வெள்ளி, 6 மார்ச், 2015

அந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்! Daughter of India ஏன் தடை செய்தார்கள்?

இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படமான  ‘இந்தியாவின் மகள்’ பெண்கள் தினத்தன்று வெளியிடுவதாக இருந்தது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் பேட்டி வெளிவந்த பிறகு பெரிதும் காயப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட இந்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடை விதிக்கப்படும் என்றார். பிபிசி நிறுவனம்  அசராமல் அந்த ஆவணப்படத்தை youtube தளத்தில் நான்கு நாட்கள் முன்னரே வெளி யிட்டு விட்டது. முழுவதும் அப்படத்தைப் பார்த்து முடித்த அனுபவத்தைப் பகிர்கிறேன். படம் டிசம்பர் 16, 2012-ல் அந்தக் கொடிய இரவில் இருந்தே துவங்குகிறது. ஜோதி சிங் என்கிற தங்களுடைய மகளைப் பற்றி அவளின் பெற்றோர் ஆஷா சிங், பத்ரி சிங் பேசுகிறார்கள். பெண் குழந்தை பிறந்த பொழுது ஆண் குழந்தை பிறந்ததைப் போலக் கொண்டாடி இனிப்புகள் தந்த நினைவில் பெற்றோர்கள் மூழ்குகிறார்கள்.


என் செல்ல மகள் என் மூடிய கண்களைத் திறப்பாள்.”

நிலவு எப்படி வானில் வந்தது என்று கேள்விகள் கேட்பாள்.”

மகளை நீதிபதி ஆகு என்று சொன்ன தந்தையிடம், ”அதற்கும் மேலானது  டாக்டர் தொழில். ஆகவே, நான் டாக்டர் ஆகுறேன். அதைவிட மேலே வேற ஒண்ணுமில்ல அப்பா!” என்று சொன்ன மகளுக்காகப் பரம்பரைச் சொத்தை விற்று படிக்க வைத்திருக்கிறார். அப்படியும் பணம் போதாமல் இரவு பத்து மணி துவங்கி அதிகாலை நான்கு மணிவரை கால் சென்டரில் வேலை பார்த்து தன்னுடைய மருத்துவக் கனவை எட்டியிருக்கிறார் ஜோதி சிங்.
“பெண்ணால் குறிப்பாக என்னால் எதுவும் முடியும்” என்று எங்களுக்கு நம்பிக்கை தந்து மருத்துவப் படிப் பின் இறுதி ஆண்டை முடித்திருந்தாள் என்னுடைய பெண் என்று அம்மா ஆஷா சொல்லி முடிக்கையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒருவனான முகேஷ் சிங், “பெண்ணும் ஆணும் சம மில்லை.. அவர்கள் வீட்டு வேலை செய்வதில் மட்டுமே ஈடுபட வேண்டும். டிஸ்கொதேவுக்குப் போவது, அரைகுறையாக ஆடை அணிந்து தவறுகள் செய்வது என்று இந்தக்காலப் பெண்கள் படுமோசம். 20 சதவிகித பெண்களே நல்லவர்கள்” என்கிறான்.

குற்றவாளிகளின் பின்னணி காட்டப்படுகிறது. ஆவணப்படத்தில் பேசும் முகேஷ் சிங் பேருந்து ஓட்டுனராக இருக்கிறான். அவனின் அண்ணன் ராம் சிங் அடிதடிகளில் ஆர்வமுள்ளவன். வினய் போதை ஊசிகள் போட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வமிக்கவன்.

பெண்களைத் துரத்தி வம்பு செய்து அதில் கிளர்ச்சி காண்பவன். பவன் பழக்கடை வைத்திருந்தவன். அக்ஷய் தாக்கூர் டீ வாங்கித் தருவது முதலிய எடுபிடி வேலைகள் செய்துகொண்டிருப்பவன். அந்த இறுதிக் குற்றவாளியான பதினெட்டு வயதைத் தொடாத சிறுவனின் அடையாளங்கள் ஆவணப்படத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ரவிதாஸ் காலனியில் இவர்கள் இணைந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அன்றைய தினம் அக்ஷயும், ராம் சிங்கும் மதுகுடித்து விட்டு கடும் போதையில் வந்திருக்கிறார்கள். வினயும், பவனும் பார்ட்டி கொண்டாடலாம், நிறையப் பணம் இருக்கிறது என்று அழைக்கவே, பலான சங்கதிகள் கிடைக்கும் GB சாலை நோக்கி கிளம்பி இருக்கிறார்கள்.

“அன்றோடு என் மகளுக்குத் தேர்வுகள் முடிந்திருந்தன. அவளின் மருத்துவராகும் கனவு நிஜமாகச் சில மாதங்களே இருந்தன. ஆறுமாத பயிற்சி மட்டும் முடித்தால் போதும் என்கிற நிலையில் அவள் நண்பரோடு படத்துக்குப் போய்விட்டு வருவதாகச் சொன்னாள். அடுத்த ஆறு மாதகாலம் எதற்கும் நேரமிருக்காது என்பதால் அவள் எங்களிடம் அனுமதி கேட்டாள். நாங்கள் அனுப்பி வைத்தோம். வெகு சீக்கிரமே அவள் மருத்துவராகி விடுவாள் என்று நம்பிக்கொண்டு இருந்தோம். ஆண்டவனுக்கு அது பொறுக்கவில்லை.”  என்று குமுறி அழுகிறார் நிர்பயாவின் தாய்.
குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் “பெண் ரத்தினம் போன்றவள். அவளைக் கைக்குள் பொதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவளை இப்படித் தெருவில் போட்டால் நாய்க் கவ்விக்கொண்டுதான் போகும். ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இரவில் என் வீட்டுப் பெண்களை வெளியே தனியாக அனுப்பிவைக்க மாட்டேன். குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்த வெளி நபர்களுடன் சுற்றுகிற பெண்கள் நல்லவர்களே இல்லை. இவர்கள் சேர்ந்து பழகினாலே அது செக்ஸ்க்குதான். நம்முடைய கலாசாரம் சிறந்த கலாசாரம். இதில் பெண்களுக்கு இடமில்லை” -இப்படிச் சலனமில்லாமல் சொல்கிறார்.

குற்றவாளி முகேஷ் சிங், “அன்றைய இரவு அவர்கள் எங்கள் பேருந்தில் ஏறினார்கள். என் சகாக்கள் அந்தப் பெண்ணைத் தங்கள் இச்சைக்கு ஆட்படுத்தினார்கள். “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்கிற அவலக்குரலை தாண்டியும் இவர்கள் தொடர்ந்து காரியத்தில் குறியாக இருந்தார்கள். அந்தச் சிறுவன், ராம் சிங், அக்ஷய், பவன் மாறி மாறிப் புணர்ந்தார்கள். அதற்குப் பிறகு எதையோ கையைவிட்டு உருவினார்கள். பார்த்தால் அது அவளின் குடல். அப்படியே அவளை வெளியே வீசிவிட்டோம். அவர்களின் ஜாக்கெட், வாட்ச் ஆகியவற்றை என் சகாக்கள் அணிந்து கொண்டார்கள். ஆபத்து எதுவும் ஏற்படும் என்று எண்ணவில்லை.”

இந்தியத் தலைநகரில், எட்டு மணிவாக்கில் ஓடும் பேருந்தில் நடந்த இந்தக் கொடுமையைப் பற்றிப் பேசும் லீலா சேத், “இந்தச்சம்பவத்தில் மிகவும் கொடூரமான விஷயம். இரும்புக்கம்பியை அவளின் உடம்பிற்குள் இறக்குகிற அளவுக்கு எப்படி இவர்கள் செயல்பட்டார்கள் என்பதுதான். பெண்ணுக்கு அதிகாரத்தில் பங்கில்லை என்கிற பார்வையின் ஒரு வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள்.” என்கிறார்.

“எல்லா இடங்களிலும் நடக்கிற ஒன்றுதான் இது. பணக்காரர்கள் பணத்தைக் கொண்டு சாதிக்கிறார்கள். எங்களிடம் தைரியம் இருந்தது. முடித்துவிடலாம் என்று எண்ணினோம். அந்த இரவில் அவர்களைக் கண்டோம். “ஏன் இந்த நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாய்?” என்று கேட்டோம். அந்தப் பையன் எங்களை அறைந்தான். அதற்குப் பிறகே இப்படிச் செய்ய ஆரம்பித்தார்கள். அவனைக் கடுமையாக நாங்கள் தாக்கினோம். அந்தப் பையன் பேருந்தில் ஒரு இடுக்கில் ஒளிந்து கொண்டான்.

இந்தப் பெண் எங்களை எதிர்க்காமல் போயிருந்தால் இப்படி ஆகியிருக்காது. வன்புணர்வு நடக்கிற பொழுது ஒத்துழைக்காமல் போனதால்தான் இப்படி ஆனது. அவள் எதிர்க்காமல் இருந்திருந்தால் அப்படித் தாக்கியி ருக்க மாட்டோம், அந்தப் பையனை மட்டும் அடித்திருப்போம். இந்தத் தூக்கு தண்டனையால் இன்னமும் பெண்கள் ஆபத்துக்குத்தான் உள்ளாகப் போகிறார்கள். முன்பெல்லாம் வன்புணர்வு நடந்தால் அப்படியே மிரட்டி மட்டும் அனுப்புவார்கள். இனிமேல் காட்டிக்கொடுத்தால் தூக்கு என்று கதையை முடித்து விடுவார்கள்.” என்று சலனமில்லாமல் சொல்கிறான் மகேஷ் சிங்.


ராஜ்குமார் எனும் ரோந்து அதிகாரி பேருந்தில் இருந்து எறியப்பட்ட இருவரையும் ஒரு பெட்ஷீட்டை கிழித்து உடல் முழுக்கச் சுற்றியதை சொல்கையில், ”ஒரு முப்பதைந்து பேர்  வேடிக்கை பார்த்தார்கள். ஒருவரும் இருவரையும் காப்பாற்ற கைகொடுக்க வரவேயில்லை.” என்று விரக்தியோடு சொல்கிறார்.

உடலெங்கும் ரத்தம் வழிய, உறுப்புகள் கொடூரமாகச் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட மகளின் நிலையறிந்து அலறித்துடித்துப் பெற்றோர் ஓடினார்கள். “இருபது வருடத்தில் இப்படியொரு கொடூரமான தாக்குதலை பார்த்ததில்லை. பிழைப்பது கடினம்..” என்று சர்ஜன் சொன்னார். “என் மகளின் கரத்தை பற்றிக்கொண்டேன். என்னைப் பார்த்து அவள் கதறி அழுதாள். அவளின் கைகளைப் பற்றிக்கொண்டேன். “நாங்க இருக்கோம்மா..”என்று சொன்னேன் நான்“-ஆஷாவின் கண்ணில் கண்ணீர் கோடிடுகிறது.

குற்றவாளிகளின் பற்களின் தடத்தை முக்கிய ஆதாரமாக இந்த வழக்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடம்பின் அத்தனை இடத்திலும் பற்களைப் பதித்துப் பாதகம் புரிந்திருக்கிறார்கள் என்பதைத் தடவியலின் மூலம் நிரூபித்தது போலீஸ். டெல்லி முழுக்கப் போராட்டங்கள் வெடித்தன. மாணவர் அமைப்புகள் திரண்டன. அதுவரை களத்துக்கு வராத இளைஞர்கள், எந்த அரசியல் தலைவரின் அழைப்பில்லாமல், சித்தாந்தத்துக்காகத் திரளாமல் பெண்களின் பாதுகாப்புக்காகத் திரண்டார்கள்.

காவல் துறை பெண்களின் மீது தாக்குதல்கள் நடத்தியது. அமைதிப் போராட்டத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. ஒரு மாதகாலம் வரை தொடர்ந்து போராட்டம் கட்டுக்கடங்காமல் தொடர்ந்தது. “மனோரமா, அஷியா, நிலோபர், சோனி சோரி என்று எல்லாருக்கும் நீதி வேண்டும்.” என்று முழக்கங்கள் எழும் காட்சிகள் அனைத்தும் திரையில் காட்டுப்படுகிறது. பல நாளாக அடக்கி வைத்திருந்த கோபம் அணை உடைவதை போலப் பீறிட்டது புலப்படுகிறது.
மற்ற வழக்குகளுக்குத் தொன்னூறு நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை என்பதற்குப் பதிலாக இந்த வழக்கில் பதினேழு நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததைப் பெருமிதத்தோடு குறிப்பிடும் வழக்கை விசாரணை செய்த  காவல்துறை அதிகாரி, “டெல்லி பெண்களுக்குப் பாதுகாப்பான நகர் தான்!” என்று குறிப் பிடுகையில் அவர் குரலில் சுரத்தே இல்லை.

“வீட்டில் பெண்ணுக்கு கால் கிளாஸ் பாலும், ஆணுக்கு ஒரு டம்ளர் பால் கொடுப்பதில் இருந்தே, “நீ அவளை விட உசத்தி!” என்கிற எண்ணத்தை விதைக்க ஆரம்பித்து விடுகிறோம். இவற்றை எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்கிறார்  டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் .

“பெண்கள் கடந்த பதினைந்து வருடங்களில், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தில் தங்கள் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்தார்கள். பொருளாதாரச் சுதந்திரம் பெற்று வெளியே நடமாடும் பெண்கள் தவறானவர்கள் என்று ஆணாதிக்க மனம் எண்ணுகிறது. பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்கள், வீட்டினில் நடக்கும் வன்முறைகள், காணாமல் போகும் பெண்கள், கருவிலேயே கலைக்கப்படும் சிசுக்கள் என்று பல் வேறு அளவுகோல்கள் பெண்கள் நிலை இந்தியாவில் மோசமாக இருப்பதைச் சுட்டுகிறது. மகாராஷ்ட்ரா வில் கொல்லப்பட்ட 10,000 கருக்களில் 9,999 பெண் சிசுக்கள் என்பது ஒரு சான்று.” என்று ஆக்ஸ்போர்ட் வரலாற்று பேராசிரியர் மரியா மிஷ்ரா அதிரவைக்கிறார்.

பத்ரி சிங் தன்னுடைய மகளின் இறுதிக்கணத்தை விவரிக்கிறார், “என் மீது படுத்து உறங்க வைத்த, விரல் பிடித்து நடைப் பழகச் செய்த மகளைக் கண் முன்னாள் சாகக்காண்பதும், அவளுக்கு என் கையாலேயே தீயிட்டதும் கொடுமை. மிகக்கொடுமை. இன்னமும் அதைக் கடந்துவிட முடியவில்லை. ” என்று சொல்கையில் பெரிய வெறுமை அவரிடம் புலப்படுகிறது.

முகேஷ் சிங் இளம் வயதில் பள்ளி பக்கம் போனதே இல்லை. தெருக்களில் சுற்றுவதை விரும்பிய அவனுக்கு, எலெக்ட்ரிஷியனாக இருந்த மூத்த அண்ணன் மின்சார ஷாக்குகள் கொடுத்துள்ளார்.

பெண்களும், ஆண்களும் நெருங்கி வாழும் கூடு போன்ற வீடுகள் கொண்ட ரவிதாஸ் காலனி போன்ற பகுதிகளில் பெண்களை ஆண்கள் போட்டு அடிப்பது, பாலியல் தொழில், வன்முறை ஆகியவற்றை வெகு இயல்பாகக் கண் முன்னால் காண்பது, இந்தச் செயல்கள் இயல்பான ஒன்று என்கிற எண்ணத்தை இவர்களிடம் விதைக்கிறது என்கிறது ஆவணப்படம்.
வன்புணர்வு செய்துவிட்டுச் சிறையில் இருக்கும் நபர்களுக்கான உளவியல் ஆலோசகர் சொல்வது இன் னமும் பகீரானது. “இவர்களை ராட்சசர்கள் என்று சொல்ல மாட்டேன். சமூகத்துக்கு இவர்களை உருவாக் குவதில் பங்குள்ளது. தவறான சமூக மதிப்பீடுகள் இவர்களுக்குள் வெகுகாலமாக விதைக்கப்படுகிறது. இருநூறுக்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு செய்தவன் எத்தனை வழக்கில் தண்டிக்கப்பட்டு உள்ளான் என்று எண்ணுகிறீர்கள்? வெறும் 12. இப்படி நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறைகளை, வன்புணர்வு களை நிகழ்த்திவிட்டுச் சிக்காமல் தொடர்ந்து இவற்றில் ஈடுபடுகிறார்கள். தவறு செய்துவிட்டு தப்பித்து விடலாம் என்று செயல்படுகிறார்கள்.” 

முகேஷ் சிங்கின் வக்கீல் எம்.எல். சர்மா, “ 250-க்கும் மேற்பட்ட தற்போதைய எம்.பிக்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு வழக்குகள் உள்ளன. நீங்கள் சீர்த்திருத்தத்தை உங்கள் கழுத்தில் இருந்து அல்லவா ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் மீது இத்தனை வேகமாகக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதில்லை. விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதில்லை. என் சகோதரியோ, மகளோ திருமணத்துக்கு முன்பு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் என் குடும்பத்தினர் அத்தனை பேரின் முன்னிலையிலும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருப்பேன்.” என்று சலனமே இல்லாமல் சொல்கிறார்.

சந்தீப் கோவில் எனும் உளவியல் நிபுணர், “இப்படி வேகவேகமாகக் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்பது சரியான அணுகுமுறை இல்லை. பிற நாடுகளைப் போலக் கம்பத்தில் கட்டி கல் எறிதல், தலையை வெட்டுவது, கையைத் துண்டிப்பது என்றெல்லாம் செயல்படுவது பண்பட்ட சமூகத்தில் செய்யக்கூடியது அல்ல. இந்தியாவின் நெடிய கலாசாரத்தில் சகிப்புத்தன்மைக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படி உணர்ச்சிகளின் வேகத்தில் தண்டனைகள் வழங்க வேண்டும் என்று குரல் கொடுப்பது தீர்வாகாது.”என்கிறார்.

முகேஷ் சிங், “ஒருவன் புணர்ந்த பெண்ணின் கண்ணை நோண்டி எடுத்தான். பெண்கள் மீது ஆசிட் வீச்சு அடிக்கடி நடக்கிறது. எரித்துக்கொல்கிறார்கள். அவர்கள் செய்தது தவறில்லை என்றால், நாங்கள் செய்ததும் தவறில்லை” என்று சொல்ல, அவனது மனைவியோ, “ என் கணவர் தவறு செய்திருக்க மாட்டார். அவர் இறந்தால் என் பிள்ளையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நானும் இறந்து விடுவேன்.” என்கிறார்.

இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட சிறுவனின் அப்பா மனநலம் பாதிக்கப்பட்டவர். ஒரே ஒரு கொட்டகைதான் வீடு. பதினோரு வயதில் வீட்டைவிட்டு ஓடிப் போயிருக்கிறான். முன்னூறும், நானூறும் தட்டுக்களைக் கழுவி வீட்டுக்கு அனுப்பிப் பசியாற்றி இருக்கிறான். மூன்று வருடங்கள் ஆள் எங்கே என்று தெரியாமல் போய் மகன் இறந்துவிட்டான் என்று தாய் எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இந்தக் குற்றத்தில் அவனும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்த பொழுதுதான் மகன் உயிரோடு இருப்பதே
அவனின் அம்மாவுக்குத் தெரியும்.

“உனக்கு நிறையத் துன்பங்கள் தந்துவிட்டேன் அம்மா. மன்னித்துவிடு.” என்று அழுதபடி மூச்சடங்கி இறந்து போன ஜோதியின் நினைவுகளை அவளின் அம்மா சொல்கிறார். ஜோதி என்றால் வெளிச்சம். இந்த இந்தியாவின் மகளின் மரணம் இருட்டில் இருந்து நாம் வெளிவர வேண்டிய கணத்தைக் காண்பித்துள்ளது. ஆண்களும், பெண்களும் பெண்களுக்கு  உரிமையும், விடுதலையும் தர வேண்டியதன் அவசியத்தை அவ ளின் மரணம் வலியுறுத்துகிறது.

விவாதங்களையும், பெண்ணைச் சமமாக மதித்தலையும், கற்பித்தலையும் ஒவ்வொருவரும் துவங்க வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு இந்தியாவின் மகள் வன்புணர்வுக்கு ஆளாகிறாள் என்கிற கொடிய நிஜத்தை எதிர்கொள்ள இந்த ஆவணப்படம் நம்மைத் தயார்படுத்துகிறது.
-சே.கிருஷ்ணன், லண்டன்  vikatan.com/news

2 கருத்துகள்:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் பிரதிபா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : வலைச்சரம் - நடத்திக்காட்டு

    பதிலளிநீக்கு