புதன், 15 ஏப்ரல், 2015

அமெரிக்கா: சாமியார் அண்ணாமலைக்கு 27 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இந்து கோவிலில் சாமியாராக இருந்தவர் 'அண்ணா மலை அண்ணாமலை’(49). சுவாமி ஸ்ரீ செல்வம் சித்தர் என்றும் அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வந்த இவர், கோவிலுக்கு கடவுளை தரிசிக்கவும், பூஜை தொடர்பாகவும் வரும் பக்தர்களின் கடவுள் நம்பிக்கையை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவருக்கு நெருக்கமான பக்தர்கள், தேவையான பணத்தை வழங்க தங்களது கிரெடிட் கார்ட்டு நம்பரையும் கொடுத்து உள்ளனர். கோவிலுக்கு செலவு செய்வதாக பகதர்களிடம் பொய் சொன்ன அண்ணாமலை அதனை பலமுறை உபயோகித்து உள்ளார். இதனால், பக்தர்கள் தங்களது கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டும்போது சந்தேகமடைந்தனர். அப்போது, கிரெடிட் கார்டு செலவு குறித்து அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாமியார் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


கோவில் மூலமாகவும், கிரெடிட் கார்ட்டு மூலமாகவும் கிடைத்த பணம் அனைத்தையும் அண்ணாமலை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்திக் கொண்டு ஆடம்பரமான வீடுகள், நிலங்கள் மற்றும் பல சொகுசு கார்களை வாங்கிக் குவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள வங்கியிலும் இந்தப் பணத்தை சேமித்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் வரி மோசடி தொடர்பான இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி, சாமியார் அண்ணாமலையை குற்றவாளி என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக