வெள்ளி, 20 மார்ச், 2015

மலேசியாவில் தமிழக கொத்தடிமைகள் ! களி . குடிக்க சாக்கடை நீர்: கதறவைத்த வெளிநாட்டு வேலை!

உன்னை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு தேவை, உனக்கு வேலை கொடுத்திருக்கிற குரூப் இந்த நாட்டில் ரொம்ப மோசமானவங்க, மலேசிய அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க, சொல்லுற வேலையை செய்யாமல் சம்பளம் வேணும், சாப்பாடு வேணும்னு பிரச்னை பண்றவங்களை யாருக்கும் தெரியாமல் கொன்னு புதைச்சிருவாங்க!' னு மிரட்டுனாரு. இப்படியே போய் கொண்டிருந்தது.
இதோ மலேசியாவுக்கு சென்று, சித்ரவதைபட்டு, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஊர் திரும்பியிருக்கும் சுரேஷ்குமாரின் கதையை கேளுங்கள்.
''மதுரை சிக்கந்தர் சாவடிதான் என்னோட ஊர். ஐ.டி.ஐ. படித்து, செல்போன் கம்பெனி ஒன்றில் டவர் மெக்கானிக் சூபர்வைசராக இருந்தேன். அப்போது எனக்கு திடீர்னு திருமணம் ஆனதால சொந்தக்காரங்களும், நண்பர்களும், 'இந்த வேலையில கிடைக்கிற சம்பளம் குடும்பம் நடத்த போதாது, வெளிநாட்டுக்கு போனா நல்லா சம்பாதிக்கலாம்' னு ஆளாளுக்கு ஆசையை உண்டு பண்ணினாங்க.
எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அண்ணாநகர்ல உள்ள அப்ரா டிராவல்ஸ், மலேசியாவுக்கு ஆள் அனுப்புறாங்க என்கிற தகவல் கிடைச்சது. உடனே அங்கே என்னோட சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு போனேன். அந்த டிராவல்ஸ் ஓனர் அப்துல் ஹக்கீம் என்பவர் என்னை செலக்ட் பண்ணி, மலேசியா எக்ஸ்போர்ட் கம்பெனியில பேக்கிங் செக்சன்ல சூபர்வசைர் வேலைன்னும், மாசம் முப்பத்தஞ்சாயிரம் சம்பளம், சாப்பாடு, தங்கறது எல்லாம் கம்பெனியே பார்த்துக்கும்னு சொன்னவர், இதுக்கு விசா எடுக்க இரண்டு லட்சம் தர வேண்டுமென்றும் சொன்னார்.


எனக்கும் ஆசை வந்திருச்சு. சாப்பாடு, தங்குற செலவு இல்லை, சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிடலாம்னு கனவு கண்டேன். ஒரு ரெண்டு மூனு வருஷம் வேலை பார்த்தால் போதும், அப்புறம் ஊரில் செட்டிலாகிவிடலாம்னு முடிவு செஞ்சேன். என் மனைவி நகைகள், நண்பர்களிடம், வட்டிக்காரர்களிடமும் கடன் வாங்கி ஏஜெண்டு அப்துல் ஹக்கிமிடம் கொடுத்தேன். உடனே விசா வந்தது. கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கொச்சியிலிருந்து அனுப்பி வைத்தார்கள்.

ஆனால், அங்கு இறங்கியவுடன்தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் வந்து சிக்கிவிட்டேன் என்பது தெரிந்தது. அங்கு அப்துல் ஹக்கீமின் ஏஜெண்ட் அழைத்து சென்று, டஞ்சனான மேன்ஷனில் தங்க வைத்தார். என் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டவர்கள் எனக்கு சாப்பாடு எதையும் தரவில்லை. வெளியிலும் செல்ல முடியாது, அப்படியே சென்றாலும் வாங்கி திங்க பணமும் கிடையாது. அந்த அறையில் படுக்க பாய் கூட கிடையாது. இப்படியே மூன்று நாட்கள் போனது.

அப்புறம் என்னை கோலாலம்பூர் தாண்டி ஒரு பண்ணையில் விட்டார் ஏஜெண்ட். அங்கு புல் வெட்ட, குழி தோண்ட என்று மாடு மாதிரியாக வேலை செய்ய சொன்னார்கள். 'பேக்கிங் கம்பெனி வேலைனு சொல்லி இப்படி தோட்ட வேலை செய்ய சொல்றீங்களே'னு கேட்டவுடன், அந்த ஏஜெண்டும் அங்குள்ள ஆட்களும் அடிக்க ஆரம்பித்தார்கள். என்னால் அழுவதைத் தவிர, ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களும் தமிழர்கள்தான். ஆனால், கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் இருந்தார்கள். என்னைப்போல ஆயிரக்கணக்கான பேர் அவர்களிடம் இதுபோல் கொத்தடிமையாக வந்து சிக்கியிருக்கிறார்கள். இவர்களிடம் அடி வாங்கி சாவதைவிட, சொல்கிற வேலையை செய்து ஊர் போகிற வழியை பார்ப்போமென்று கடுமையான அந்த வேலைகளை செய்தேன். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை. களி போன்ற சாப்பாடும் எப்போதாவதுதான் வரும். சாக்கடை நிறத்தில் தண்ணீர் வைத்திருப்பார்கள். வேறு வழியில்லை அதை குடித்துதான் உயிர் வாழ்ந்தேன்.

ஒருநாள் கிடைத்த வாய்ப்பில் ஏஜெண்ட் அப்துல் ஹக்கீமிடம், 'என்னை இப்படி செய்துவிட்டீர்களே... இது நியாயமா? என்னை எப்படியாவது ஊருக்கு அழைத்து செல்லுங்கள்!' என்று கெஞ்சினேன். அவரோ, 'உன்னை மாதிரி ஆட்கள்தான் எங்களுக்கு தேவை, உனக்கு வேலை கொடுத்திருக்கிற குரூப் இந்த நாட்டில் ரொம்ப மோசமானவங்க, மலேசிய அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்க, சொல்லுற வேலையை செய்யாமல் சம்பளம் வேணும், சாப்பாடு வேணும்னு பிரச்னை பண்றவங்களை யாருக்கும் தெரியாமல் கொன்னு புதைச்சிருவாங்க!' னு மிரட்டுனாரு. இப்படியே போய் கொண்டிருந்தது.

ஒருகட்டத்தில் என்னால் வேலை செய்ய முடியாமல் சுருண்டு படுத்து விட்டேன். அங்கே வந்த ஏஜெண்டு ஆட்கள் எப்போதும் என்னை அடி அடியென்று அடித்தார்கள். இப்போது கூட என் மர்ம உறுப்பில் வலி இருந்து கொண்டிருக்கிறது. ஒருநாள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அந்த பக்கமாக சென்ற மலேசிய நாட்டுக்காரிடம் செல்போன் வாங்கி வீட்டுக்கு தகவல் சொன்னேன். அதோடு அவர்கள் மதுரையிலிருந்து அப்துல் ஹக்கீமிடம் கேட்டிருக்கிறார்கள். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. அனுப்புறது மட்டும்தான் என் வேலை!' என்று அசால்டாக சொல்லியிருக்கிறார்.

பிறகு எங்களுக்கு வேலையே வேணாம்; நான் ஊருக்கு வந்தால் போதும் என்று கெஞ்சியிருக்கிறார்கள். அதற்கப்புறம் வருகின்ற செலவுக்கு ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு என்னை ஊருக்கு அனுப்பி வைத்தார். என்னால் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடிந்ததாலும், பணம் கொடுத்ததாலும் உயிருடன் வர முடிந்தது. இன்னும் ஆயிரக்கணக்கான பேர் மலேசியாவில் கொத்தடிமையாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். தமிழர்களை கொடுமைப்படுத்துவதும் தமிழர்கள்தான். சம்பளம் கேட்ட பலபேரை சாகடித்திருப்பதாக தைரியமாக சொல்கிறார்கள்.

ஊர் வந்ததும், 'இப்படி செய்து விட்டீர்களே , நான் கட்டிய பணத்தை திரும்ப கொடுங்கள்!' என்று அப்துல் ஹக்கீமிடம் கேட்டதுக்கு, 'என்னை பற்றி தெரியாது. உன்னை இங்கேயே தொலைச்சுப்புடுவேன், ஓடிடு'னு மிரட்டுறாரு.  எஸ்.பி.யிடம் புகார் கொடுத்திருக்கேன்’’ என்றார் சுரேஷ்குமார்.

நாம், அண்ணாநகரிலிருக்கும் அப்ரா டிராவல்ஸ்க்கு சென்றோம். பூட்டியிருந்தது. பக்கத்து கடைக்காரர்களிடம் விசாரித்தால் ‘எப்பாவதுதான் திறப்பார்கள்’ என்றனர். அப்துல் ஹக்கீமின் இரண்டு செல்போன் எண்களுக்கும் தொடர்பு கொண்டால், எடுக்க மறுக்கிறார்.

''துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள், இங்குள்ள அந்த நாட்டு தூதரகங்கள் மூலம் தங்கள் ஒர்க்கிங் விசாவை வெரிபிகேஷன் செய்து கொள்வதற்கு வசதியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழக அரசே வெளிநாட்டுக்கு ஆளெடுத்து அனுப்புகிறது. அதை விட்டு இதுபோன்ற சீட்டிங் ஏஜெண்டுகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்'' என்கிறார்கள் அரசு அதிகாரிகள். விகடன்.com

செ.சல்மான்
படம்: பா.காளிமுத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக