வெள்ளி, 10 ஏப்ரல், 2015

ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு ! ஐகோர்ட் அதிரடி உத்தரவு! 20 தமிழர்களை கொன்ற....

20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திர ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில், கடந்த செவ்வாய்க்கிழமை செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் நடந்தது. செம்மர கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஆந்திர அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது போலி ‘என்கவுன்டர்‘ என்றும், 20 பேரையும் போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


இந்த நிலையில், மேற்கண்ட சம்பவம்  மனித உரிமை மீறல் என ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஆந்திர ஐகோர்ட், ஆந்திர போலீஸ் மீது ஏன் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பியது. மேலும்,  ஆந்திர டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இரு மாநில பிரச்சினையில் உள்ளூர் போலீசார் விசாரிக்க  முடியாது என்றும், இந்த சம்பவத்தில் கொலை வழக்கு பதிவு செய்வதே நியாயம் வழங்குவதாக இருக்கும் என்றும் 302 -வது பிரிவின் கீழ் ஆந்திர போலீஸ் மீது அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு  கொலை வழக்கு பதிவு செய்ய ஆணையும் பிறப்பித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக