையும் போறதில்ல.
வெட்டி வெட்டி துண்டு துண்டா மூஞ்ச கூட பாக்க முடியாத மாரி அநியாயமா கொல பண்ணிட்டீங்க. இன்னைக்கு புருசனை இழந்து நிக்கும் அந்த பொண்ணுக்கும் அதோட குழந்தைக்கும் இந்த அரசாங்கம் தான் பதில் சொல்லணும்.”
மூர்த்தி, முருகப்பாடி.
வீட்டில் துணைவியார் இல்லை, மாமியார் இருந்தார். மூர்த்திக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது, எட்டு மாத கைக்குழந்தை இருக்கிறது.
moorthy-murugapadi
“குத்தி, சுட்டு கொன்னுப்புட்டு அப்புறம் போட்டோவ வந்து காட்டுறீங்களே அய்யா, இது நியாயமா !” – கொல்லப்பட்ட தொழிலாளி மூர்த்தியின் மாமியார்.
“கூலி வேலைக்கு போறேன் மறுநா வந்துடுறேன்னுதாம்பா சொல்லின்னு போனான். அவன் வேலைக்கு போயி அவன் குடும்பத்த மட்டுமில்ல, எங்க குடும்பத்தையும் காப்பாத்தினு இருந்தான்.
கல்யாண சப்ளையர் வேலைக்கு அப்பப்ப போவான், புரோக்கருங்க எல்லாத்தையும் ஒரு எடத்துக்கு அழைச்சினு வந்து அங்கிருந்து ஒவ்வொரு மண்டபத்துக்கா பிரிச்சி அனுப்புவாங்க.
மரம் வெட்டவும் போகல எதுக்கும் போகலப்பா, அந்த மாதிரி வேலை எல்லாம் அவனுக்கு தெரியாது. ஊருக்குள்ள வேணுமின்னா நீயே விஜாரிச்சி பாத்துக்க. கட்டட வேலைக்கு போவான், சப்ளையர் வேலைக்கு போவான் அவ்வளவு தான்.
மரம் வெட்ட போனான்னு சொன்னா இந்த போலீசு புடிச்ச எடத்துலயே எங்களுக்கு தகவல் சொல்ல வேண்டியது தானே, ஏன் சொல்லல ? குத்தி, சுட்டு கொன்னுப்புட்டு அப்புறம் போட்டோவ வந்து காட்டுறீங்களே அய்யா, இது நியாயமா !
எனக்கு பசங்க இல்லப்பா, ரெண்டும் பொம்பள புள்ளைங்க, வீட்டுக்காரர் இல்ல. சொந்தம்னு சொல்லிக்கவும் யாரும் இல்ல.
வேல செய்ய மாமனார் மாமியாருக்கு தெறம் இல்ல, அம்மாவுக்கும் தெறம் இல்லையேன்னு பூவை இழந்து, பொட்ட இழந்து, சாப்புடாம கொள்ளாம இருக்க எம் பொண்ணு சொல்லிச் சொல்லி அழுவுது. எங்களுக்கு கேக்கிறதுக்குன்னு யாரும் இல்ல, இனி நான் வேலைக்கு போய் ஒழைச்சா தான் சோறு. எங்களுக்கு வேற கல்லு, மாத்துக்கல்லு மறுகல்லா இருக்குது. எம்புள்ளைக்கு 18 வயசுதாம்பா ஆவுது. இந்த வயசுலயே ஆம்பளைய எழந்து கைக்கொழந்தையோட நிக்கிது.
முதியோர் பணத்தை வச்சு நான் ஏதோ காலம் ஓட்டிகினு இருந்தேன் இனி என்ன செய்யப் போறமோ?”
முனுசாமி, முருகபாடி.
வீட்டில் முனுசாமியின் துனைவியார் இல்லை. அக்கா சுலோச்சனா இருந்தார். முனுசாமிக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பையனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன.
sulochana
கொல்லப்பட்ட தொழலாளி முனுசாமியின் அக்கா சுலோச்சனா கதறி அழுகிறார்.
“திங்ககிழமை ரேசன் கடைக்கு போயி அரிசி எல்லாம் வாங்கி வச்சிட்டு வேலைக்கு போறேன்னு சொல்லின்னு தாம்பா போயிருக்கான். சப்ளையர் வேல, மேஸ்திரி வேலைக்கு தான் போவான். மரம் வெட்ற வேலைக்கெல்லாம் போனதில்ல. அந்த வேல இல்லாத நாள்ல விவசாய வேலய பாத்துக்குவான்
மரம் வெட்னதாவே கூட இருக்கட்டும், நீ டவுட்டு பட்டு தானே இட்னு போன ? இட்னு போயி அரெஸ்ட் பண்ணி டேசன்ல வைக்க வேண்டியது தானே, 10 வருசம் கூட தண்டனை கொடு. அப்படி பண்ணாம ஏன் கொலபாதகம் பண்றீங்க ?
எங்களுக்கு வந்த கெதி உங்களுக்கு வராதா, ஏன்டா இப்படி பண்றீங்க ? மரம் வெட்ட போனாங்க புடிச்சோம்னு சொல்றீங்களே, திங்க கிழம ராவு போனா கூட நைட்டுக்குள்ள எத்தன கட்டைய வெட்டிருக்க முடியும், நீயே சொல்லுப்பா ?
இவனுங்களுக்கு ஏத்த தண்டனையை வாங்கி குடுங்க, தூக்கு ஆர்டர் போடுங்க. அப்ப தான் எங்க மனசு திருப்தியா இருக்கும். எவ்வளவு பணம் காசு கொடுத்தாலும் என் தம்பிக்கு ஈடாகாது. இன்னைக்கு அவன் பொண்டாட்டி மொட்டையா நிக்கிது. யாரு இனி புள்ளை குட்டிங்களை காப்பாத்துறது ?
பாடிய வீட்ல கொண்டு வந்து வச்சிருக்கோம் கொழந்தைங்க கேக்குது, யாரும்மா இது எதுக்காக இவ்வளவு பேரு நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க ? அப்பா எப்பம்மா வருவாரு, எங்களுக்கு அப்பா வேனும்னு கேக்குது. நாங்க என்ன பதில் சொல்றது ? அப்பாவ வேணும்னு கேக்குற குழந்தைகளுக்கு எங்க போய்ப்பா நாங்க அப்பாவ வாங்கித்தர்றது?” (கண்ணீர் விட்டு கதறுகிறார்.)
மகேந்திரன், புதூர் காந்தி நகர்.
வீட்டில் மகேந்திரனின் அம்மா இல்லை. தாத்தா பாட்டி இருந்தனர். மகேந்திரன் 22 வயது இளைஞர். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போலீசு வேலைக்கு முயற்சி செய்தவர்.
mahendran-grand-parents
“என் கொயந்தைய இப்படி பண்ணவனுங்களை துண்டு துண்டா வெட்டி எடுக்கனும், கை கால வாங்கனும். இல்லன்னா தூக்கு தண்டனை கொடுக்கனும்”- கொல்லப்பட்ட தொழிலாளி மகேந்திரனின் தாத்தா, பாட்டி
“கம்பி கட்ற வேலைக்கு போவான், சப்ளையர் வேலைக்கு போவான். யாரும் கூட்னு போமாட்டாங்கப்பா அவனே பூடுவான். சனிக்கெழம வருவான், ஞாயத்துகெழம இருப்பான், திங்க கெழ கெளம்பி பூடுவான். பத்து நாளு, ஒரு வாரம்னு போய் வருவான். வந்தா ஐயாயிரம் ஆராயிரம்னு எடுத்துனு வருவான்.
mahendran-homageஅவன் மரம் வெட்ற வேலைக்கே போகல சாமி, அதெல்லாம் அவனுக்குத் தெரியாது. எவனோ இப்டி கூட்னு போய் கொன்னுட்டானுங்க. கட்ட வெட்ட போனா போன எடத்துலயே இல்ல புடிக்கணும், அப்புடியா பண்ணாங்க, பஸ்ல போனவங்கள புட்சி இய்த்தாந்து கொன்ருக்கானுங்க. என் கொயந்தைய இப்படி பண்ணவனுங்களை துண்டு துண்டா வெட்டி எடுக்கனும், கை கால வாங்கனும். இல்லன்னா தூக்கு தண்டனை கொடுக்கனும்”.
இறந்தவர்களின் குடும்பத்தினர் பா.ம.க அன்புமணியை சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அங்கே இருந்த மகேந்திரனின் அம்மாவிடம் பேசினோம். அழுது அழுது தொண்டை கட்டி போயிருந்தது அவருக்கு.
mahendran-amma
“எப்புடி செதைச்சி வச்சிருக்கானுங்க எம்புள்ளைய” – மகேந்திரனின் அம்மா.
“மெட்ராசுக்கு பிளம்பர் வேலைக்கு போறதா சொல்லிட்டுதாம்பா போனான். அறியாத பசங்கள எதுக்கு புட்ச்சின்னு போனானுங்கன்னு தெர்ல. புட்சின்னு போய் இப்படி கொலைபாதகம் பண்ணி வச்சிருக்கானுங்கோ.
அன்னிக்கு என்ன நடந்துச்சோ ஏது நடந்துச்சோ, எவன் கூட்னு போனானோ தெர்லப்பா. இவனுக்கு பிளம்பர் வேலைதாம்பா தெரியும், அதுக்காக தான் மெட்ராசு, பாண்டிச்சேரின்னு போவான். மரம் வெட்ற வேலைக்கெல்லாம் அவன் போனதில்ல.
mahendran-house
மகேந்திரனின் சிதிலமடைந்த வீடு.
எனக்கு மூணு பசங்க, இவன் ரெண்டாவது பையன். எம் புள்ளைய நெனச்சி நெனச்சி எனக்கு வேதனையா இருக்குப்பா, எப்புடி செதைச்சி வச்சிருக்கானுங்க எம்புள்ளைய. படத்த பாக்க முடியலப்பா எனக்கு, என் பையன கொடூரமா வெட்டி வச்சிருக்கானுங்க. என் பையன் எப்படி செத்தானோ அது போல அதை பண்ணவனுங்களும் துடிதுடிச்சு சாகணும்”.
சசிக்குமார், படவேடு.
சசிக்குமாருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு நான்கு வயது, இன்னொரு குழந்தைக்கு இரண்டு வயது. அவருடைய மனைவி முனியம்மா பேசினார்.
“எனக்கு கல்யாணம் ஆனாதுலயிருந்து அவர் கூலி வேலைக்கு தான் சார் போறாரு. அன்னிக்கு திருத்தணிக்கு பெயிண்ட் வேலைக்கு போறதா சொல்லிட்டு தான் போனாரு. போய் ஒரு நாளாச்சுங்கிறதால புள்ளைங்க அப்பாகிட்ட பேசணும்னு சொன்னிச்சுங்கோ, அதனால போன் பண்ணேன். ரிங்கு போனதேங்காட்டி யாரும் எடுக்கல, அப்புறம் போலீசுக்காரங்க வந்த பிறகு தான் இந்த மாதிரி நடந்துச்சுன்னு தெரியும்.
sasikumar-manaivi
“அவரை மூஞ்சில எல்லாம் சுட்ருக்காங்க, கத்திய வச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. இனி நான் மட்டும் இருந்து என்னா பண்ணப் போறேன்” – கொல்லப்பட்ட தொழிலாளி சசிகுமாரின் மனைவி முனியம்மா.
மரம் வெட்டப் போனதா சொல்றது பொய், அந்த வேலைக்கெல்லாம் அவர் போனதில்லை, அந்த வேலையே அவருக்குத் தெரியாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தா அவரோட செல்போன்ல யாரோட நெம்பர் இருக்குன்னு பார்க்கச் சொல்லுங்க. பெயிண்டிங் வேலை செய்றவங்க நெம்பர் தான் இருக்கும். அவரை மூஞ்சில எல்லாம் சுட்ருக்காங்க, கத்திய வச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. இனி நான் மட்டும் இருந்து என்னா பண்ணப் போறேன். எங்களுக்குக் கஞ்சி ஊத்தி காப்பாத்துன ஆம்படையானே போய்ட்டாங்க.
பெருமாள், படவேடு.
பெருமாளுக்கு மூன்று குழந்தைகள். 12, 14 வயதில் இரு பெண் குழந்தைகளும், 9 வயதில் ஒரு பையனும் உள்ளனர். அவருடைய மனைவி செல்வி பேசும் போது..
perumal-manaivi
“என் குழந்தைங்க அப்பா எங்கே, அப்பா எங்கேன்னு ? ராத்திரிலே அழுவுதுங்க நான் என்ன பதில் சொல்றது சார் ?” – கொல்லப்பட்ட தொழிலாளி பெருமாளின் மனைவி செல்வி மற்றும் குழந்தைகள்
“கேரளாவுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு. கலவை கலக்குறது, மேஸ்திரி வேலை, கல்யாணத்துல சப்ளையர் வேலைக்குன்னு எல்லா வேலைக்கும் போவாரு.
எனக்கு ஒண்ணுமே புர்ல, பஸ்ல போம்போதே புட்சினு போய் இப்படில்லாம் பண்ணிருக்காங்க அதுக்கு என்ன காரணம்னு தெர்ல, எம் பொண்ணு ஒரு நாளைக்கு எவ்வளவு கூலினு கேட்டதுக்குக் கூட, 400 ரூபான்னு சொல்லிட்டுதான் போயிருக்காரு.
இப்படி ஆனப்புறம் தான் இவங்க இவங்கல்லாம் போய்ருக்காங்கன்னே எங்களுக்கு தெர்து. இவங்கள மட்டும் தனிய ஏன் இய்த்துனு போகணும் ? அதுக்கு முன்னடி பின்னாடி வர்ற பஸ்ச சேத்து மடக்க வேண்டியது தானே ? புடிச்சப்புறம் ஒனக்கு யார் இருக்காங்க, எந்த ஊர்னு எல்லாத்தையும் கேட்டு எங்களுக்கு தகவல் சொல்லியிருக்கலாம் இல்ல, அப்படி பண்ணாம எல்லாத்தையும் பிளான் பன்னி புட்சினு போய் சுட்டு கொன்னிருக்காங்க.
என் குழந்தைங்க அப்பா எங்கே, அப்பா எங்கேன்னு ? ராத்திரிலே அழுவுதுங்க நான் என்ன பதில் சொல்றது சார் ? எதிர்காலமே கேள்விக்குறியா இருக்கு, கொஞ்சம் நெலம் இருக்கு. ஆனா தண்ணி இல்ல, எங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க இருக்கு. அர்சாங்கம் தான் எங்களுக்கு உதவி பன்னனும். எங்க வீட்டுக்காரங்கள கொன்னவனுங்கள வேலையிலிருந்து டிஸ்மிஸ் பண்ணணும், எங்க குடும்பம் இன்னிக்கு அநாதையா நிக்கிற மாதிரி அவங்களும் அநாதையா நிக்கணும். நாங்க எப்படி இந்த செய்தியை எல்லாம் பாத்து துடிக்கிறமோ அந்த மாதிரி அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் துடிக்கணும்.”
முருகன், படவேடு.
முருகனுக்கு ஹேமலதா (18) குமுதா (13) என்கிற இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. அவருடைய மனைவி தஞ்சையம்மாள் கூறும் போது…
murugan-manaivi-padavedu
“மரம் வெட்டி சம்பாதிக்கிறதா இருந்தா நாங்க ஏன் ஊரான் வீட்ல குடியிருக்க போறோம்.” – கொலைசெய்யப்பட்ட தொழிலாளி முருகனின் மகள்கள் குமுதா, ஹேமலதா மற்றும் மனைவி தஞ்சையம்மாள்
“பெயிண்ட் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு, போனா எப்பவுமே ரெண்டு நாள் மூனு நாளைக்கு தங்கி வேலையை முடிச்சிட்டு தான் வருவாரு. இந்த தடவயும் அப்படி தான் ரெண்டு மூனு நாளாகும்னு சொல்லிட்டு போனாரு.
நாங்க ஊரான் வீட்ல வாடகைக்கு குடியிருக்கோம், அன்னாடம் சம்பாதிச்சாதான் சோறு. மரம் வெட்டி சம்பாதிக்கிறதா இருந்தா நாங்க ஏன் ஊரான் வீட்ல குடியிருக்க போறோம். எங்க புள்ளைங்க கவர்மெண்டு ஸ்கூல்ல தான் படிகுது. அப்படி சம்பாதிச்சிருந்தா நாங்க ஏன் இந்த நெலமையில இருக்கப்போறோம் ?
அவங்களும் ஒரு தாய் வயித்துல பொறந்தவங்கதான? எங்க ஆம்படையானுக்கு நடந்த மாதிரி கொடும யாருக்கும் நடந்திருக்காது. நாங்க என்ன கஷ்ட்டத்தை அனுபவிக்கிறமோ அந்த கஷ்டத்தை அவங்க குடும்பமும் அனுபவிக்கனும், நாங்க எப்படி எங்க தாலிங்களை அறுகுறமோ அந்த மாதிரி அவங்களும் அறுக்கனும்.”
மகள் ஹேமலதா: “இனிமே எங்கம்மா எங்களை எப்படி காப்பாத்துவாங்க சார் ? அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னாலும், எங்களுக்கு ஒடம்பு சரியில்லைன்னாலும் எப்படி மருத்துவம் பாப்பாங்க, என் தங்கச்சியை எப்படி படிக்க வைப்பாங்க. எங்கப்பா இருந்திருந்தா எப்படியாவது எங்களை கவனிச்சிப்பாரு எங்கம்மாவ வேலைக்கு போகவிடமாட்டாரு. இப்ப எங்க அப்பாவ கொன்னுட்டாங்க அவங்களா இனிமே எங்களுக்கு சோறுப்போடுவாங்க, வைத்தியம் பாப்பாங்க? எங்கம்மாவுக்கு அரசாங்க வேலை வேணும்.”
ஊர் மக்களின் கருத்து
வேலு, ஆட்டோ ஓட்டுனர், கண்ணமங்கலம்:
semmaram-killings-polur-villages-01
“தி.மலை மாவட்டம் வறட்சி மாவட்டம்னு அறிவிச்சிட்டாங்க, மழை பேஞ்சா கொஞ்ச நாளைக்கு விவசாயம் நடக்கும். கூலி வேலைக்கு 20 வயசிலிருந்து 50 வயசு வரைக்கும் பெங்களுரு, சென்னை, கேரளான்னு வெளியூருக்கு போறாங்க. கூலிக்கு மரம் வெட்ட போனவங்க, பெரிய பில்டிங் வாங்கணும், அத வாங்கணும், இத வாங்கணும்னு போகல. வயித்துப் பொழப்புக்கு தான் போயிருக்காங்க, உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சி தான் போயிருக்காங்க.
ஏழுமலை, ஆட்டோ டிரைவர், கண்ணமங்கலம்:
“இது கண்டிப்பா தப்பான தொழில்தான். ஆனா நமக்கு எது உண்மைன்னு தெரியலையே. அதனால என்ன நடந்துச்சின்னு சரியா சொல்ல முடியல. இங்கிருந்து வெளியூருக்கு வேலைக்கு போனதுக்கு காரணம் வறட்சி தான். பெங்களூர்க்கு தான் நிறைய பேர் போறாங்க, நிறைய பேர் கேரளாவுக்கும் போறாங்க.
அழகர்சாமி, ஆட்டோ ஓட்டுனர், கண்ணமங்கலம்.
“கொல்லப்பட்ட எல்லோரும் கூலிக்கு மரம் வெட்ட போனவங்க தான் சார். ஆட்டோல சவாரி ஏர்றவங்க பேசிக்கும் போது இத பத்தி பல விசயங்களை கேள்விப்பட்டிருக்கேன். இந்த வேலைக்காக ஆந்திர அரசு பஸ் ரெண்டு நேரடியா அழகர்சேனைங்கிற ஊருக்குள்ளயே வந்து ஆளுங்களை ஏத்திட்டு போனதா சொல்றாங்க. திருவண்ணாமலை To திருப்பதி போற ஆந்திர பஸ் முழுக்க மரம் வெட்றவங்கள ஏத்திக்கிட்டு பஸ் ஃபுல்லாகிடுச்சுன்னு வண்டியை எடுத்துட்டு போறதாவும் சொல்றாங்க. இந்த பிரசினையில் ஆந்திர வனத்துறை ஆளுங்கதான் முக்கிய ஏஜெண்டா கூட்டிட்டு போறாங்க.”
பரமசிவம், தேநீர் கடை, காட்டுக்காநல்லூர்.
semmaram-killings-polur-villages-04“வயித்துப்பாட்டுக்காக போனவங்களை தான் இப்படி கொன்னிருக்கானுங்க. இதுல எல்லா அரசியல் கட்சிக்காரனுக்கும் தொடர்பு இருக்கு. இந்த பக்கம் உள்ளவங்களுக்கு இதுல ஒன்னும் அனுபவம் இல்ல, மலை கிராமத்து மக்களுக்கு தான் மரம் வெட்றதுல நல்ல அனுபவம் இருக்கு”.
நூறு நாள் வேலை செய்துகொண்டிருந்த சண்முகம், வசந்தா, கலைவாணி, வனிதா, தமிழ்செல்வி:
semmaram-killings-polur-villages-07
“இந்த ஊர்க்காரங்க யாரும் மரம் வெட்ற வேலைக்கு போகலைங்க, எல்லாம் கூலி வேலைக்கு போனவங்க. அப்படி போனவங்கள தான் மரம் வெட்ட போனாங்கன்னு புடிச்சின்னு போய் கொன்னுட்டாங்க.
பத்து பதினைஞ்சு வருசமா எங்களுக்கு எந்த வருமானமுமில்லைங்க, விவசாயம் பண்ண முடியல. தண்ணி இல்லாம பயிர் எல்லாம் காயிது. விவசாயம் பண்றதே கொறஞ்சு போச்சு. ஊருக்கு பாதி பேரு மெட்ராஸ், பெங்களூருன்னு போயிட்டாங்க.”
தனசேகர், காளசமுத்திரம்:
“வேலை இல்லாததுதாங்க இதுக்கு முக்கிய காரணம். மேலும் தவறான தொழில் பற்றிய விழிப்புணர்வும் இல்லை. அவங்களை பொறுத்த வரை மரம் வெட்ட போறோம். எந்த மரம் என்றெல்லாம் தெரியாது, அங்க போன பிறகு தான் தெரியுது. அதோட பணத்தை முன்கூட்டியே வங்கிட்டோம். வாங்கிய பணத்துக்கு வெட்டிட்டு வருவோம்னும் நினைக்கிறாங்க”.
தயாளன், காளசமுத்திரம்:
“நூல் வாங்க போறேன்னு சொல்லிட்டு கண்ணமங்கலம் போனவனை தூக்கின்னு போய் கொன்னுட்டானுங்க. கற்பழிக்கிறவனுக்கெல்லாம் தண்டனை தர துப்பில்ல, பொழப்புக்காக போனவங்கள சுட்டு தள்ளியிருக்கானுங்க. மரத்தை வெட்டும் போதுனா கூட பரவால்லைங்க பஸ்ல இருந்து புடிச்சுட்டு போய் சுட்ருக்கானுங்க. அவங்க பண்ணது தப்புனா தண்டனை கொடுத்திருக்கலாம் மரத்துக்கு இருக்க பாதுகாப்பு கூட மனுஷனுக்கு இல்ல”.
மணி, விவசாயி, காளசமுத்திரம்:
“இப்ப வேலைக்கு போனவங்களும், இதுக்கு முன்னடி மரம் வெட்ட போயி அரெஸ்ட் ஆகி ஜெயில்ல இருக்கவங்களும் மரம் வெட்ட கூலிக்கு போனவங்க தான் சார். அவங்களுக்கும் மரக்கடத்தலுக்கும் சம்பந்தமே இல்ல. பக்கத்துல பள்ளக்கொல்லைன்னு ஒரு ஊரு இருக்கு அங்கே ஜெகநாதன்னு ஒருத்தன் இருந்தான், எனக்கு தெரிஞ்சு அவன் தான் இங்கே இருந்த பெரிய ஏஜெண்ட். இவங்களை வேலைக்கு இட்டுன்னு போறது வர்றது எல்லாத்தையும் பன்னது அவன் தான்.
இந்த தொழிலுக்கு முன்னாடி சாராயம் காய்ச்சினிருந்தான். மரம் வெட்றதுக்கு ஆளுங்களை கூட்டிட்டு போய் புரோக்கர் வேலை பார்த்து கோடிக்கணக்குல சம்பாதிச்சிட்டு இப்ப தொழிலை விட்டே தலைமறைவாயிட்டான். அப்ப பா.ம.க வுல இருந்தான் இப்ப எங்க இருக்கான்னு தெரியல, இப்பயும் கட்சியோட தொடர்பு இருக்கலாம்”.
செந்தில், ஆசிரியர், காளசமுத்திரம்:
“ஜவ்வாது மலை கீழ்கனைவாயூர் மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளியில தான் ஆசிரியரா இருக்கேன். ஊர்ல உள்ள எல்லோரையும் இந்த வேலைக்கு போறவங்கன்னு சொல்ல முடியாதுங்க அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு சிலர் போய்டுறாங்க. நாங்கூட பசங்ககிட்ட, ஏண்ட இப்படி போய் மாட்டிக்கனும் இந்த வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லுங்கடான்னு சொல்லுவேன். சொல்றோம் சார்ம்பாங்க.
எப்படி கூட்னு போனாங்க யார் கூட்னு போனாங்கங்கிற டீட்டெய்ல் எல்லாம் தெரியல. அவங்க மரம் வெட்ட போகல கூலி வேலைக்கு தான் போனாங்கன்னும் பேசிக்கிறாங்க. எது உண்மை எது பொய்னு தெரியல.
யார் ஏஜென்ட்னு தெரியாது, அது மரம் வெட்ட போற எல்லோருக்கும் கூட தெரியாது, ஊர்ல இருந்து எல்லோரையும் கூட்னு போற அந்த டீம்ல இருக்க ஒருத்தருக்கு மட்டும் தான் ஏஜென்டோட லிங்க் இருக்கும். அவருக்கு மத்தவங்களை விட கொஞ்சம் கூடுதலா கமிஷன் கிடைக்கும்.
ஜவ்வாது மலையில 6 பஞ்சாயத்துல 300 குக்கிராமங்கள் இருக்கு. இதுல தோராயமா 30,000 பேர் வாழ்றாங்க. இங்கிருந்து தான் அதிகம் பேர் மரம் வெட்ட போறாங்க. காரணம் விவசாயத்தை தவிர வேறு வேலை இல்ல, அதோட மரம் வெட்றதுல அவங்களுக்கு நல்ல திறமையும் இருக்கதால போறாங்க.
இதுல பிடிபட்டு சிறைக்கு போனவங்க அதிகம். பலர் இன்னும் சிறையிலேயே இருக்காங்க அதனால அவங்க குழந்தைங்க ரொம்ப பாதிக்கப்படுறாங்க. இப்படி பாதிக்கப்பட்டவங்களோட குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்கு வர்றதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மாதிரி அப்செட்டாவே இருப்பாங்க.
சிறைக்கு போய்ட்டு வெளியே வந்தவங்க பெரும்பாலும் திரும்ப அந்த வேலைக்கு போறதே இல்ல தவறை உணர்ந்து பிறகு குடும்பத்தோடு கேரளாவிற்கோ கர்நாடகாவிற்கோ சென்று விடுகின்றனர். இதனால ஒவ்வொரு வருசமும் மாணவர்கள் சேர்க்கை குறைஞ்சிட்டே வருது”.
_______________________________
காளசமுத்திரம் உள்ளிட்ட மேற்கண்ட கிராமங்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வெட்டுவதில் கைதேர்ந்தவர்கள் அல்ல. கடந்த சில ஆண்டுகளாக தான் இப்பகுதியிலிருந்து சிலர் மரம் வெட்டச்செல்வதாக கூறுகின்றனர்.
இங்கு வசிக்க கூடிய பெரும்பாலான மக்கள் வன்னியர்கள். இவர்கள் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என்று சிறு அளவில் தான் நிலம் வைத்திருக்கின்றனர். வெகுசிலர் தான் ஐந்து ஏக்கர் வைத்திருக்கின்றனர். தண்ணீர் இல்லாததால் பெரும்பாலும் நெல் பயிரிடுவதில்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கரும்பும், வாழையுமே பயிரிடுகின்றனர். கரும்புக்கும் தண்ணீர் தேவை தான், ஆனால் தண்ணீரை அளவாக விடுகிறோம் என்கின்றனர். எனினும் இந்த விவசாயமும் விவசாயிகளுக்கு கைகொடுப்பதில்லை.
semmaram-killings-polur-villages-22சமீப ஆண்டுகளில் இங்குள்ளவர்கள் குடும்பத்தோடு சென்னைக்கும், பெங்களூருக்கும் கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். ஊரில் பாதி பேர் வெளியூர்களில் தான் உள்ளனர்.
இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்தையும் சந்தித்து விட்டு ஜவ்வாது மலையை நோக்கி பயணமானோம். கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேர் அங்குள்ள மேல் குப்சானூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர்கள். மலைகிராமத்தை சென்றடைந்த போது நன்றாக இருட்டி விட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை இரவு நேரத்தில் தான் சந்தித்தோம்.
சின்னசாமியின் மனைவி மலர், மேல்குப்சானூர்:
“என் பேரு மலருங்க, எங்க வீட்டுக்காரர் பேரு சின்னசாமி. அவரு கூலி வேலைக்கு கேரளாவுக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு. அதுக்கு மரம் வெட்டற வேலையெல்லாம் தெரியாது. யார் கூட்டிட்டுப் போனாங்கன்னு தெரியல.
chinnasamy-manaivi-malar
“கூலி மட்டும்தான் சார் கண்ணுல பார்ப்போம். யாரு கூட்டிட்டுப் போறாங்க, எங்க போறாங்க அதெல்லாம் எங்ககிட்ட சொல்லமாட்டாங்க.” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி சின்னசாமியின் மனைவி மலர்

கல்லு ஒடைக்க, குருமொளகு பறிக்க, காப்பி தோட்டங்களுக்கு வேலைக்காக கேரளாவுக்கு போவாரு, கூலி வேலைக்கு போனாதான் கஞ்சி சார். பத்து நாள், ஒரு மாசம் இருந்துட்டு 1000, 2000 வாங்கிக்கிட்டு வருவாரு. கூலி மட்டும்தான் சார் கண்ணுல பார்ப்போம். யாரு கூட்டிட்டுப் போறாங்க, எங்க போறாங்க அதெல்லாம் எங்ககிட்ட சொல்லமாட்டாங்க.
பத்து வருசமா இந்த வேலை தான் செய்ஞ்சிக்கிட்டு இருக்காரு. இதுவரைக்கும் மரம் வெட்ற வேலைக்கு போனதில்ல. எனக்கு இரண்டு குழந்தைங்க. சின்ன பையன் முருகனுக்கு 7 வயசு. பெரிய பொண்ணுக்கு 20 வயசு. ஆந்திர அரசாங்கம் பொய் சொல்லுது.”
ராஜேந்திரன் மனைவி நதியா:
ராஜேந்திரனுக்கு 30 வயது, நதியாவுக்கு 20 வயது. திருமணமாகி 9 மாதங்கள் தான் ஆகின்றன. நதியா இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார்.
rajendran-family
“அவருக்கு கண்ணுல பூ விழுந்துருச்சி அதனால நைட்டானா கண்ணு தெரியாது” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி ராஜேந்திரனின் மனைவி நதியா (வெள்ளை ஷால் போட்டிருப்பவர்)
“அவரு மரம் வெட்டவெல்லாம் போகலீங்க, கூலி வேலைக்கு போறேன்னுட்டு தான் போனாரு. அவருக்கு கண்ணுல பூ விழுந்துருச்சி அதனால நைட்டானா கண்ணு தெரியாது”.
நதியாவின் சின்னம்மா:
“இவங்க ரெண்டு பேருக்கும் அம்மா அப்பா இல்லைங்க. ராஜேந்திரனுக்கு கண்ணு தெரியததனால தான் இவ்வளவு காலமா கல்யாணம் ஆகாம இருந்துச்சு. அப்புறம் இதுங்க ரெண்டுமே பேசி கல்யாணம் பன்னிக்கிச்சுங்க.
ஊருக்குள்ள யாரும் மரம் வெட்ற வேலைக்கு போறது இல்லைங்க, எல்லாம் கூலி வேலைக்கும், கேரளாவுக்கும் தான் போவாங்க.”
கோவிந்தசாமி மனைவி முத்தம்மா:
“மெட்ராசுக்கு கூலி வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போனாரு” என்றார். இவருக்கு வெள்ளையன் (13) சித்தமரம் (12) திரிஷா (5) சாமி (3) ஆகிய நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நான்கு பேரையும் எப்படி வச்சு காப்பாத்த போறேனோ என்று அழுதுகொண்டே கூறினார்.
வெள்ளிமுத்து அத்தை சின்னபுள்ளை:
வெள்ளிமுத்துக்கு 22 வயது. வாய் பேச முடியதவர், காதும் கேட்காது. எட்டு வயது குழந்தையாக இருக்கும் போது அம்மா அப்பா இருவரும் இறந்துவிட்டனர். அதன் பிறகு இவரை எடுத்து வளர்த்தது அத்தை சின்னபுள்ளை தான்.
vellimuthu-aththai
“மேஸ்திரி வேலைக்கு மெட்ராசுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாம்பா.” – கொலை செய்யப்பட்ட தொழிலாளி வெள்ளிமுத்துவின் அத்தை சின்னப்பிள்ளை மற்றும் தம்பி
“மேஸ்திரி வேலைக்கு மெட்ராசுக்கு போறேன்னு சொல்லிட்டு போனாம்பா. மரம் வெட்ற வேலை எல்லாம் அவனுக்கு தெரியாது, அந்த வேலைக்கெல்லாம் இதுவரைக்கும் போனதில்ல”.
பிரபாகரன், மேல் குப்சானூர்:
வேலூரில் எம்.ஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
“எங்களுக்கும் தமிழ் தான் சார் தாய்மொழி, ஆனா அதை பேசுறது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். இங்க இருக்கிற குழந்தைங்க எல்லாம் அதிகம் படிக்கறதில்ல. வேலூருக்கு போனா கூட எப்படி திரும்பி வர்றதுன்னு தெரியாத மக்கள் எங்க மக்கள். அப்படி போய் ஊருக்கு வர்ற வழி தெரியாதவங்கள யாராவது கூட்டிட்டு வந்து விடுவாங்க.
கூலி வேலைக்கு கூட்டிட்டு போய்ட்டு, நிறைய வேலை வாங்கிட்டு கம்மியான கூலி கொடுத்து ஏமாத்துவாங்க. எஜென்டுகள்லாம் எங்க இருந்து வர்றாங்கன்னு தெரியாது. ஏலகிரி மலை, ஜவ்வாது மலை ஆட்கள் எல்லாரும் சேர்ந்து வேலை செய்வாங்க.
கட்டிட வேலைக்கும் பெயிண்டிங் வேலைக்கும் தான் கூலிக்கு போவாங்க. வாரத்துக்கு ஒருமுறை வந்து வீட்டு செலவுக்கு பணம் கொடுத்துட்டு மறுபடியும் கிளம்பிடுவாங்க. அவங்க எடுத்துடுட்டு வரும் கூலிக்காக குடும்பமே காத்திருந்து, காய்கறி வாங்கி சோறு ஆக்குவாங்க. ஊருக்கு உள்ளயே யாரும் மரம் வெட்ட மாட்டாங்க. கூட்டிட்டு போனவங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது. மரம் வெட்ட யாரு எங்கிருந்து போறாங்கனு தெரியாது, ஆந்திரா மரம் வெட்றதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
ஒரு மாசம் ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. மழை இல்லாதததால விவசாயம் செய்ய முடியல. கேரளாவுக்கும், மெட்ராசுக்கும், பெங்களூருக்கும், திருப்பூருக்கும், பவானிக்கும் தான் கூலி வேலைக்கு போவாங்க.
மலையில ஃபாரஸ்ட்காரங்க ஆடு, மாடு மேய்க்க கூடாதுன்னு தடை போடுறாங்க, மீறி மேய்ச்சா அபராதம் போடுறாங்க, ஆட்டை மடக்கி வச்சிக்கிறாங்க.
______________
ஜவ்வாது மலை சென்னையிலிருந்து 170 கி.மீ. தொலைவிலுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இம்மலைத்தொடர் திருவண்ணாமலை வேலூர் மாவட்ட எல்லைகளை உள்ளடக்கி கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்த மலையிலும் இதே போன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள சேர்வராயன் மலை, கல்வரயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை, ஏலகிரி மலை, சித்தேரி மலை ஆகிய மலைப்பகுதிகளிலும் வசித்து வரும் பழங்குடி மக்கள் மலையாளக் கவுண்டர்கள் என்றும் மலையாளிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்
semmaram-killings-polur-villages-15
முருகப்பாடி கிராமத்தின் வறண்டு போன கிணறு.
ஜவ்வாது மலையிலுள்ள 230 கிராமங்களில், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருப்பதை போன்று ஊர்கள் அடுத்தடுத்ததாக இல்லை. குறைந்தது 3 கி.மீட்டலிருந்து 10 கி.மீ இடைவெளியில் இம்மலைக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன.
semmaram-killings-polur-villages-16
முருகப்பாடி கிராமம்
மலையாளிகள் என்றால் மலையை ஆள்பவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று இவர்களின் வாழ்கை அதற்கு நேரெதிரானதாக மாறியுள்ளது. மறுகாலனியாக்க கொள்கைகள் எங்கோ ஒரு மலையின் மீதிருக்கும் இந்த மக்களையும் விட்டு வைக்கவில்லை. இயற்கையை நம்பி வாழும் இவர்களுக்கு விவசாயம் தான் ஒரே தொழில். அதுவும் மழையை நம்பியே இருக்கிறது. பெரும்பாலான மக்களிடம் உள்ள நிலம் வீட்டில் உள்ள தோட்டத்தின் அளவிற்கே இருக்கிறது. ஒன்றிரண்டு ஏக்கர் வைத்திருப்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள். இந்நிலங்களில் பெரும்பாலும், கேழ்வரகு, சாமை திணை போன்ற பயிர்களை ஒருபோகம் விளைவிக்கின்றனர்.
நிலத்தை விட்டு பிரியாத இம்மக்களை உலகமயமாக்கல் நகரங்களை நோக்கி வீசி எறிந்திருக்கிறது. தொடர் வறட்சியும் விவசாய நிலத்தை விட்டே இம்மக்களை விரட்டியடிக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் பாதிக்கு பாதி பேர் வெளியூர்களுக்கு சென்றிருக்கின்றனர் பெரும்பாலும் கேரளாவிற்கு குறுமிளகு, காபி கொட்டை பறிக்கவும், சென்னை பெங்களூர் போன்ற நகரங்களுக்கு கட்டிட வேலைகளுக்கும், பெயிண்டிங் வேலைகளுக்கும் செல்கின்றனர். இவற்றுக்கும் ஏஜெண்டுகள் மூலமே செல்கின்றனர். வேலைக்குச் செல்பவர்கள் அவ்வப்போது கொண்டு வரும் அற்பக் கூலியை வைத்துத்தான் மொத்த குடும்பமும் உயிர் வாழ்கிறது.
மாடுகள் மேய பசும்புல் வெளி இல்லாததாலும், போதிய தீவனம் போடப்படாததாலும் இம்மக்களின் கால்நடைகள் மெலிந்து காணப்படுகின்றன. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் மலையின் இயற்கை வளங்களையும் அதன் மூலாதாரங்களையும் சூறையாடி மலைகளை சூன்ய பிரதேசமாக மாற்றிவிட்டார்கள்.
semmaram-killings-polur-villages-24
மலைகிராமம் மேல்குப்சானூரில் இப்போதுதான் ரோடு போடுவதற்கு கல் போட்டிருக்கிறார்கள்.
80% பழங்குடி மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். 70% சதவீதத்துக்கும் மேலானோர் கல்வியறிவு அற்றவர்கள். 100% சதவீதப் பழங்குடிப் பெண்கள் இரத்தச் சோகைக்கு ஆட்பட்டுள்ளனர். 70% சதவீத குழந்தைகள் பிறக்கும்போதே எடைக்குறைந்து 2.5 கிலோவுக்கும் குறைவான எடையில் பிறக்கின்றன. கர்ப்பகாலத்தில் பழங்குடி பெண்கள் குறைந்தபட்சம் எடைக்கும் குறைவான எடையிலேயே உள்ளனர், இதனால் பிரசவம் என்பது அவர்களுக்கு மறுபிறப்பாக இருக்கிறது.
கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களையும் இம்மக்கள் உடனடியாக சென்று வாங்கவில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு கைது செய்யப்ப்பட்ட, கொலைசெய்யப்பட்ட சிலரின் உறவினர்கள் என்று சென்றவர்கள் மீதும் வழக்கு போட்டு உள்ளே தள்ளியிருக்கிறது ஆந்திர அரசு. எனவே இந்த மக்கள் தற்போது யாரையும் நம்பத் தயாராக இல்லை. அனைவரைக் கண்டும் அஞ்சுகிறார்கள். தங்களுக்கு மரம் வெட்டவே தெரியாது, பிற கூலி வேலைகளுக்குத்தான் செல்கிறோம் என்கின்றனர். இவர்களை மரம் வெட்ட அழைத்துச் செல்லும் எஜென்டுகள் யார், உள்ளூரில் அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் யார் யார், ஏற்கெனவே சிறைக்குச் சென்று வழக்கை முடித்துக்கொண்டு வெளியே வந்திருப்பவர்கள் யார் யார் என்று எதற்கும் பதில் தெரியவில்லை. அவர்கள் கூறுவதெல்லாம் எங்களுக்கு மரம் வெட்ட தெரியாது. நாங்கள் அந்த வேலைக்கே போனதில்லை என்று மட்டும்.
இதே போன்று தான் சமவெளி பகுதியிலுள்ள ஏழு குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் கூறினர். இவர்கள் அனைவரும் நிரந்தர வேலை இன்றி பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர். மழை பெய்யும் போது கொஞ்சம் விவசாயம், முகூர்த்த நாட்களில் கல்யாண வேலை, கல் உடைக்கும் வேலை, பெயிண்டிங் வேலை, நகரங்களில் சில நாட்களுக்கு கட்டிட வேலைகள், தோட்ட வேலைகள் என்று பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர்.
pannen-selvam
மேல்குப்சானூர் கிராமத்திற்கு போகும் வழியில் ஒரு அஞ்சலி பிளக்ஸ் மரத்தில் தொங்குகிறது!
ஒரு வேலை ஒரே வாழ்க்கை என்றில்லாமல் கிடைக்கும் அத்தனை வேலைகளையும் செய்கின்றனர். கையில் காசிருக்கும் போது தடபுடலாக செலவு செய்வது காசு காலியான பிறகு மீண்டும் வேலைக்கு செல்வது என்று நிலையான ஒரு வேலையோ வாழ்க்கையோ இல்லாமல் இருக்கும் இவர்களை வர்க்கத்தில் உதிரி பாட்டாளிகள் என்றழைக்கலாம். கொஞ்சம் அதிகமாக காசு கிடைக்கிறது என்றால் உதிரிகள் எதற்கும் துணிவார்கள். அந்த வகையில் ஒரு சில நாட்கள் மரம் வெட்டினால் சில ஆயிரங்களை பார்க்க முடியும் என்பதால் இந்த வேலைக்கு சென்றிருக்கலாம்.
விவசாயம் பொய்த்து போய் வானத்தை பார்த்துக்கொண்டிருந்த இம்மக்களின் காடு பற்றிய அறிவையும், மரம் வெட்டும் திறமையையும், நகர வாசிகளின் சூதுகளை அறியாத வெள்ளேந்தித்தனத்தையும் அறிந்து கொண்ட சமூகவிரோதிகள், அண்டை மாநிலங்களுக்கு நல்ல சம்பளத்துக்கு அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தைகளை கூறி சில பல ஆயிரங்களை முன் பணமாக கொடுத்து தமது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இதில் சகல ஓட்டுக்கட்சி தலைவர்களும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இவர்களோடு அரசு அதிகாரிகளும், போலீசும் கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது. இவர்களை இவ்வாறு தான் செம்மரக் கடத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். ஓரிரு முறை சென்றவர்கள் இதில் நல்ல வருமானம் வருகிறதே என்று மீண்டும் மீண்டும் போகத் துவங்கியுள்ளனர்.
semmaram-killings-polur-villages-18
பா.ம.க அன்புமணி ராமதாஸ், வேட்டைகிரிபாளையத்திற்கு வந்த போது ஒரு காட்சி.
இது தவறு என்று அந்த மக்களுக்கு தெரியாதா? தெரியும். தவறு என்று தெரிந்தும், உயிருக்கு ஆபத்தான வேலை என்று அறிந்தும் தான் இவ்வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். விவசாயம் பொய்த்துப் போனதும், வேலையின்மையுமே பிரதான காரணமாக இருக்கிறது.
செம்மரக்கடத்தலில் முக்கிய குற்றவாளிகளாக இருப்பது மாஃபியா கும்பலும், ஓட்டுக்கட்சிகளும் மட்டுமல்ல, வனத்தை பாதுகாப்பதற்காக இருக்கும் வனத்துறையே இவர்களுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கும் முக்கிய குற்றவாளியாக இருக்கிறது. ஆந்திர வனத்துறை தான் தொழிலாளிகளை கூட்டிச் செல்லும் முக்கியமான ஏஜென்ட் என்கிறார்கள் மக்கள். வனத்துறையின் ஒப்புதல் இல்லாமல் செம்மரக் கடத்தல் நடைபெற வாய்பே இல்லை.
இதில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் வயிற்றுப்பாட்டுக்காக, கொஞ்சம் கூடுதல் கூலி கிடைக்கிறதே என்பதற்காக சென்ற அப்பாவி ஏழை விவசாயிகள், மற்றும் பழங்குகளாவர். விவசாயத்தின் அழிவும் அதன் காரணமாக மோசமாகி வரும் தமது வாழ்நிலைமையுமே அவர்களை இதை நோக்கி தள்ளியிருக்கிறது.
இருப்பினும் இவை எதுவும் கொலைகார ஆந்திர போலீசின் செயலை நியாயமாக்கிவிடாது. பிறந்த ஊரில் வாழ முடியாமல் ஆக்கியிருக்கும் இந்த சமூக அமைப்புத்தான் இவர்களை இறக்கமின்றி கொல்லப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. ஏழைகள் என்பதால் இவர்களை எந்த வேலைக்கும், எந்த அபாயத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
செம்மரத்தில் செய்யப்பட்ட வரவேற்பறை நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு முதலாளிகள் தமது தொழிலை பேசுவதற்கும், முதலாளிகளின் மனைவிமார்கள் செம்மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையாரை பூஜை செய்து வணங்குவதற்கும் இத்தகைய இரக்கமற்ற நரபலிகள் தேவைப்படுகிறது.
- வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக