சனி, 11 ஏப்ரல், 2015

திருப்பதி படுகொலை! அனைத்து கட்சியினரின் அவசர ஆலோசனை கூட்டம் - எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ( படங்கள்)

20 அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற (ரிப்போர்ட்டஸ் கில்டு) அரங்கில் இன்று (11.04.2015) தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.>இக்கூட்டத்தில் வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க. , தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வை. காவேரி, பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,எஸ்.எம்.ஹாரூன் ரசீது, மனித நேய மக்கள் கட்சி தெஹ்லான் பாகவி, எஸ்.டி,பி.ஐ. பிரின்சில்லா ஜான்பாண்டியன், தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம், த. வெள்ளையன், தலைவர், வணிகர் சங்க பேரவை, ஆர்.சி. பால் கனகராஜ், தமிழ் மாநில கட்சி, பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கம், சுப. உதயகுமாரன், அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு பொழிலன், பொதுச்செயலாளர், தமிழக மக்கள் முன்னணி, குணங்குடி அனீபா, த.மு.மு.க, மாநில துணைத் தலைவர், தடா அப்துல் ரஹீம், இந்திய தேசிய லீக் கட்சி, ராமகிருஷ்ணன், திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம், கா. திருமுருகன், மே 17 இயக்கம், வீரசந்தானம், தமிழ்ப் படைப்பாளிகள் இயக்கம், தியாகு, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், குடந்தை அரசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தபசிகுமரன், திராவிடர் விடுதலைக் கழகம், எஸ்.எம். பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத், கோசுமணி, மீனவர் மக்கள் முன்னணி, முரளி, மனித உரிமைகள் கழகம், வேணு மணி- தமிழர் எழுச்சி இயக்கம், செந்தில்குமார், இளந்தமிழகம், பாவேந்தன், தமிழ்த் தேச நடுவம், திருமலை, தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம், வழக்கறிஞர் காந்திகுமார் 

வழக்கறிஞர் கயல், பிரதீப் குமார், மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம், செம்பியன், மாணவர் கூட்டமைப்பு, டேவிட் பெரியார் மனித உரிமை ஆர்வலர், கீரா, கலகம் அமைப்பு 
 மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
- தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளர்களாக ஆந்திரா சென்ற 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினரும் வனத்துறையினரும் கைது செய்து சித்ரவதைக்குள்ளாக்கி சுட்டுப் படுகொலை செய்து வனப்பகுதி ஒன்றில் போட்டுவிட்டு செம்மரம் கடத்தியதால் சுட்டோம் என்று அப்பட்டமான பொய்யை கூறி வருகிறது. ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினரின் இந்த கொலைபாதக செயலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலையை நிகழ்த்திய ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் டி.ஐ.ஜி. காந்தாராவ் உட்பட அனைத்து காவல்துறை, வனத்துறையினரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். இந்த படுகொலையை அரங்கேற்ற தூண்டிய கொடியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
- 20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த படுகொலை குறித்து முழுமையான உண்மைகள் வெளிவர மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் ஏப்ரல் 28-ந் தேதியன்று 'தமிழர் நீதி பேரணி' நடத்திட தீர்மானிக்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தொடங்கும் இந்த பேரணி கிண்டி ஆளுநர் மாளிகையில் முடிவடையும். பேரணியின் முடிவில் மேதகு ஆளுநர் அவர்களை சந்தித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் கோரிக்கை மனு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பங்களுக்கும் ஆந்திரா மாநில அரசு தலா ரூ25 லட்சம் வழங்க வேண்டும் என்று இக்கூட்டம் கோரிக்கை விடுக்கிறது
- செம்மரங்களை வெட்டியதாகக் கூறி ஆந்திரா சிறைகளில் இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை உடனே விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக மேற்கோள்ள வேண்டும்; 400க்கும் மேற்பட்ட அப்பாவிகள் முகாம்களில் அடைக்கப்பட்டு கொடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை மீட்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் கடந்த காலங்களில் ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையால் 9 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படுகொலைகளுக்கும் உரிய நீதி கிடைக்கவும் தமிழக அரசு விரைவான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. 
- தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கும் ஆந்திரா அரசுக்கும் தமிழக அரசு உரிய அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
- ஆந்திராவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு தமிழக அரசு கருணையுடன் அரசுப் பணி வழங்கிட வேண்டும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
- ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது முதல் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், திராவிடர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வழக்கறிஞர்கள், படைப்பாளிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அத்துடன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக தமிழர் என்ற ஒற்றை குடையின் கீழ் ஏப்ரல் 28-ந் தேதியன்று சென்னையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று நீதிகோரும் நமது குரலை மத்திய அரசுக்கும் ஆந்திரா அரசுக்கும் தமிழக அரசுக்கும் உரத்துச் சொல்லுவோம்! ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஏப்ரல் 28-ந் தேதியன்று திரள்வோம்! எனவும் இக்கூட்டம் அன்புடன் அழைக்கிறது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக