புதன், 4 மார்ச், 2015

ஜெயமோகன்:நிலம் கையக படுத்தும் சட்டமும் அண்ணா ஹாசாரேயும்

வடகிழக்குப் பயணத்தில் இருந்தபோது அண்ணா ஹசாரே பற்றிய செய்திகளை நாளிதழ்களில் வாசிக்க நேர்ந்தது. அவர் அரவிந்த் கேஜரிவாலுடன் மீண்டும் இணைந்ததும் சரி, அரசுக்கு எதிரான அவரது போராட்ட அறிவிப்பும் சரி பலவகையான எதிர்வினைகளை உருவாக்கியிருப்பதைக் கண்டேன்.
அரவிந்த் கேஜரிவால் தேர்தலில் வென்றதும் அண்ணா சென்று சேர்ந்துகொண்டார் என்றவகையான நக்கலை வாசித்தேன். அண்ணா தான் உருவாக்கிய ஊழலுக்கு எதிரான அரசியலியக்கம் அரசியல் கட்சியாக உருவானதை ஐயப்பட்டது மிக இயல்பானதே. ஏனென்றால் எப்போதுமே அவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டே செயல்பட்டு வருகிறார்
கேஜரிவாலின் வெற்றியை அவர் பாராட்டுவதும், அவரது நல்ல நோக்கங்கள் புரிந்தபின் அவர் ஆதரிப்பதிலும், இணைந்து போராடுவதிலும் ஆழமான முதிர்ச்சியே உள்ளது. ஆனால் அவர் இப்போதுகூட அரவிந்த் கேஜரிவாலின் கட்சி அரசியலுடன் நேரடியாக சம்பந்தப்பட மறுக்கிறார். அது அவரது செயல்முறையின் அடிப்படை இயல்பு. அப்படித்தான் இன்றுவரை அவர் சமூகப்பணியாற்றியிருக்கிறார். அந்த கவனம் போற்றற்குரியது.

பாரதிய ஜனதா அரசின் நிலம் கையகப்படுத்தல் கொள்கையை எதிர்த்து அண்ணா களமிறங்கியிருப்பதை ஒரு சிலர் விமர்சித்திருந்தனர். அவர் ஊழல் எதிர்ப்பைக் கைகழுவிவிட்டதாகச் சொல்லியிருந்தனர். சற்றே இந்திய யதார்த்தத்தை கூர்ந்து நோக்கும் எவருக்கும் அண்ணா மிகச்சரியான போராட்டத்தையே முன்னெடுத்திருப்பது தெரியும்
மேலைநாடுகளில் மக்களுக்கு சேமிப்பதற்குரிய பாதுகாப்பான வழிகள் பல உள்ளன. இந்தியாவில் பங்குச்சந்தை போன்றவற்றில் எந்த நடுத்தரவர்க்கமும் முதலீடு செய்யமுடியாது. அவை அரசும், வங்கிகளும், அரசதிகாரிகளும்,தரகர்களும், முதலாளிகளும் சேர்ந்து செய்யும் மாபெரும் மோசடிகள் என்பது ஹர்ஷத் மேத்தா காலம் முதல் அப்பட்டமாகி விட்ட ஒன்று
தொடர்ந்து பணவீக்கம் நிகழும் இந்தியாவில் வங்கிச்சேமிப்பு என்பது பணத்தை தூக்கி கிணற்றில்போடுவதுதான். தங்கம் விலையேறுவது குறைந்துவிட்டது. ஆகவே நிலத்தைத்தான் இந்திய மக்கள் முதன்மையான முதலீடாக நினைக்கிறார்கள். பெரும்பாலானவர்களின் வாழ்நாள் சேமிப்பே நிலத்தில்தான் உள்ளது. நிலத்தின் மதிப்பு தொடர்ந்து ஏறிக்கொண்டிருப்பது. சுதந்திரச் சந்தையால் தீர்மானிக்கப்படுவது.
ஆகவேதான் நிலம் கையகப்படுத்தல்என்ற சொல்லே இங்கே குலைநடுக்கத்தை அளிக்கிறது. இந்நிலையில் நிலத்தை அரசே பிடுங்கி தொழிலதிபர்களுக்கு அளிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டம்போல சென்ற ஐம்பதாண்டுக் காலத்தில் வந்த மிகப்பெரிய சுரண்டல் -மோசடித் திட்டம் பிறிதில்லை.
இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நான் பலியபாலின் பாடங்கள் என்ற சிறு நூலை மொழியாக்கம் செய்தேன். ஒரிசாவில் பலியபால் என்ற ஊரில் ஏவுகணைத்தளம் அமைப்பதற்காக அரசு நிலங்களை பிடுங்கியதற்கு எதிராக அம்மக்கள் நிகழ்த்திய போராட்டத்தைப்பற்றிய நூல் அது. கோவை ஞானி அதை வெளியிட்டார்
அன்றுமுதல் இந்த நிலம் கையகப்படுத்தல் என்பதை கூர்ந்து கவ்னித்து வருகிறேன். அவ்வப்போது எழுதியும் வருகிறேன். பலியபாலின் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களின் வளமான நிலத்திற்கு அரசே நிர்ணயித்த மிகமிகக் குறைவான விலையைக்கூட அவர்களில் கணிசமானவர்கள் பெற முடியவில்லை. அந்தப்பணம் இழுத்தடிக்கப்பட்டது. அதிகாரவர்க்கத்தின் ஊழலுக்கே அதில் பெரும்பகுதி சென்றது.
இந்தியாவில் அரசின் பெருந்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தல்கள் எல்லாமே உண்மையில் ஏழைகளை அடித்துப்பறித்தல்கள்தான். நிலம் இங்கே சுதந்திரச் சந்தையில் பெரிய மதிப்பு உடையது என அனைவருக்கும் தெரியும். அந்த உண்மையான மதிப்பை விட பலமடங்கு குறைவாக அரசு விலை நிர்ணயிக்கிறது. அதாவது கடைசியாக அந்த பிராந்தியத்தில் பதிவுசெய்யப்பட்ட விலையில் இருந்து ஒரு பகுதியை அரசு விலையாகத் தீர்மானிக்கிறது
அந்தப்பணத்தைக்கூட அரசு அதிகாரிகளிடம் இருந்து அவர்களை அனைத்துவகை ஆவணங்களாலும் முழுமையாக நிறைவடையச்செய்து மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு பல்லாண்டுகள் காத்திருக்க்வேண்டும். அலுவலகங்கள் தோறும் அலையவேண்டும். ஒவ்வ்வொரு ஆவணங்களுக்கும் லஞ்சம் கொடுக்கவேண்டும். மொத்தமாக தொகையில் 25 சதவீதம் வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதே உண்மையான நிலைமை
இந்நிலையில் தனியார் முதலாளிகளுக்காகவும் அரசே நிலம் கையகப்படுத்துவதென்பது மக்கள் மீதான ராணுவத்தாக்குதலுக்கு நிகரானது என்றே சொல்லவேண்டும். அந்த நிலத்தை தரைமட்ட விலைக்கு தொழிலதிபர்கள் பெற்றுக்கொள்வார்கள், அதைக்கொண்டு கோடிக்கணக்கான சொத்துக்களை உருவாக்குவார்கள் என்றால் அதைவிட என்ன சுரண்டலும் அநீதியும் இங்கே இருக்கமுடியும்? சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய கறுப்புச்சட்டம் இதுவே.முழுமையாகத் தோற்கடிக்கப்படவேண்டியது இது.
ஏனென்றால் இதன் தொலைதூர விளைவுகள் இன்னமும் ஆபத்தானவை.இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயம் நலிந்துவருகிறது. இயந்திரங்களைக்கொண்டு செய்யும் பெரிய அளவிலான விவசாயம் வந்துகொண்டிருக்கிறது. விவசாயம் கார்ப்பரேட்டுகளால் செய்யப்படுவதுதான் எதிர்காலம். இச்சட்டம் வேளாண்நிலங்களை தனியார் நிறுவனங்கள் அரசதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டு அடித்து பிடுங்கிக்கொள்ளவே வழிவகுக்கும்
இந்தச் சட்டம் அனைத்து அதிகாரங்களையும் அதிகாரிகளிடம் அளித்துவிடுகிறது. நிலத்தை தேர்வு செய்து முடிவெடுத்தல், விலை நிர்ணயம் செய்தல் அனைத்தும் அவர்களே. அதிகாரிகளுக்கு இந்தியாவில் அளிக்கப்படும் எந்த அதிகாரமும் ஊழலையே உருவாக்கும். அண்ணா போராடுவது அதற்கு எதிராகத்தான்
அப்படியானால் என்ன செய்யலாம், தொழில்கள் தேவையல்லவா என்றார் ஒருவர். தொழில்நிறுவனங்கள் பிற மூலப்பொருட்களை எப்படி வாங்குகின்றன? நீரை, மின்சாரத்தை, உழைப்பை, நிர்வாகிகளை? சந்தையில் பேரம்பேசித்தானே? அப்படி நிலத்தையும் வாங்கட்டுமே. புனிதமான சுதந்திரச் சந்தை என ஒருபக்கம் கூச்சல். மறுபக்கம் அரசை முன்னிறுத்தி நேரடிக்கொள்ளை, இதைத்தான் இங்குள்ள கார்ப்பரேட் அமைப்புகள் இன்று செய்துகொண்டிருக்கின்றன
இவை முறையாக வரிகட்டுவதில்லை. தொழிலாளர் சட்டங்களை மதிப்பதில்லை. அரசுகளுக்கான நிலுவை கோடிக்கணக்கில். எந்த வகையான சூழியல் பாதுகாப்புக நட்வடிக்கைளையும் செய்வதில்லை. இவை வளர்வதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. சற்றேனும் இவர்களின் பணம் மக்களுக்கு வருமென்றால் மக்கள் அவற்றுக்கு பொருட்களை விற்பதன் மூலம்தான். நிலமும் அப்படி விற்கப்படட்டுமே.
நிலத்தைப்பிடுங்கி முதலாளிகளுக்கு கொடுப்பதை நியாயப்படுத்திய ஒருவரிடம் சொன்னேன். தொழில்வளர்ச்சிக்காக அரசு அத்தனை நிர்வாகவியல் படித்தவர்களும் பத்துவருடம் அரசே நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு இந்த தொழில்நிறுவனங்களில் வேலைசெய்யவேண்டுமென ஆணையிட்டால் செய்வீர்களா? மாட்டீர்கள். அமெரிக்காவுக்கு ஓடிப்போவீர்கள். ஆனால் விவசாயி நிலத்தைக்கொடுக்கவேண்டும் இல்லையா?
அண்ணாவின் போராட்டம் தான் இந்த அரசுக்கு எதிரான முதன்மை விசை. காங்கிரஸ் ஒருபோதும் உண்மையில் இப்போராட்டத்தை முன்னெடுக்காது. jeyamohan.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக