வெள்ளி, 3 ஏப்ரல், 2015

ஷகீலா:சினிமா மட்டும் இல்ல... என்னோட முதல் காதல், முதல் முத்தம், முதல் செக்ஸ்

'அவள் விகடன்' 07.04.15 தேதியிட்ட இதழில் நடிகை ஷகிலாவின் சிறப்பு பேட்டி, 'சொல்ல மறந்த கதை' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அவள் விகடனில் சொல்லாத கதையையும், இங்கே நம் இணைய வாசகர்களுக்காக பேசுகிறார் ஷகிலா. ''குடும்பமும், சமூகமும் என்னை எப்படியெல்லாம் ஒரு கவர்ச்சி நடிகையா மாத்துச்சுனு 'அவள் விகடன்'ல நிறையவே பேசியிருக்கேன். என்னோட இந்தக் கோபத்துக்கும், வருத்தத்துக்கும் ஒரே ஒரு காரணம்தான் இருக்கு. என்னைப் போல உங்கள்ல பலரோட குழந்தைகளும் மாறிட கூடாதுனுதான் என்னைப் பத்தி சொல்றேன். இது அட்வைஸ் இல்ல, கொஞ்சமா உங்ககூட பேசணும்... அவ்ளோதான்'' -அத்தனை தெளிவாக வருகின்றன வார்த்தைகள் ஷகிலாவிடமிருந்து. ''சின்ன வயசுல இருந்தே நிறைய பிரச்னைகளைப் பாத்துட்டேன். அதோட வலிகள் எல்லாம் சாவை விட கொடுமையானது. அதனாலதான் 'ஆத்ம சரிதா' என்கிற பெயரில் மலையாளத்தில் சுயசரிதை புத்தகம் எழுதியிருக்கேன்.


என்னோட 16 வயசுல அக்கா நிறைமாச கர்ப்பிணியா இருந்தா. அக்காவோட பிரசவத்துக்குக்கூட பணம் இல்லாம கஷ்டப்பட்டோம். மாசக் கணக்குல வீட்டு வாடகை கொடுக்காம இருப்பாங்க. அந்த சமயம்தான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்துச்சு. ஆரம்பத்துல இருந்தே கிளாமர் ரோல்கள் கொடுத்தாங்க. ’ஒருத்தரை கட்டிப் பிடிக்குறது நடிப்புக்குத்தானே’னு சாதாரணமா எடுத்துக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் கேரளாவுல ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போய் நல்ல சாப்பாடு சாப்பிட போறோம்னு நினைச்சிட்டு இருந்தப்ப, 3 நாளுக்கு 1 லட்சம் பணம் தர்றோம்னு மலையாள படத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. சரி இன்னும் 3 நாள் தானேனு ஒப்புக்கிட்டு நடிச்சேன். முதல்ல 1 லட்சம் பணம் கொடுத்தாங்க. அந்தப் பணத்தை எடுத்து என்னோட மேக்கப் பெட்டிக்குள்ள வெச்சுக்கிட்டு ’வீட்டுக்குப் போகப் போறோம் ஜாலி’னு இருந்தப்ப, இன்னும் 2 லட்சம் கொண்டு வந்து கொடுத்தாங்க. எனக்கு பணம் வேணாம் நான் நடிக்க மாட்டேன்னு சொன்னப்ப, இது ஏற்கெனவே நடிச்ச 3 நாளைக்கான சம்பளம்தான். ஒரு நாளைக்கு 1 லட்சம்னுதானே பேசினோம்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. எனக்கு பயங்கர ஷாக். இப்ப என் மேக்கப் பெட்டியில 3 லட்சம். நம்ப முடியாம வீட்டுக்கு வந்தேன். அதுவரைக்கும் இவ்ளோ பணம் எதுக்காக தர்றாங்கனு புரியாத எனக்கு, மலையாளத்துல நாம நடிக்கிற படங்கள் கண்டிப்பா ஹிட் ஆகுது. அதனாலதான் இவ்ளோ பணம் தர்றாங்க அப்படிங்கற விஷயமே பிறகுதான் புரிஞ்சுது. அதுக்கப்புறம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தினு 200க்கும் அதிகமான படங்கள் பண்ணிட்டேன்.

சினிமா மட்டும் இல்ல... என்னோட முதல் காதல், முதல் முத்தம், முதல் செக்ஸ் இதைப் பத்தியெல்லாம் உங்களுக்கு தெரியுமா? ஷகிலா இப்படி ஆனதுக்கு காரணம் என்னனு தெரியுமா? இதெல்லாம் ஏதோ எனக்கு மட்டும் இல்ல. வெளியில சொல்ல முடியாம நிறைய பெண்களுக்குகூட நடந்திருக்கலாம்.

சின்ன வயசுல பையன்களைப் போல தைரியாம இருப்பேன். அப்பாவோட புல்லட்டை எடுத்துட்டு ஓட்டுறது, தெருவுல இருக்குற பசங்களோட விளையாடுறதுனு ஒரே சேட்டை பண்ணுற டாம் கேர்ள் நான். படிப்பு ஏறலதான்... அதுக்காக அடிச்சா சரியா போயிடுமா? வீட்ல மட்டுமில்ல, ஸ்கூல்ல என்னோட வாத்தியார் என்ன பண்ணார்? ஒழுங்கா படிக்காததுக்கு பனிஷ்மென்ட் தர்றேங்கற பேர்ல... என்னோட கிளிவேஜ் தெரியுற மாதிரி குனிய சொல்லி, ரெண்டு கைகளையும் றெக்கை மாதிரி விரிச்சு வெச்சு, குனிஞ்சி நிக்க சொல்லி, வெச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருப்பார். எனக்கு முழுசா வெவரம் பத்தலைனாலும்... ஓரளவுக்காச்சும் புரிஞ்சி அம்மாகிட்ட போயி சொல்வேன். அவங்களும் நான் சொல்றதை காது கொடுத்து கேட்கல. நீ ஏதாச்சும் தப்பு பண்ணி இருப்பே... அதான் அப்படி பண்ணியிருப்பார்னு கண்டுக்காம போயிடுவாங்க.

சினிமா துறைக்கு வந்து 22 வருஷம் ஆகுது. இதுவரைக்கும் ஒரு குணச்சித்திர ரோல்கூட கிடைக்கலை. அப்பாவுக்கு தேவையானதெல்லாம் நான் சம்பாதிச்ச பணம் மட்டும்தான். நான் சொல்றதை யார்தான் காது கொடுத்து கேட்டாங்க.

தெருவுல இருக்குற ஒரு பையன் திடீர்னு முத்தம் கொடுத்துட்டு ஓடிட்டான். அந்த வயசுல அதுக்குப் பேரு முத்தம்னுகூட தெரியாது. அவன் என் வாயில எச்சில் பண்ணிட்டான்னுதான் அம்மாகிட்ட சொன்னேன். அம்மா, அதையும் கூட காது கொடுத்து கேக்கலையே.

சரி, என் வாழ்க்கையில வந்த காதல்தான் சரியா அமைஞ்சுதா... அதுவும் இல்ல. இதுவரைக்கும் பத்து, பதினைஞ்சி பேரு லவ் பண்ணி இருப்பாங்க. ஆனா, ஒருத்தர் கூட உண்மையா காதலிக்கல. என்னோட பணத்துக்கும் உடம்புக்குமே ஆசைப்பட்டாங்க. அவங்கள குத்தம் சொல்லி தப்பில்லை. அது அவங்க விருப்பம். சரி மீடியா என்ன பண்ணுச்சு? என்னோட பேட்டினு சொன்னாவே கான்ட்ரவர்ஸியான, செக்ஸியான விஷயங்களை மட்டும்தான் எழுத நினைக்கிறாங்க. எல்லாத்தையும் வெளிப்படையா பேசிட்டேன். கண்டிப்பா என்னைப் புரிஞ்சிகிட்ட ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பேன்.

என்னோட வாழ்க்கையை சுயசரிதையா எழுத ஆரம்பிச்சப்ப, நிறைய பேரு பயந்தாங்க. யார் யாரெல்லாம் என்னோட நெருக்கமா இருந்தாங்கனு சொல்லிடுவேனோனு பயந்தாங்க. அதையெல்லாம் நான் ஏன் சொல்லணும்? அது அவசியமில்லை. என்னைப் புரிஞ்சிக்காத பெத்தவங்க... தப்பா தண்டனை கொடுத்த வாத்தியார்... அக்கம் பக்கத்து ஆண்கள்னு நிறைய பேர்தான் நான் இப்படி வளர்ந்து நிக்க காரணம். இப்ப உள்ள குழந்தைகளும் இதுபோல அப்பா, அம்மா, வாத்தியார், ஆண்கள்னு சந்திக்கறதுக்கு நிறையவே வாய்ப்பிருக்கு. அதனால குழந்தைங்க பேசுறதை காது கொடுத்து கேளுங்கனு ஊருக்கே அழுத்திச் சொல்றதுக்காகத்தான் சுயசரிதை புத்தகத்தையே எழுதினேன். என்கிட்ட யாராவது காது கொடுத்து கேட்டிருந்தா... என் வாழ்க்கை மாறியிருக்கும்ல, அந்த ஆதங்கம்தான்’’ என்று கொட்டித் தீர்க்கும் ஷகிலா தனது விருப்பம் ஒன்றையும் பதிவு செய்கிறார்.

’’நாலு பேருக்கு நல்லது பண்ணணும்னு ஆசை இருக்கு. ஆனா, அதுக்காக அரசியல்ல குதிக்கணும்னு ஆசை இல்லை. அதேசமயம், ஜெயலலிதா அம்மா மேல அளவுக்கதிகமா மரியாதை வெச்சுருக்கேன். எனக்கு மைக் புடிச்சு பேச வராது. ஏதாச்சும் பேசினா ஏடாகூடமா பேசிடுவேன்னு பயந்துதான் கட்சியிலயெல்லாம் சேரல. ஆனா, 'வா'னு சொல்லி அம்மா கையசைச்சா போதும், ஓடிப்போய் நின்னுடுவேன்’’ -சொல்லிவிட்டு பெரிதாகச் சிரிக்கிறார் ஷகிலா.

- பொன்.விமலா

படங்கள்: தி.ஹரிஹரன்
விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக