வியாழன், 12 மார்ச், 2015

Googleக்கு எதிராக மறக்கப்படுவதற்கான உரிமை தீர்ப்பு ! எது சரி, எது தவறு

டிஜிட்டல் யுகத்தில் வாழ்வதன் விளைவுகள் என்ன வென்றால், உலகின் ஒரு பகுதியில் வழங்கப்படும் தீர்ப்பு பிற பகுதிகளிலும் எதிரொலிக்கிறது. ‘மறக்கப்படுவதற்கான உரிமை’ தொடர்பான வழக்கில், கூகுளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ஏராளமானோர் தங்களைப் பற்றிய குறிப்புகளை நீக்கவோ திருத்தவோ கோரி விண்ணப் பங்களை அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் வாசகர்கள், மக்கள் தொடர்பு முகமைகள், பெருநிறுவனங்கள், வழக்குகளை எதிர் நோக்கியுள்ளோர் என்று பலதரப்பட்டவர்களும் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையின் தரவுக் காப்பகத்தில் இருக்கும் (Archives) தங்களைக் குறித்த செய்திகளை நீக்கக் கோரி மின்னஞ்சல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பழைய தகவல்களை மட்டுமல்ல, புதிய செய்திகளையும் நீக்கக் கோருகிறார்கள். சமீபத்தில் நிலக்கரி வயல்களில் கரியை அகழ்ந்தெடுக்கும் உரிமையை உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் இழந்த நிறுவனங்கள்கூடக் கோருகின்றன. ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், சமீபத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் இறந்திருந்தும், அந்த விபத்து தொடர்பான செய்தியில் தங்கள் நிறுவனத்தின் பெயரை நீக்கிவிடுமாறு கேட்டிருக்கிறார். ஒரு எழுத்தாளர், தன்னுடைய வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஆகிவிட்டதால் நீதிமன்ற விசாரணை பற்றிய தகவல்களை அகற்றிவிடுமாறு விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரு செய்திக்கான இணையதள முகவரியை நீக்கிவிடுமாறு, டெல்லி நகர எழுத்தாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். தேர்தல் காலத்தில் ஒரு அரசியல் கட்சி, தனது எதிரிகளைப் பழிவாங்குவதற்காகப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பின் பின்னணி என்ன?
முதலில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். 1998-ல் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த காஸ்டேஹா கொன்சாலேஸ் நிதிச் சிக்கலில் ஆழ்ந்தார். அவருடைய வீட்டுக் கடன் கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிக்கை ‘லா வான்குவார்டியா’ என்ற ஸ்பானிஷ் நாளிதழில் பிரசுரமானது. அந்த வீட்டை வேறு யாராவது வாங்கத் தயாராக இருக்கிறார்களா என்று அறிவதற்காகத் தரப்பட்ட அந்த விளம்பரம் காலாவதியாகிவிட்டதால், அதை இணையதளத்தின் விளம்பரப் பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் அந்தப் பத்திரிகைக்கு எழுதினார். பத்திரிகை அவருடைய கோரிக்கையை ஏற்காததால், ஸ்பானிய தரவுப் பாதுகாப்பு முகமையிடம் (ஏ.இ.பி.டி.) புகார் செய்தார். அந்த அறிவிக்கை சட்டப்படி வெளியிடப்பட்டிருப்பதால் காஸ்டேஹா கொன்சாலேஸின் கோரிக்கையை அது நிராகரித்தது. அதே சமயம், கூகுள் நிறுவனத்தின் ஸ்பெயின் பிரிவும் கூகுள் இன்கார்பரேடட் நிறுவனமும் அதை நீக்கிவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. விவகாரம் ஸ்பெயினின் தேசிய நீதிமன்றத்திடம் விசாரணைக்குச் சென்றது. அது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அதை அனுப்பியது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள்
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மூன்று முக்கிய அம்சங் களைக் கருத்தில் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் எந்தப் பிரதேசம் வரையில் செல்லுபடியாகும், கூகுள் தேடுபொறி தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு விதிகள் எவையெவற்றுக்குப் பொருந்தும், ‘மறக்கப்படுவதற்கான உரிமை’ எத்தகையது என்பதே அந்த மூன்று முக்கிய அம்சங்கள்.
தரவுகளைத் தயாரிக்கும் ‘சர்வர்’ ஐரோப்பாவுக்கு வெளியே இருந்தாலும், அவர்களுடைய கிளையோ, சார்பு நிறுவனங்களோ ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாட்டில் இருந்தால், ஐரோப்பிய ஒன்றிய விதிகள் செல்லுபடியாகும். தேடுபொறிகள் தனிப்பட்டவர்களின் தகவல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், தங்களுடைய நிறுவனம் வெறும் தேடுபொறிதான் என்று கூறி ஐரோப்பியச் சட்டத்தின் வரம்பிலிருந்து கூகுள் நிறுவனம் தப்பிவிட முடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுகள் பாதுகாப்புச் சட்டமும், ‘மறக்கப்படுவதற்கான உரிமையும்’ கண்டிப்பாகப் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது. மறக்கப்படுவதற்கான உரிமை தனிநபர்களுக்கு உண்டு, குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் தங்களைப் பற்றிய தரவுகளை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்ள முடியும். அதே வேளையில், அது அவர்களுடைய முழுமையான உரிமை அல்ல. ஊடகங்களின் கருத்துச் சுதந்திரம், இதர அடிப்படை உரிமைகளுடனும் பொருத்திப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பை கூகுள் நிறுவனம் எதிர்கொண்ட விதம் தார்மிகரீதியிலும், சித்தாந்தரீதியிலும் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. சட்டம், தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜூலியா பாவல்ஸும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த டிஜிட்டல் உரிமைகளுக்கான அமைப்பைச் சேர்ந்த என்ரிகோ சபாரோவும் மறக்கப்படுவதற்கான உரிமையை கூகுள் எப்படித் தீர்மானிக்கிறது என்று சமீபத்தில் ‘தி கார்டியன்’ பத்திரிகையில் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள். மறப்பதும் நினைவில் வைத்திருப்பதும் மிகவும் சிக்கலான, குழப்பமான சிந்தனை முறைகள். நம்முடைய மனம் தகவல்களைப் பெற்றுப் பதிவுசெய்கிறது, தனக்கு வசதியான வகையில் நினைவில் பதிவேற்றுகிறது, உலகம் முழுக்க உள்ள இணையதளங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் இது இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள் செர்கி பிரின், லாரி பேஜ் அளித்த மூல ஆய்வு அறிக்கையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தொடர்பில்லாத, கட்டுப்படுத்த முடியாத ஆவணங்களைத் தேடுபொறி எடுத்துக்கொண்டு அதற்கு நிரந்தரத் தன்மையையும் சூழலுக்குப் பொருத்தமில்லாமல் புதுமைத்தன்மையையும் தந்துவிடுகிறது.
அந்தக் கட்டுரையின் மையக் கரு என்னவென்றால், தேடுபொறி தகவல்களைக் கைச்சரக்கு சேர்த்து பதிவு செய்யக் கூடாது, தகவல்களை அழித்துவிடவும் கூடாது. இந்த அடிப்படையில் ‘தி இந்து’வும் தனக்கு வரும் கோரிக்கைகளைப் பார்க்கிறது.
பத்திரிகையில் வெளியான செய்திகள், தரவுகள் அனைத்தும் துல்லியமாகவும் பிழை இல்லாமலும் இருப்பது உறுதிசெய்யப்படுகிறது. தரவுக் காப்பகத்தில் இருப்பவை வெவ்வேறு காலகட்டத்தில் பதிவான செய்திகள், தரவுகளைக் கொண்டவை. செய்திகளில் தவறு இல்லை, அல்லது சூழலை மோசமாக்கவில்லை என்றால், அதை மாற்ற வேண்டியதோ, நீக்க வேண்டியதோ அவசியம் இல்லை. தேடுபொறி தரும் தகவல்களைப் பற்றியதுதான் இந்தக் கோரிக்கை என்பதால், பத்திரிகையிடம் முறையிடுவதைவிட அவற்றிடம் முறையிடுவதே சரி. ஒரு செய்தியைப் பதிவுசெய்த பிறகு, தேவைக்கேற்ப அந்தச் செய்தி தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். தான் வெளியிடும் செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தி இந்து’ மாற்றுவதில்லை என்பதே அதன் தனித்துவமான பாரம்பரியமாகும்.
- ஏ.எஸ். பன்னீர்செல்வன், எழுத்தாளர், பத்திரிகையாளர், வாசகர் பகுதிக்கான ஆசிரியர், ‘தி இந்து’ (ஆங்கிலம்), தொடர்புக்கு: readerseditor@thehindu.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக