வெள்ளி, 17 ஏப்ரல், 2015

2ஜி: நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கத் தயாரா? பி.சி.சாக்கோவுக்கு ஆர்.ராசா கேள்வி!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து வெளியிடும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், ஜேபிசி (நாடாளுமன்ற கூட்டுக் குழு) முன்னாள் தலைவருமான பி.சி. சாக்கோ அது குறித்து நீதிமன்ற சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கத் தயாரா? என்று மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கின் இறுதி வாதம் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது. அப்போது, 2007-இல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா தவறாக வழிநடத்தியதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டி வாதிடப்பட்டது. இதே கருத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி. சாக்கோ தனது கட்சியின் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக ராசா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றத்துக்கு உள்ளே நடந்த நிகழ்வை செய்தியாக வெளியிடுவது ஊடகங்களின் உரிமை.
ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை பற்றி ஜேபிசி தலைவராக இருந்த சாக்கோ இப்போது விமர்சித்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.
ஜேபிசி முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க அனுமதிக்குமாறு சாக்கோவுக்கு நான் பலமுறை கடிதம் அனுப்பினேன். அக்குழுவில் இடம் பெற்ற பல்வேறு கட்சிகளும் எனது கோரிக்கையை ஆதரித்தன. ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான உண்மைகளை விளக்கி நான் அனுப்பிய 100 பக்க கடிதத்தை தனது இறுதி அறிக்கையில் சேர்ப்பதாக அப்போதைய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலுவிடம் சாக்கோ உறுதியளித்தார்.
அவ்வாறு செயல்படாமல், எனது கடிதத்தை தனது அறிக்கையில் சேர்க்கத் துணிவில்லாத சாக்கோவின் செயலை "கோழைத்தனமான நடவடிக்கை' எனக் கூறி, அப்போது மக்களவைத் தலைவராக இருந்த மீரா குமாருக்கு 2013, நவம்பர் 6-இல் கடிதம் அனுப்பினேன்.
அப்போதெல்லாம் நியாயமாக நடந்து கொள்ளாமல் செயல்பட்ட சாக்கோ, இப்போது நீதிமன்றத்துக்கு உள்ளே நடைபெறும் நிகழ்வை விமர்சித்து ஊடகங்களையும், பொதுமக்களையும் தவறாக வழிநடத்த முயல்கிறார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி வெளியில் இருந்து கொண்டு கருத்து வெளியிடுவதற்குப் பதில், நீதிமன்றத்துக்கு வந்து அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜராகி தனது கருத்தை சாக்கோ வெளியிடுவதே சரியாக இருக்கும். அதற்கு அவர் தயாரா? அவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம் அளித்தால் அதை நான் வரவேற்கிறேன்' என்றார் ராஜா dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக