செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நேபாள பூகம்ப பலி 10000-ம் ஆக உயரும் - உலக நாடுகளுக்கு பிரதமர் கொய்ராலா கோரிக்கை

நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 10000-ம் ஆக உயரும் என அந்நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கொய்ராலா, உலக நாடுகளை குடில்கள் மற்றும் மருத்துவ உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். போர்க்கால அடிப்படையில் அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள அவர், இது சவாலான தருணம். நாட்டுக்கு சிக்கலான நேரம் என்று கூறியுள்ளார். மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து வெட்டவெளியில் உறங்கும் நிலையில், மழை பெய்து அவர்களின் உறக்கத்தை கெடுக்கின்றது. அதுமட்டுமல்லாமல் பூகம்பத்தால் படுகாயமடைந்த 7000 பேருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையும் சவாலானதாக உள்ளது. எனவே உலக நாடுகள் டெண்ட்(குடில்) அமைப்பதற்கான பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


1934 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8500 பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 10000-ம் ஆக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இமயமலை நாடான நேபாளம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெளிநாட்டில் இருந்த கொய்ராலா, ஞாயிற்றுக்கிழமையன்று நாடு திரும்பினார். அதன் பின் மீட்பு பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக இன்று காலை நிலவரப்படி பூகம்பத்தால் 4349 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக