புதன், 8 ஏப்ரல், 2015

ராசா ஆவேசம் :2ஜி ஸ்பெக்ட்ரம் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு எதுவும் தெரியவில்லை

சேலம்: '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த புகாரில், சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு நான் தெரிவித்த கருத்துகள் எதுவுமே தெரியவில்லை' என, சேலத்தில் நேற்று நடந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், மாஜி மத்திய அமைச்சர் ராசா ஆவேசமாக பேசினார்.
சேலம் மாநகர் மத்திய மாவட்டம் சார்பில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாஜி மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் ஆகி விட்ட நிலையில், என் மீதான புகாரை சி.பி.ஐ., இன்னும் நிரூபிக்கவில்லை. விசாரணைக்காக சி.பி.ஐ., என்னை அழைத்துச் சென்ற நிலையில், எனது மனைவியின் பெயரில் வெளிநாட்டில், 3,000 கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் பத்திரிகைக்கு தவறான தகவலை பரப்பினர். ஆனால், சி.பி.ஐ.,யின் விசாரணைக்காவல் முடிந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், எனது மனைவியின் பெயரில் பணம் பதுக்கி இருந்தால், எவ்வித வழக்கு விசாரணை இன்றி, வாழ்நாள் முழுவதும் சிறை செல்ல தயார் என நீதிபதி முன் தெரிவித்தேன்.
அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் பணம் பதுக்கல் குறித்த தகவலை உறுதி செய்யவில்லை. பத்திரிகைகள் 'ராசாவிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி' என பல்வேறு தலைப்புகளில் செய்திகளை வெளியிட்டனர். சி.பி.ஐ., அதிகாரிகள் என் மீது தவறான கருத்துகளை பத்திரிகைகளின் வாயிலாக பரப்பினர்.

இன்றைய நிலையில், சாதாரண கடை கோடி மனிதனும், இணையதளம், பேஸ்புக், வாட்ஸ் அப் என நவீன முறையை அனுபவிப்பதற்கு, தி.மு.க., தான் காரணம். அந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததில் நான் பெருமை கொள்கிறேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு பதில் அளிக்க தெரியவில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து என கருத்துக்களை பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளிக்கும். அப்போது, இதில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். கருணாநிதியின் மகன் என்பதால், கட்சியில் ஸ்டாலின் உயர் பதவிக்கு வரவில்லை. கட்சிக்கு அவர் ஆற்றிய பணிகள், தியாகங்கள், கொள்கை மீது கொண்ட உறுதியால், இந்த நிலைக்கு வந்துள்ளார். அவர் முதல்வர் பதவிக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக