வியாழன், 9 ஏப்ரல், 2015

சுயமரியாதை பாடகர் நாகூர் ஹனீபா காலமானார் !

பிரபல பாடகர் நாகூர் ஹனீபா( வயது 90 ) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.
பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர். தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாள்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை. இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25 ஆம் நாள் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனீபா. இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசைமுரசு’ எனும் அடைமொழியும் அப்பெய ரோடு இணைந்தது. சிறு வயதிலிருந்தே ஹனீபா பாடத் தொடங்கி விட்டார். நாகூரில் அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் பாடியதுதான் அவரது முதல் பாடல் அனுபவம். அதன்பிறகு, திருமண நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்களில் பாடினார் ஹனீபா. 1941 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழந்தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக்கச்சேரி செய்ய ஹனீபாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனீபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக்கொண்டு செய்த கச்சேரியும் அதுவே. 25 ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஹனீபா அந்தக் கச்சேரியை நடத்தியபோது அவருக்கு வயது 15.

ஹனீபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்லர். அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. 1954 இல் அவரது பாடல்கள் இசைத் தட்டில் பதிவாயின. இலங்கை கம்பலையில் வாழ்ந்த நல்லதம்பி பாவலர் எழுதிய ‘சின்னச் சின்னப் பாலர்களே! சிங்காரத் தோழர்களே!’ என்று தொடங்கும் சிறுவர்களுக்கான அறிவுரைப் பாடலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற உணர்ச்சிப் பாடலும் ஒரே இசைத்தட்டில் பதிவாகி முதன் முதலில் வெளிவந்தது. ஹனீபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

 1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது. உலக நாடுகள் பலவற்றிலும் ஹனீபாவின் இசை முழக்கம் அரங்கேறியுள்ளது. இலங்கையில் தொடங்கிய அவரது உலக இசைப்பயணம், சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, கத்தார், பஹ்ரைன், ஹாங்காங் என தொடர்ந்தது. ஹனீபாவின் பாடல்கள் சமய சமூக நல்லிணக் கத்துக்கு பெருந்துணை புரிந்துள்ளன. தமிழகத்தில் சமயப் பூசல்கள் இன்றி சமூகங்களுக்கு இடையே அன்பும் அமைதியும் நிலவுவதற்கு ஹனீபாவும் ஒரு காரணம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஹனீபாவின் தீவிர ரசிகர். மதுரை ஆதீனம் காரில் பயணம் செய்யும் போதெல்லாம் ஹனீபாவின் பாடல்களையே பெரிதும் விரும்பிக் கேட்பாராம். திரைத்துறையிலும் தடம் பதித்தவர் ஹனீபா. குலேபகாவலி திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் எல்.ஜி.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து, ‘நாயகமே நபி நாயகமே’ என்ற பாடலைப் பாடினார். பின்னர் பாவமன்னிப்பு படத்தில் டி.எம்.சௌந்தரராஜனோடு இணைந்து ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலையும், செம்பருத்தி படத்தில் ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலையும், ராமன் அப்துல்லா படத்தில் ‘உன் மதமா என் மதமா’ என்ற பாடலையும் மேலும் பல திரைப்பாடல்களையும் பாடியுள்ளார். ஹனீபா பாடிய பாடலான ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல், மத வேறுபாடுகளைக் கடந்து இந்து, கிறித்தவ வீடுகளி லெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது nakkheeran.,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக